உடலில் தாங்க முடியாது வலி ஏற்படும் போது அந்த வலியை விளக்கும் விதமாய் நாம் ஒப்பிடும் வலிகளில் ஒன்று ‘எலும்பு முறிவு’ வலியே. காரணம் எலும்பு முறிவானது அந்த அளவிற்கு அதீத வலியைக் கொடுக்கும்.
அத்தகைய வலி நிறைந்த எலும்பு முறிவு முகத்தில் ஏற்பட்டால் நாம் அணுக வேண்டிய மருத்துவர் யார்? ஏன் அவரை அணுக வேண்டும்? அதற்கான சிகிச்சைகள் என்ன? எவ்வாறு முகத்தில் எலும்பு முறிவு ஏற்படும்?
அதனைத் தவிர்ப்பதற்கான வழி முறைகள் என்ன? இவை குறித்து விளக்கம் அளிக்கிறார் மருத்துவர். எம். வீரபாகு BDS, MDS., முகம், வாய் மற்றும் தாடை அறுவைச் சிகிச்சை நிபுணர் (OMFS) அவர்கள்.

முக எலும்பு முறிவு
தலை முதல் பாதம் வரை உள்ள எலும்புகளில் முறிவு ஏற்பட்டால் எலும்பு முறிவு நிபுணரை அணுகுகிறோம். ஆனால், சற்று விதிவிலக்காக முகத்தில் உள்ள எலும்பில் முறிவு ஏற்பட்டால் நாம் அணுக வேண்டியது முகம், வாய் மற்றும் தாடை அறுவைச் சிகிச்சை நிபுணரை (OMFS).
கீழ் தாடை எலும்பு (Mandible), மேல் தாடை எலும்பு (Maxilla), கண் எலும்பு (Zygoma), நாசி எலும்பு (Nasal Bone) என்று பல எலும்புகள் முகத்தில் உள்ளன. மேல் மற்றும் கீழ் தாடை எலும்புகள் முறையே பதினாறுப் பற்கள் என முப்பத்திரண்டு பற்கள் உள்ளன.
எனவே இந்த எலும்புகளில் முறிவு ஏற்பட்டு இருந்தால் அந்த எலும்புகளை ஒன்றிணைக்கும் போது அதனோடு பொருந்தியுள்ள மேல் மற்றும் கீழ் தாடை வரிசைப் பற்கள் சரியாகப் பொருந்தியுள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும்.
READ ALSO: மூச்சு விடும்போது விசில் சத்தம் வர காரணம்
உடலின் இதர எலும்புகளைப் பொருத்துவது போன்று இதனைப் பொருத்தக் கூடாது. அவ்வாறு கவனிக்காமல் பொருத்தும் பட்சத்தில் பற்களில் அமைப்பு மாற்றம் ஏற்படும். அதன் காரணமாக அந்த நபரால் முறையாக உணவுகளைக் கடித்து உண்ண இயலாது.
பல் மருத்துவம் பயின்று, முகம், வாய் மற்றும் தாடை அறுவைச் சிகிச்சைப் பயின்ற நிபுணர் முதலில் பற்களைச் சரியாக அதன் அமைப்பில் கட்டி வைத்து, பிறகே முறிவு ஏற்பட்டுள்ள எலும்புகளை டைட்டானியம் கிரேட் 5 (Titanium Grade 5) உலோகத்தால் இணைப்பார்.
இந்த உலோகத்தை உடலானது அதன் உறுப்பாகவே நினைத்து அங்கீகரிக்கிறது. இதனால் எந்தவிதப் பக்கவிளைவும் ஏற்படதாது! இத்தகைய சிகிச்சை முறையால் முறிந்த எலும்புகள் மட்டும் முறையாக ஒன்றிணைவது இல்லை; பற்களும் முறையாகப் பொருந்தி இருக்கும்! எனவே முகத்தில் எலும்பி முறிவு ஏற்பட்டால் முகம், வாய் மற்றும் தாடை அறுவைச் சிகிச்சை நிபுணரை அணுகுவதே சாலச் சிறந்தது.

