Homeமன நலம்பொழுதுபோக்குஉங்கள் வீட்டில் ஒரு தோட்டமும் ஒரு நூலகமும் இருந்தால் போதும்!

உங்கள் வீட்டில் ஒரு தோட்டமும் ஒரு நூலகமும் இருந்தால் போதும்!

இயற்கையின் அழகில் இன்பம் காண்போம்! | Home Gardening

பூமியின் சிரிப்பைப் பூக்களில்தானே காணமுடியும்? தாவரங்களே மனிதனுக்கு முதன்மையான உணவாகவும் மருந்தாகவும் விளங்குகின்றன.

உங்கள் வீட்டில் ஒரு தோட்டமும் ஒரு நூலகமும் இருந்தால், உங்களிடம் எல்லாமே இருக்கிறது என்றே பொருள். 

அதன் பிறகு மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் பிரவாகம் எடுக்கும் அற்புதத் தலமாகவே உங்கள் இல்லம் திகழும். அப்படியொரு அருமையான வாய்ப்புக்கான முதல்படியாக, உங்கள் அருகில் ‘பூங்காற்று.காம்’ என்கிற இந்தத் தகவல் தோட்டம் அமர்ந்திருக்கிறது. இனி வீட்டுத் தோட்டத்தை உருவாக்க மனத்தடை தவிர, வேறு எந்தத் தடையும் இருக்கப்போவதில்லை!

சிரிக்கும் பூக்களில் சிந்தனை மலரட்டும்!

அதிகாலை எழுந்தவுடன் உங்கள் தோட்டத்தில் சில நிமிடங்கள் வலம் வந்து பாருங்கள். ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு உயிர். அவை எல்லாம் உங்களைப் பார்த்துச் சிரிக்கும்… சிலிர்க்கும்… செடிகளை நேசிக்கிற ஒவ்வொருவருடனும் அவை உரையாடவும் செய்யும். இந்த பேரின்பத்தை அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே அறியமுடியும். 

பூச்சிக்கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்கள் பயன்படுத்தாமலே, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், அருமையான பல தாவரங்களை, நம் வீட்டிலேயே வளர்க்கலாம். அதிகம் செலவில்லை… அதீத உழைப்பும் தேவையில்லை. நிறைய இடமும் அவசியமில்லை… வீட்டின் பால்கனியில், படிக்கட்டுகளில், மொட்டை மாடியில், சுற்றி  இருக்கும் காலி இடங்களில் என எங்கும் வளர்க்கத்தக்கவை இந்த அழகுச் செடிகள். அழகு மட்டுமல்ல… ஒவ்வொருவருக்கும் பயன் தரும் மருத்துவக் குணங்கள் நிறைந்த செடிகளும் ஏராளம் உண்டு.

உங்கள் இல்லத்திலும் ஒரு தோட்டம் உயிர் பெறட்டும்!

நகரங்களில் கீரை என்ற பெயரில் வாடி வதங்கிப்போன ஒரு பச்சைக் கட்டை தலையில் கட்டியதை அறியாமல், வீட்டுக்கு வந்து கழுவியதும் அதுவும் சாயம் போகும் கெமிக்கல் உலகில் வாழ்கிறோம். 

எல்லா விஷயங்களுக்கும் மாற்று இருக்கும் இவ்வுலகில் இதற்கு இல்லாமலா போகும்? அபார்ட்மென்ட்டோ தனிவீடோ – ஒரு கையளவு இடம் இருந்தால் கூட அதில் அருமையாக அழகுத்தோட்டம் அமைக்கலாம். கொத்தமல்லி முதல் ரோஜா வரை, தக்காளி முதல் தர்பூசணி வரை நாமே வளர்க்கலாம்.

கிச்சன் கார்டன் அமைப்பது எப்படி?

கொஞ்சம் ஆர்வம்… கொஞ்சம் முயற்சி… கொஞ்சம் திட்டமிடல்… அவ்வளவுதான் தேவை! என்னதான் சூப்பர் மார்க்கெட்டில் கிலோ கணக்கில் காய்கள் வாங்கினாலும் நாமே வளர்த்த இரண்டு தக்காளியின் சுவை வேறு எதிலும் வராதே. அது மட்டுமல்ல… தோட்டம் என்பது மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய உதவும் சூப்பர் விஷயம்! 

கிச்சன் கார்டன் என்பது பிளாஸ்டிக் கப்புகளிலும் தண்ணீர் பாட்டில்களிலும் ஏதோ ஒரு செடி வளர்த்து கொசு உற்பத்தியை பெருக்குவதல்ல. உண்மையில் பெட் பாட்டில்களை வேறு விதமாக பயன்படுத்த முடியும். பாரம்பரிய முறையில் உரம் முதல் அனைத்தும் நாமே தயாரிக்க முடியும். அதிக நேரமோ பணமோ தேவையில்லை. அபார்ட்மென்ட் வாசிகள் மொட்டை மாடியை பயன்படுத்தலாம். குழுவாக இணைந்து தினம் ஒருவர் என்ற முறையில் கூட பராமரிக்கலாம். குழந்தைகளையும் ஈடுபடுத்தலாம்.

என்னென்ன தேவை?

கிச்சன் கார்டனில் அடிப்படைத் தேவைகள் மிகக் குறைவே. மண் தொட்டிகள் எப்போதுமே நல்லது. மண்ணுக்கு நீரை உறிஞ்சி குளிர்ச்சியை தக்க வைக்கும் தன்மை உள்ளதால் செடிகளின் பசுமைக்கு அது கேரண்டி. மண் தொட்டிகளின் கலரில் பிளாஸ்டிக் தட்டுகள் கிடைக்கின்றன. அதன் மேல் தொட்டி வைத்தால் தரை பாழாகாது. மொட்டை மாடிக்கு ஏற்ற சிமென்ட் தொட்டி, மண் தொட்டி, மற்றும் ‘யுவி ட்ரீட்’ செய்த செடி வளர்க்கும் பைகள் கிடைக்கின்றன. தேங்காய் மட்டை, மண், மண்புழு உரம், மூடியில் துளை இட்ட சிறிய பெட் பாட்டில், விதை போன்றவற்றை ரெடி செய்த பிறகு, விதைகளை நர்சரியில் வாங்கலாம்.

அவ்வளவுதானே…

இன்றே நம் கனவுத் தோட்டத்துக்கு உயிர்கொடுக்கும் முயற்சிகளைத் தொடங்குவோம், வாருங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read