தலையையும், உடலையும் இணைக்கக் கூடிய உறுப்பே ‘கழுத்து’ என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அந்தக் கழுத்தில் உள்ள உள்ளுறுப்புகளின் முக்கியத்துவத்தை நாம் அறிவோமா?
அதைப் பற்றி அறிந்துக் கொள்ளவும், அதில் ஏற்படும் குரல்வளைப் புற்றுநோய்ப் பற்றியும் அறிந்து கொள்ள உதவுகிறார் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் திரு. வித்யாதரன் அவர்கள்.
குரல்வளையும், அதன் பணிகளும்
வாய்க்கும், காற்றுப் பைக்கும் இடையில் இருப்பதே குரல்வளையாகும். இது தொண்டையில் இருக்கக்கூடிய ஒரு முக்கிய உறுப்பு. இந்த உறுப்பால் தான் நாம் தடையின்றிச் சுவாசிக்கிறோம், பேசுகிறோம், விழுங்குகிறோம்!

நாம் உண்ணும் உணவானது காற்றுப் பைக்குள் (நுரையீரல்) செல்லாமல் உணவுக் குழாய்க்குள் செல்ல உதவுவது இந்தக் குரல்வளையே.
இத்தகைய முக்கியமான பணிகளைச் செய்யக்கூடிய குரல்வளையில் புற்றுநோய் ஏற்படும் போது அது தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டு, தடைபடும் என்பதே வருந்தத்தக்க தகவல்.
குரல்வளைப் புற்றுநோய் ஏற்படக் காரணங்கள்
புகைத்தல், புகையிலை, மனித பாப்பிலோமா வைரஸ் (Human Papillomavirus – HPV) இவற்றோடு தொழில் தொடர்பான அமிலத் தாக்கம் (Occupational Related) மற்றும் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் மூலமும் இப்புற்றுநோய் வருகிறது.
தொழில் மற்றும் வயிற்று அமிலங்களால் (ஏப்பம்) தொடர்ந்து குரல்வளையில் புண் ஏற்பட்டு, அது ஆறாமல் இருக்கும் போதே அமிலங்கலால் இப்புற்றுநோய் ஏற்படுகிறது!
READ ALSO: சிகரெட் பழக்கத்தை உடனடியாக நிறுத்தும் வழி!
குரல்வளைப் புற்றுநோயின் பாதிப்புகள்
ஒரு மனிதனின் அடையாளமாக அவரது குரலும் அமைந்திருக்கின்றது; அதையே மாற்றக்கூடியது இந்தக் குரல்வளைப் புற்றுநோய்! மேலும் விழுங்குவதில் சிரமம் ஏற்படும்; மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.
குரல்வளைப் புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் கண்டறியும் முறைகள்
குரல் ஒலியில் மாற்றம், பேசும் போது சத்தமின்றிக் காற்று மட்டுமே ஒலியாக வருவது, பேசும் போது கரகரப்பு உணர்வு மற்றும் கரகரப்புத் தொணி, எச்சில் இரத்தம் கலந்து வருதல், மூச்சு விடுவதில் சிரமம், இருமல், ஓசையுடன் கூடிய சுவாசம், தொண்டையில் கட்டி, விழுங்குவதில் சிரமம் போன்றவை குரல்வளைப் புற்றுநோயின் அறிகுறிகள்.
இத்தகைய அறிகுறிகள் இருக்குமேயானால் எண்டோஸ்கோப் (Endoscopy) மூலம் கட்டிக் கண்டறியப்படுகிறது. அதிலிருந்து சிறிதளவுத் திசுவானது எடுக்கப்பட்டு பயாப்ஸி (Biopsy) பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பரிசோதனையின் மூலம் நோய் உறுதிச் செய்யப்படுவதுடன் அதன் நிலையும் கண்டறியப்படுகிறது.

குரல்வளைப் புற்றுநோயிக்கான சிகிச்சைகள்
சிகிச்சை முறையானது நோயின் தன்மையையும், தீவிரத்தையும் பொறுத்து மாறுபடுகிறது. நோய்த் தொடக்க நிலையில் கண்டறியப்படுமேயானால் எண்டோஸ்கோப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டி நீக்கப்படுகிறது.
நோய்த் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் கட்டியானது திறந்த நிலை அறுவைச் சிகிச்சை (Open Surgery) மூலம் நீக்கப்படுகிறது. பிறகு கீமோதெரபி (Chemotherapy Therapy), கதிர்வீச்சுச் சிகிச்சை ( Radiation Therapy) போன்றவை தேவைக்கு ஏற்பப் பின்பற்றப்படுகின்றன.
இவற்றில் இளையோருக்கு அவர்களின் உடல் பலம் காரணமாகச் சில சிகிச்சைகளை எளிமையாகச் செய்ய இயலும். ஆனால் முதியோருக்கு அவர்களின் உடல் பலகீனம் காரணமாகச் சில சிகிச்சைகளைச் செய்ய இயலாத நிலையும் உள்ளது!
READ ALSO: இதயநோயை கண்டுபிடிக்க என்னென்ன பரிசோதனைகள்?
மேலும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தேவைப்படின் டிராக்கியோஸ்டமி குழாய் (Tracheostomy Tube), உணவுக் குழாய் (Feeding Tube) போன்ற சில மாற்று ஏற்பாடுகள் மூலம் நோயாளிகளுக்கு உணவு மற்றும் சுவாசம் பாதிக்கப்படாமல் வழங்கப்படுகிறது.
வந்தபின் காக்க மருத்துவமும், சிகிச்சையும் உடன் இருக்கிறது. அதைப் போல வருமுன் காக்க நம்முடன் இருப்பது விழிப்புணர்வும், சுயமனித ஒழுக்கமும்! முடிந்தவரை விழிப்புணர்வோடு, சுயமனித ஒழுக்கத்தைப் பின்பற்றுவோம். மூதாதையர் வாழ்ந்ததைப் போல நூறு ஆண்டுகள் நோயின்றி வாழுவோம்!
கட்டுரையாளர்