சிகிச்சை முறைகள்
முற்காலத்தில் முக எலும்பு முறிவின் போது தாடைகள் அசையா வண்ணம் இரண்டு தாடைப் பற்களையும் ஒன்றோடு ஒன்று இணைந்துக் கட்டி வைப்பர். இதுவே சிகிச்சை! ஆனால் தற்போது நவீன மருத்துவத்தின் வளர்ச்சியினால் இந்த இடர்பாடு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
மயக்க மருந்து அளிக்கப்பட்டு, டைட்டானியம் கிரேட் 5 உலோகத்தினால் ஆனாத் தகட்டைக் கொண்டு உடைந்த எலும்புகள் இணைக்கப்படுகின்றன.
இந்தச் சிகிச்சை முறையின் மூலம் அதிகபட்சம் நான்கு நாட்களிலேயே பாதிக்கப்பட்டுவரால் உணவு உண்ண முடியும்! இரண்டு வாரங்களிலேயே மீண்டும் அவரின் இயல்பான உணவு உண்ணும் வாழ்க்கை முறையைப் பின்பற்ற முடியும்!!

முக எலும்பு முறிவு ஏற்படக் காரணங்கள்:
பொதுவாகவே முக எலும்பு முறிவு மிகவும் அரிதாக நிகழக்கூடிய ஒன்றுதான். காரணம், கீழே தடுக்கி விழ நேர்ந்தால் முகம் தரையில் படும்முன் கைகளால் தாங்கிக் கொள்வோம்;
முகத்தில் ஏதோ ஒன்று பட நேர்ந்தாலும் முகம் மற்றும் மூளையைப் பாதுகாக்க வேண்டும் என்ற இயல்பான தற்காப்பு நடவடிக்கையாகக் கைகளை வைத்து முகத்தை மறைத்து விடுவோம்.
ஆனால், வயது முதிர்வின் காரணமாக மயங்கி விழும்போது இவ்வாறு முக எலும்புகளைப் பாதுகாக்க இயலாது; இப்படிப்பட்ட சூழ்நிலையில் முக எலும்பு முறிவு ஏற்பட்டுகிறது.
சிலவேளைகளில் கண்ணில் உள்ள சதை வளர்ச்சியால் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது; அதன் காரணமாகத் தடுக்கி விழும் போதும் முக எலும்பு முறிவு ஏற்படுகிறது. இத்துடன் விபத்தால், விளையாடும் போது விளையாட்டு உபகரணங்கள் படுவதால், சண்டையிடும் போது பிறர்த் தாக்குவதால் ஏற்படுகிறது.
READ ALSO: இழந்த பற்களை மீட்க உதவும் சிகிச்சைகள்!
முக எலும்பு முறிவைத் தடுப்பதற்கான வழிமுறைகள்
விபத்துகளைத் தவிர்க்கும் விதத்தில் கவனத்துடன் பயணிப்பது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாமல் இருப்பது, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது இருக்கைப் பட்டை (seat belt) அணிவது, இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது வாகனத்தில் செல்லும் அனைவருமே தலைக்கவசம் அணிவது,
தேவையற்றச் சண்டைகளைப் புறக்கணிப்பது, விளையாடும் போது அதற்கான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து விளையாடுவது. இவற்றைப் பின்பற்றும் போது முக எலும்பு முறிவைத் தவிர்க்கலாம்.
உடலில் முகம் தவிர வேறு பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டால் கவனம் செலுத்த வேண்டியது முறிவு ஏற்பட்ட இடத்தில் மட்டும் தான். ஆனால், முகத்தில் முறிவு ஏற்பட்டால் முறிவு ஏற்பட்ட எலும்பிலும் கவனம் செலுத்த வேண்டும்;
அதனோடு தொடர்புடைய பற்களிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்தக் கருத்தின் மூலம் முக எலும்புகளில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்ற தகவலானது புரிகிறது. எனவே அதீதக் கவனத்தோடு முக எலும்புகளைப் பாதுகாப்போம்! இடர்பாடுகள் இன்றி இயல்பாய் வாழ்வை வாழ்வோம்!!
கட்டுரையாளர்
