நாம் ஒருவரை ஒருவர் கண்டவுடன் முதலில் நோக்குவது முகத்தையே. அந்த முகம் நிமிர்ந்து நிற்கும் போதே நம்முடைய தனித்துவம் தெரியும்.
எந்தத் தவறும் இழைக்காமல் மரபணுப் பாதிப்பால் முகத்தில் பிறவியிலேயே ஏற்பட்டு இருக்கும் உருவமாற்றமே வித்தியாசமாய் நோக்கப்படும் போது நம் வாழ்க்கைமுறை பழக்க வழக்கத் தவறால் ஏற்படும் உருவமாற்றம் எவ்வாறு நோக்கப்படும்?
இப்படியான தவற்றால் நிகழும் உருவமாற்றத் தோற்றங்களுக்கு ‘தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்’ காரணமாய் அமைகிறது என்பது வருத்தமான தகவலே! அத்தகைய நோயினைப் பற்றி விளக்குகிறார் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் திரு. வித்யாதரன் அவர்கள்.
தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்க்கான உறுப்புகள்
‘தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்’ ஏற்படும் உடலின் உறுப்புகளாக மூளைக்கு அடியில் மூக்கின் பின்புறம் தொடங்கிக் கழுத்து வரைக்கும்,
மூக்கு, வாய், மேல் தொண்டை, கீழ் தொண்டை,
நாக்கின் பின்புறம் இருக்கும் விழுங்கும் பகுதி, தைராய்டுச் சுரப்பி, குரல் வலை, கழுத்தின் இருபுறமும் இருக்கும் இரத்தக் குழல்கள் (டியூரா முதல் ப்யூரா வரை) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
READ ALSO: மலச்சிக்கல் – காரணமும், மருந்தின்றி போக்கும் வழியும்!
புற்றுநோயின் காரணமும், அறிகுறிகளும்
தலை மற்றும் கழுத்துப் புற்றுநோயே இந்தியாவில் பரவலாக உள்ளப் புற்றுநோய் ஆகும்! இது 30 சதவீதம் உள்ளது!! இதற்கு முக்கியக் காரணம் புகையிலையே.
புகையிலையைப் புகைத்தல், மெல்லுதல், அடக்கி வைத்தல் என்று எந்த வடிவில் பயன்படுத்தினாலும் நோய்த் தாக்கம் உறுதியே. புகையிலையால் தோன்றும் இந்தப் புற்றுநோயின் அறிகுறிகளாகக் கீழ்க்கண்டவை உள்ளன.
வாய் மற்றும் அதன் பிற உறுப்புகளில் ஏற்படும் புண்ணானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்கள் குணமாகாமல் தொடர்ந்து இருத்தல், புண் பெரிதாகப் பரவுதல், மூக்கில் இரத்தக் கசிவு, நிலையான மூக்கடைப்பு,
சிலவேளைகளில் குறட்டை, கேட்கும் திறன் குறைதல், மூச்சு விடுவதில் சிரமம், குரல் மாற்றம், விழுங்குவதில் சிரமம், புண் மட்டும் அல்லாது இப்பகுதிகளில் தோன்றும் கட்டிகளும் இதில் அடங்கும்.
நோய்க் கண்டறியும் முறைகளும், சிகிச்சை முறைகளும்
மிகவும் எளிமையாய் டார்ச் ஒளி மூலமே இவ்வகையான புற்றுநோய்கள் கண்டறியப்படுகின்றன. கண்டறிய முடியாத பகுதிகளில் நோய்க்கான அறிகுறிகள் இருப்பின் சி.டி (CT) மற்றும் எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் உதவியுடன் நோயானது கண்டறியப்படுகிறது.
பிறகு அப்பகுதியில் இருந்து சில திசுக்கள் அல்லது திரவம் சேகரிக்கப்பட்டுப் பயாப்ஸி (Biopsy) பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பரிசோதனையின் முடிவில் புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு மூன்று விதமான மருத்துவ முறைகள் பின்பற்றப்படுகின்றன.
அவை முறையே அறுவைச் சிகிச்சை (Surgery), கதிர்வீச்சுச் சிகிச்சை (Radiation), கீமோதெரபி (Chemotherapy).
READ ALSO: இதயநோயை கண்டுபிடிக்க என்னென்ன பரிசோதனைகள்?
இதில் நோயின் தீவிரம் சற்றுக் குறைவாக இருக்கும் பட்சத்தில் அறுவைச் சிகிச்சையும், கதிர்வீச்சுச் சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன. நோயின் தாக்கம் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் அனைத்துச் சிகிச்சை முறைகளும் தேவைக்கு ஏற்பப் பின்பற்றப்படுகின்றன.
இவ்வகையான புற்றுநோயில் குறிப்பிடத்தக்க சிறப்புத் தகவல் என்னவென்றால் இதனை எளிமையாகத் தொடக்கத்திலேயே கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறியும் பட்சத்தில் நோய்த் தாக்கம் அதிகமாக நடைபெறாமல் தடுத்து, உயிரைக் காத்துக் கொள்ளவும் முடியும்.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது நம் பழமொழி. ஆனால் இதற்கு மாறாகக் குறைவற்ற செல்வத்தை ஈட்டுவதற்காக வாழ்வையே நோயாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்!
இது நாம் வாழக்கூடிய இக்காலத்தின் கட்டாயம் என்று ஒரு புறம் ஏற்கத் துணிந்தாலும், குறைந்தபட்சம் நாமே தேடிச் சென்று ஏற்கக் கூடிய நோய்களில் இருந்தாவது நம்மைக் காத்துக் கொள்ள முயல்வோம்.