ஆண்டன் செகாவ்… பிரபலமான ரஷ்ய எழு த்தாள ர். எனக்கு அவரை அறிமுகப்படுத்தியது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
ஆண்டன் செகாவ் குறித்து அவர் பல இடங்களில் பேசியிருக்கிறார், எழுதிருக்கிறார். அவருடைய சிறுகதைகளை மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார்.
44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த செகாவ் போல ஒரு சிறுகதை எழுத்தாளர் இன்றைக்கு உலகிலேயே இல்லை என்று எஸ்.ராமகிருஷ்ணன் கூறுகிறார்.
44 வயதில் 10 – 15 நாடகங்களும், சில சிறுகதைகளும் மட்டுமே எழுதியிருக்கிறார் அவர்.
வறுமையின் உச்சத்தில் இருந்த மிகவும் ஏழ்மையான பலசரக்கு கடைக்காரருக்கு கடைசிப் பிள்ளையாகப் பிறந்தவர். ஊரே ஒன்றுகூடி விரட்டியடிக்கப்பட்ட குடும்பம் அது.

அந்த நிலையிலும் படித்து மருத்துவர் ஆனார். அவர் “என்னுடைய மருத்துவமே எனக்கு அடிப்படை வாழ்வாதாரம். ஆனால், என்னுடைய எழுத்து, கவிதை, நாடகங்களே என்னை உயிர்ப்பிப்பது” என்று எழுதியிருக்கிறார்.
ஆண்டன் செகாவ் ப ல விஷயங்களைப் பேசியிருக்கிறார். அதில் மிகவும் சுவாரசியமான விஷயம் இது… அவர் ஒருவரைக் காதலித்துக் கல்யாணம் செய்கிறார்.
அந்தக் கல்யாணத்துக்கு முன் மிக வித்தியாசமான ஒரு நிபந்தனை விதிக்கிறார். அது என்ன?
“நாம் இருவரும் கல்யாணம் செய்துகொள்ளலாம். ஆனால், நீ மாஸ்கோவில் தான் இருக்க வேண்டும். நான் என் ஊரில்தான் இருப்பேன்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே நாம் சந்தித்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் கடைசி வரை காதலர்களாக இருக்க முடியும்” என்றாராம்!

நானும் காதலித்து கல்யாணம் செய்தவன் தான். ஆனால், ஆண்டன் செகாவ் பற்றி 30 வருடம் கழித்தே படித்தேன். என் மனைவியிடம், ‘இந்தப் புத்தகத்தை நாம் முதலிலேயே படித்திருந்தால், இந்த மாதிரி தேவையில்லாத சண்டை போட்டுக்கொண்டு இருந்திருக்க மாட்டோம்.
நீ உன் ஊரில் இருந்திருக்கலாம். நானும் என்னுடைய ஊரில் இருந்திருப்பேன். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நாம் சந்தித்திருக்கலாம்’ என அடிக்கடி வேடிக்கையாக சொல்வதுண்டு.
இதுபோல பல நுட்பமான விஷயங்களைத் தருவது நூல்கள் மட்டுமே. ஆசிரியர்கள், வணிகர்கள் என எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எதையாவது ஒரு நூலை வாங்கி வாசியுங்கள்.
அந்த நூல் உங்களைப் புரட்டிப்போடும். எந்த நூலின் முன்பு நீங்கள் வாசிப்பதற்கு தலைகுனிகிறீர்களோ, அதே நூலால் உங்கள் வாழ்க்கை முழுக்கத் தலைநிமிர்ந்து நிற்கலாம். இதுவே நமக்கு நூல்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய விஷயம்.
உங்கள் வீட்டினருக்கு – குறிப்பாகக் குழந்தைகளுக்குப் பரிசுப் பொருளாக அடிக்கடி புத்தகங்களைக் கொடுத்துக்கொண்டே இருங்கள். என்னுடைய சிறுவயதில் கோகுலம் , ரத்னபாலா, அம்புலிமாமா, பாலமித்ரா, முத்து காமிக்ஸ் போன்ற புத்தகங்களே முதலில் வாசிக்கக் கற்றுக் கொடுத்தன.
READ ALSO: உப்பு குறைவா சாப்பிட்டா இதயத்துக்கு நல்லதா?
அதன் பிறகு, 8-ம் வகுப்பு படிக்கும் போது நூலகங்களுக்குச் சென்று தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள் படிக்க ஆரம்பி த்தேன். பிறகு மீசை அரும்பிய பின் சுஜாதா புத்தகத்தை எடுக்க ஆரம்பித்தேன்.
அந்தக் காலத்தில் நானும் தற்போது மிகப்பெரிய மருத்துவராக இருக்கக்கூடிய என் நண்பரான பத்மநாதனும் நூலகத்திற்குச் செல்வோம்.
நாங்கள் நூலகத்திற்குள் நுழைந்தவுடன் நூலக ஆசிரியருக்கு எங்கள் மீது கோபத்துடனான ஒரு கண்காணிப்பு இருந்துகொண்டே இருக்கும். பிறகு நூலக உதவியா ளரை அழைத்து எங்களை க் கண்காணிக்கச் சொல்வார்.
காரணம் , நூலகத்தில் 2 ரூபாய் டோக்கன் கொடுத்து ஒரு புத்தகம் மட்டுமே எடுக்க முடியும். ஆனால் மற்றொரு புத்தகம் நாளை வந்தால் கிடைக்குமா என்று தெரியவில்லை.
எனவே நான், அந்தப் புத்தகத்தின் மீதுள்ள ஆர்வத்தில் யாரும் அந்தப் புத்தகத்தை எடுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் திருட்டுத்தனமாக வேறொரு வரிசையில் ஒளித்து வைத்துவிடுவேன். இந்த விஷயம் நூலக ஆசிரியருக்கு தெரிந்துவிட்டது.

