Homeஉடல் நலம்இளமையின் முதுமைகடிவாளம் உங்கள் கையில் வர வழி! | பத்ம ஶ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன்

கடிவாளம் உங்கள் கையில் வர வழி! | பத்ம ஶ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன்

என்றும் இளமையுடன் வாழவும் முடியாது, மரணமில்லாப் பெருவாழ்வும் சாத்தியம் ஆகாது. மகான்கள் பலர் இதுபற்றிச் சிந்தித்துப் பார்த்துவிட்டனர். இப்போது, ‘மனிதர்களின் ஆயுளை நீட்டிப்பது எப்படி’ என்ற ஆராய்ச்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. என்றாலும், முதுமையைத் தடுக்க வழி தெரியவில்லை.

முதுமைப் பருவத்தை மனிதகுலம் மட்டுமின்றி ஒவ்வொரு உயிரினமும் ஒரு நாள் சந்தித்தே ஆக வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது. அது இயற்கையின் நியதி. ‘முதுமை வேதனையும் வருத்தமும் தருமா’ என்றால், இல்லவே இல்லை. உறுதியாய் இல்லை. உடல் முதுமை அடையும்போது உள்ளத்தை இளமையாய் வைத்துக்கொண்டால் போதும்… வேதனைக் கோடுகள் முகத்தில் படியாது. வெறுமை நிழலும் வாழ்க்கையில் படியாது.

முதுமையில் நோய்களே பலருக்கு வருத்தம் ஏற்படுத்தும். முதுமையில் நோய்கள் வர, சில காரணங்கள் உண்டு.

பாரம்பரியம்: நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தத்தில் அதிக கொழுப்பு, உடல்பருமன், சில புற்றுநோய்கள் பரம்பரையாக வர வாய்ப்பு உண்டு.

பழக்கவழக்கங்கள்: இளமையிலிருந்து நல்ல பழக்க வழக்கங்களுடன் ஒருவர் வாழ்ந்து வந்தால், முதுமை அடையும்போது அவரை நோய்கள் நெருங்குவதில்லை. தினமும் உடற்பயிற்சி, சத்தான உணவு, புகை மற்றும் மது என எந்தப் போதைக்கும் அடிமை ஆகாமல் இருப்பது, உடல் எடையைச் சீராக வைத்திருப்பது, தினமும் 7 மணி நேரம் உறங்குவது என இருந்தால், எந்தக் கவலையும் இல்லை. ஆரோக்கியமான இளைஞரே ஆரோக்கியமான முதியவர் ஆகிறார்.

வாழும் சூழல்: நல்ல அமைதியான சூழ்நிலை, சுத்தமான காற்று மற்றும் சுகாதாரமான குடிநீர் இவை அனைத்தும் அமைந்த இடத்தில் ஒருவர் வாழ்ந்து வந்தால், முதுமையில் அவரை எந்த நோயும் நெருங்குவதில்லை.

முதுமை என்பது பல நோய்களின் இருப்பிடமாகப் பலருக்கு மாறுகிறது. வயது ஆக ஆகப் பல காரணங்களால் பல நோய்கள் வர வாய்ப்பு அதிகமாகிறது. அந்தக் காரணங்கள்:

* முதுமையின் விளைவால் வரும் தொல்லைகள்

கண் புரை, காது கேளாமை, பல் விழுதல், சரும வறட்சி, சருமத்தின் நிறம் மாறுதல், முடி நரைத்தல், கை, கால் நடுக்கம், மலச்சிக்கல் ஆகியவை முதுமையால் வரும் தொல்லைகள். ஆனால், இந்த மாற்றங்கள் ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை அதிகமாகப் பாதிக்காது.

கண் புரை நோய் முதுமையின் விளைவே. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்குத் தக்க அறுவை சிகிச்சை செய்துகொள்வதே சிறந்த வழி.

காது கேளாமை, முதுமையின் விளைவாகவும், வேறுசில காரணங்களாலும் மறைந்து தாக்கும் தொல்லையாகும். இதை அலட்சியப்படுத்தாமல் காது கேட்கும் கருவியைப் பொருத்திக்கொள்ளுங்கள். இல்லையென்றால் காது கேளாமையினால் மனச்சோர்வு, மறதி நோய் போன்றவை வரலாம். இல்லாவிட்டால் தனிமையாக ஒதுங்கி நிம்மதி இழந்துவிடுவீர்கள்.
பல் போனால் முகப் பொலிவு போவதோடு, சத்துணவு சாப்பிடுவதும் குறையும். அத்துடன் பேச்சுத் திறனும் குறையும். ஆகையால் பல் இல்லாத முதியவர்கள் கண்டிப்பாகச் செயற்கைப் பல் பொருத்திக்கொள்ள வேண்டும்.

