அன்புள்ள உங்களுக்கு…
வணக்கம்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஒருநாள் காலையில் அண்ணா நகர் கோபுரப் பூங்காவுக்கு நடைப்பயிற்சிக்காகச் சென்றிருந்தேன். கடந்த ஆண்டு பெய்த கடும் மழையால் பூங்காவில் உள்ள செடிகள் அனைத்தும் மரங்களாக வானுயர வளர்ந்து பூத்துக் குலுங்குகின்றன. இளையராஜாவின் இன்னிசை, காற்றில் தவழ்ந்துவர ஒரு சுகமான சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது எனக்கு கிடைத்த ஒருசில தகவல்கள்:
- மூத்தோர்களின் எண்ணிக்கை சற்றுக் குறைவாகவே இருந்தது.
- மூப்பின் காரணமாகவும், நோயின் விளைவாகவும் சில முதியோர்களால் நடைப்பயிற்சிக்கு வர இயலவில்லை.
- ஒரு சிலர் கொரோனா நோய்த் தொற்றால் மரணம் அடைந்துவிட்டார்கள். இந்தச் செய்தி என் மனதைக் கனக்கச் செய்தது.
முன்பெல்லாம் பூங்காவுக்கு வருவோர் அனைவரும் சிறு சிறு குழுக்களாக மகிழ்ச்சியுடன் உரையாடுவதைக் காண்பேன். இப்போது அதற்கு மாறாகத் தனித்தனியாகவே நடைப்பயிற்சிக்கு வருவது அதிகரித்திருப்பதைக் காண முடிந்தது. அவர்களும் செல்போனில் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும், சண்டையிட்டுக் கத்திக்கொண்டும் தனி ஆவர்த்தனம் நடத்துவதைக் கண்டு மனம் சற்று வேதனை அடைந்தது.
தினமும் பலர் வந்துபோகும் இப்பூங்காவில் என் மனதைத் தொட்ட தம்பதியர் (40- 45 வயதே இருக்கும்) இருவரும் பேசாமல் பூங்காவில் நுழைந்து, இருக்கையில் எதிரும் புதிருமாக அமர்வார்கள். இருவரும் செல்போனை எடுத்து தனித்தனியாகச் சுமார் அரைமணி நேரம் பேசிய பின்னர் செல்போனை அணைத்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டுவிடுவார்கள். அங்கிருந்த நேரத்தில் ஒருமுறை கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்பதுதான் முக்கியம்.
தினம் தினம் நடைபெறும் அன்றாட வேலைகளுக்கெல்லாம் விடைகொடுத்துவிட்டு உடலும் மனமும் சற்று நேரம் இயற்கையோடு ஒன்றி உறவாடத்தானே பூங்காவுக்கு செல்கிறோம்? அப்போதும் செல்போனுக்கு அடிமையாகி, இயற்கையை அனுபவிக்க முடியாமல் போவது என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
விஞ்ஞான முன்னேற்றம் மூலம் செல்போனைக் கண்டுபிடித்தது. நமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காகத்தானே? நடைமுறையில் என்ன நடக்கிறது? பலர் செல்போனுக்கு அடிமையாகிவிட்டார்கள். குறிப்பாகக் குழந்தைகளும் இளைய சமுதாயத்தினரும். ஒருவரைத் தண்டிக்க வேண்டுமென்றால், ஒருவார காலத்துக்கு அவர் செல்போனை உபயோகிக்கக்கூடாது என்று கூறினால் போதும்… அதுவே அவருக்கு பெரிய தண்டனை!

சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் செல்போனில் தொடர்ச்சியாக அதிக நேரம் பேசுபவர்களுக்கு மூளையில் புற்றுநோய்க் கட்டி உருவாகும் அபாயம் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்போனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சால் தலைவலி, காது கேளாமை, தூக்கமின்மை , ஞாபக மறதி, மனச்சோர்வு, மூட்டுவலி, விந்தணு பாதிப்பு போன்ற விளைவுகள் ஏற்படும் என்றும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இப்போது மக்கள் – முக்கியமாக இளைய தலைமுறையினர், மது மற்றும் போதைப் பொருட்களில் அடிமையாவதைவிட செல்போனுக்குத்தான் அதிக அளவில் அடிமையாகி வருகிறார்கள். மது மற்றும் போதைப்பொருட்களிலிருந்து விடுபட ’டி- அடிக்சன் மையம்’ என்ற பெயரில் மனநல ஆலோசனை மையம் இருக்கிறதே… அதைப் போலவே செல்போனில் இருந்து விடுபட நிறைய மனநல ஆலோசனை மையங்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விரைவில் தொடங்க வேண்டியிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அது அவசியம்தானா? காசு கொடுத்து மனம் மற்றும் உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்வது எந்தவிதத்தில் நியாயமாகும்?
அதனால், வருமுன் காப்பது போல, இன்றைய தினத்திலிருந்தே செல்போனை அவசியமின்றி உபயோகிக்க வேண்டாம். இரவு 8 மணிக்குப் பிறகு செல்போனை நாட வேண்டாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் உறவினர்களிடம் வேலையாட்களிடமும் உரையாடி, பொழுதை மகிழ்ச்சியாகக் கழியுங்கள். செல்போனைக் குறைவாக உபயோகித்து நிறைவான வாழ்க்கையை வாழ முயற்சிப்போம்!
அன்புடன்
டாக்டர் வி.எஸ்.நடராஜன்