‘தொண்டை வலி’ இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கொரோனாக் காலமும், அதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுமே!
ஆனால் அதைப்போன்றே நம்மையும் அறியாமல் நம் தொண்டையைப் பாதிக்கும் தொண்டைப் பிரச்சனைகள் பல உள்ளன! அதனை இக்கட்டுரையில் காண்போம்.
நமக்காக இதனைத் தொகுத்து வழங்கியவர் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் திரு. வித்யாதரன் அவர்கள்

தொண்டை வலியும், காரணங்களும்:
‘தொண்டை வலி’ என்று பொதுவாகக் கூறப்படும் நோய்த் தொற்றுக்குக் காரணங்களாக வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை உள்ளன.
தொண்டையில் ஏற்படும் வலி, அரிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், கரகரப்புத் தன்மை போன்ற பல அறிகுறிகளை வைத்து அது வைரஸ் தொற்றா? பாக்டீரியாத் தொற்றா? அல்லது பூஞ்சைத் தொற்றா? என்பதைக் கண்டறியலாம்!
வைரஸின் பரவல் மற்றும் பாதிப்பு:
வைரஸானது காற்றில் மிதக்கும் தன்மை கொண்டது. எனவே காற்றின் மூலமாக இஃது எளிதில் மனிதர்களை அடைகிறது.
இவ்வாறு மனிதர்களை அடையும் வைரஸானது சுவாசத்தின் வழியாகத் தொண்டைப் பகுதியைச் சென்றடையும் போது, மனிதர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளப் பட்சத்தில் வைரஸ் அதன் தன்மைக்கேற்பத் தொற்றைத் தொண்டைப் பகுதியில் ஏற்படுத்துகிறது.
பல வகையான வைரஸ்களில் நீரில் வாழும் வைரஸ்களும் உண்டு. எனவே நீரின் மூலமும் சில வகையான வைரஸ்கள் மனிதர்களின் தொண்டைப் பகுதியை அடைகின்றன.
READ ALSO: உங்களது குரலை மோசமாக பாதிக்கும் காரணங்கள்!
சில வகையான வைரஸ்கள் குளிர் மற்றும் மழைக்காலங்களில் வாழும் தன்மையுடையது. ஆதலால் அவ்வகையான வைரஸ்களால் ஏற்படும் நோய்த்தொற்று அக்காலங்களில் அதிகமாக இருக்கும்.
பாக்டீரியாவின் பரவல் மற்றும் பாதிப்பு:
பாக்டீரியாக் காற்று, நீர் மற்றும் தொடுதல் மூலமாகவும் பரவும் தன்மை உடையது. பாக்டீரியாத் தொற்றானது வைரஸ் தொற்றைக் காட்டினும் அதீதக் காய்ச்சலையும், அதீத உடல் வலியையும் தரக்கூடியது.
பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய சளியானது சற்று மஞ்சள் நிறத்திலும், மஞ்சளுடன் பச்சை நிறம் கலந்த நிறத்தில் காணப்படும்!

பூஞ்சையின் பரவல் மற்றும் பாதிப்பு:
பூஞ்சையின் பரவல் மற்றும் தாக்குதல் பெரும்பாலும் வயது முதியவர்களுக்கே நிகழ்கிறது. காரணம் அவர்களின் நோய் எதிர்ப்புத் திறன் குறைபாடே.
இக்காரணத்தால் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ள மற்ற வயதினரையும் பூஞ்சைத் தொற்றுத் தாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஒரு நாளைக்கு 900 மில்லி லிட்டர் உமிழ் நீரை நமது நாவானது சுரக்க வேண்டும்.
இச்செயலானது வயது முதிர்வின் காரணமாக மூத்தவர்களுக்கு நிகழாமல் போகிறது. எனவே வறட்சி ஏற்பட்டும் இடத்தில் வறட்சியின் காரணமாகப் பூஞ்சைப் பரவலும், தாக்குதலும் அங்கே எளிதாக நிகழ்கின்றன.
எனவே நா வறட்சி ஏற்படும் நபர்களுக்கும் இத்தொற்று நிகழும். மேலும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்காக எடுத்துக் கொள்ளப்படும் ‘ஸ்டீராய்டு’ மருந்துகளும் இயல்பாக நா மற்றும் தொண்டையில் வறட்சியை ஏற்படுத்தக் கூடியது.
எனவே இத்தகைய மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும் பூஞ்சைத் தாக்குதலானது இயல்பாக, எளிதில் நிகழ்கிறது.
கண்டறியும் முறைகளும், சிகிச்சைகளும்:
தொண்டை வலி, காய்ச்சல், அதீதத் தொண்டை வலி, அதீதக் காய்ச்சல், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவையே வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றின் அறிகுறிகள்.