முதியவர்களை அதிகம் பாதிக்கும் சரும நோய்களில், தோல் வறட்சி மிக முக்கியமானது. குளிப்பதற்கு முன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாரஃபின் எண்ணெய் தேய்த்துக்கொண்டு பின் குளிக்கலாம். வீரியம் உள்ள சோப்புக்களைத் தவிர்க்கவும். போதுமான தண்ணீர் அருந்த வேண்டும். நமைச்சல் அதிகமாக இருந்தால், அதற்கு ஏற்ற மாத்திரையை டாக்டரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நரைமுடி, வயதானவர்களுக்கு இயற்கை கொடுத்த பரிசு. இதன் மூலம் சமுதாயத்தில் உங்களின் மதிப்பு உயரும். இதை மறைக்க, முடிச் சாயம் பூசுவதைத் தவிர்க்கவும். இதன் பக்கவிளைவுகள் ஒவ்வாமை மற்றும் புற்றுநோய். இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்.

கை, கால் நடுக்கம் முதுமையில் இக்கட்டான நிலையை ஏற்படுத்தக்கூடிய தொல்லை. மற்றவர்கள் முன்னிலையில்தான் இந்த நடுக்கம் ‘நான் இருக்கிறேன்’ என்பதை பறைசாற்றும். இது முதுமையின் விளைவாகவும் இருக்கலாம். அல்லது உதறுவாத நோயின் ஆரம்ப அறிகுறியாகக்கூட இருக்கலாம். காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகி நடுக்கத்தை விரட்டி அடியுங்கள்.

* நடுத்தர வயதில் வரும் நோய்கள் முதுமையிலும் தொடரும்
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன், மூட்டு வலி, மாரடைப்பு, குடல்புண், ஆஸ்துமா போன்றவை நடுத்தர வயதில் தாக்கி, முதுமையிலும் வாட்டும். இவற்றைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு வாழப் பழகுங்கள்.

* முதுமையில் தோன்றும் நோய்கள்
அறிவுத்திறன் வீழ்ச்சி, எலும்பு வலிமை இழத்தல், பார்க்கின்சன்ஸ் என்கிற உதறுவாதம், புராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் உள்ளிட்ட சில புற்றுநோய்கள், சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலை, நிலைதடுமாறிக் கீழே விழுதல் போன்ற பல பிரச்னைகள் முதுமையில் தோன்றலாம்.

‘முதுமை என்பது நோய்களின் மேய்ச்சல் காடு’ என்பது ஓரளவுக்கு உண்மையே. அந்த மேய்ச்சல் காட்டை அழகான பூங்காவாக மாற்றி, முதுமையிலும் நலமாக வாழ முடியும். அதற்கு நடுத்தர வயதிலிருந்தே திட்டமிட வேண்டும்.

‘இந்த வயசில் இதையெல்லாம் சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது’ என்ற அலட்சியம் தவறு. இந்த வயதில்தான் ஆரோக்கியமாகச் சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாக்க வேண்டும்.

Woman photo created by freepik – www.freepik.com

மருந்தும் உணவும் முக்கியம்!
பொதுவாக ஏதாவது தொற்றுநோய் ஒரு பகுதியில் பரவினால், அங்கிருக்கும் குழந்தைகளையும் முதியோரையும்தான் கவனமாக இருக்கச் சொல்வார்கள். காரணம், இந்த இருவருக்குமே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான். முதுமையில் பலருக்கும் ஆரோக்கிய உணவின்மீது அலட்சியம் வந்துவிடும். ‘இந்த வயசில் இதையெல்லாம் சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது’ என்ற அலட்சியம் தவறு. இந்த வயதில்தான் ஆரோக்கியமாகச் சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாக்க வேண்டும்.

வீட்டில் மீந்து போன பழைய உணவுகளை முதியோருக்குக் கொடுக்கும் குடும்பத்தினர், அதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளைப் போலவே முதியோரையும் அக்கறையாகக் கவனித்து ஆரோக்கிய உணவு தர வேண்டும்.

(மகிழ்ச்சியைத் தொடர்வோம்…)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read