ஆனால் இஃது எவ்வகையான தொற்று என்பதைக் கண்டறியப் பல்வேறு ஆய்வுகள் உள்ளன. அதன் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
இப்படி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் தொற்றின் வீரியம் குறைவாக உள்ளப் பட்சத்தில் வீட்டு முறை வைத்தியமாக வெதுவெதுப்பான நீரில் உப்பு அல்லது மஞ்சள் கலந்து வாய்க் கொப்பளிக்க நல்ல தீர்வினை இது தரும்.
மேலும் தொற்று ஏற்பட்டுள்ள நாட்களில் பிற நாட்களைக் காட்டிலும் அதிகமாக நீர், சூப் அல்லது இரசம் போன்ற திரவங்களை அருந்துவது முக்கியமானது.
அது வெதுவெதுப்பாக இருந்தால் மேலும் சாலச்சிறந்தது. இவ்வாறு அருந்தும் திரவத்தால் நோய்க் கிருமிகள் அவ்விடத்தை விட்டு நீக்கப்பட்டு, நோய்த் தொற்றுக் குறையும்!
இதற்கு மாறாகச் சில வேளைகளில் அதீத நோய்த் தொற்று உள்ளவர்களுக்குத் தொண்டையின் அடிப்பகுதியில் சளியானது சீஷ் போன்று கட்டிக் கொள்ளும். அவ்வேலைகளில் நோயாளியால் இயல்பாகச் சுவாசிக்க இயலாது, மல்லார்ந்த நிலையில் இயல்பாகப் படுக்க இயலாது.
எனவே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை மூலம் அல்லது உயர் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட மருந்துகளின் மூலம் அச்சளியானது நீக்கப்படுகிறது.
குழந்தைகளைத் தாக்கும் தொண்டைத் தொற்று:
குழந்தைகளைப் பொதுவாகத் தாக்கும் தொண்டைத் தொற்றுகளாகத் தொண்டையில் சதை வளர்தல், தொண்டையில் வீக்கம், அதன் காரணமாகக் குரலில் மாற்றம் போன்றவை நிகழ்கின்றன.
READ ALSO: ஜனவரி மாதம் ஜாக்கிரதையாக இருங்கள்
விழிப்புணர்வு:
தொண்டையில் தொற்று ஏற்படுவது இயல்பான ஒன்றாக இருப்பினும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாகப் பிரச்சனை நீடிப்பின் உடனடியாகக் குடும்ப மருத்துவரையோ அல்லது காது, மூக்கு, தொண்டை மருத்துவரையோ அணுகி முறையான சிகிச்சைப் பெறுவதே நல்ல விழிப்புணர்விற்கு அடையாளம்.
‘ஒன்றை இழக்கும் போதே அதன் மதிப்புத் தெரிகிறது’ என்பது போலத் தொண்டையும் நமது பிரதான உறுப்புகளில் ஒன்று என்பது அதில் பாதிப்பு ஏற்படும் போதே அதன் அத்தியாவசியமும் நமக்குப் புரிகிறது!
எனவே தொண்டையையும் நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாப்போம்! விழிப்போடு செயல்படுவோம்!! மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுவோம்!!!
கட்டுரையாளர்