எனவே நூலகம் செல்லும்போதெல்லாம் எங்களின் மீது மாபெரும் கண்காணிப்பு இருந்தது! எங்களுக்கு வாசிப்பில் அவ்வள வு தூரம் காதல் இருந்தது.
அது அப்படியே அடுத்தகட்டமாக சுஜாதா, பாலகுமாரன், வண்ணதாசன், ஜெயமோகன், ராமகிருஷ்ணன் என நகர்ந்துகொண்டே இருந்தது.
இந்த வாசிப்பினுடைய விரிப்பு பள்ளிக் காலத்தில் நடந்ததால் மட்டுமே இன்றைக்கும் இப்படியே நகர முடிகிறது. நண்பர்களே… உங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பை முதலில் நேசிக்க கற்றுக் கொடுங்கள்.
இன்றைக்கு ரீல்ஸ், ஷார்ட்ஸ் எனபலவும் சேர்ந்து மனதை எவ்வளவு குப்பையாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை உங்கள் குழந்தைகளைப் பார்த்தால் தான் தெரியும். எடுத்துக்காட்டாக நேற்று நடந்த சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம்.
நேற்று இரவு 10:30 மணி வரை நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு அலுவலகம் சார்ந்த பேச்சு நடந்தது. அது முடிய 10:50 ஆகிவிட்டது. பிறகு, வேகமாக ரயிலைப் பிடிக்கப் புறப்பட்டேன்.

அப்போது என் உதவியாளர், “சார் ஒருத்தர் மட்டும் உங்களைப் பார்க்க வெகுநேரமாக வெளியில் நின்று கொண்டிருக்கிறார்” என்றார். எனக்கு உடனே சட்டென்று கோபம் வந்துவிட்டது.
‘நான் 11:20–க்கு ரயிலைப் பிடிக்க வேண்டும். இப்போது ஒருவர் வந்திருக்கிறார் என்றால் எப்படி முடியும்’ என்றேன். “8 மணியிலிருந்து அவர் உங்களைப் பார்க்கவேண்டி காத்துக் கொண்டிருக்கிறார். ஒரு நிமிடம் அவர்களைப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள்” என அவர்என்னை வலியுறுத்தினார்.
நான் உடனே, ‘சரி அவர்களை வரச்சொல்’ என்று கூறினேன். 32 வயதான இளைஞனும், 55 வயதுடைய தாயாரும் வந்தார்கள். நான் கிட்டத்தட்ட 10 வருடங்களாகப் பார்த்த நபர்கள்தாம். இடையில் ஓரிரு வருடங்கள் பார்க்காமல் இருந்திருக்கிறேன்.
அந்த இளைஞனுக்கு மனநோய் ; சிக்கலான உளவியல் பிரச்னை. கிட்டத்தட்ட ஒரு வாரமாகத் தூங்கவே இல்லையாம். பல மருத்துவர்களைப் பார்த்த அந்தச் சீட்டுகளைக் கையில் வைத்திருந்தான்.
பிறகு 3 – 4 உளவியல் மருத்துவர்களைப் பார்த்திருக்கிறான். அந்த இளைஞனைத் தூங்க வைப்பதற்காக உளவியல் ரீதியான மருந்துகளை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.
READ ALSO: நுரையீரலில் நீர் சேர காரணமும், தீர்வும்!
இவனுக்குள் ஒரு பதற்றம், “சார் எனக்கு உளவியல் நோய் ஏதுமில்லை. தூக்கம் மட்டுமே வரவில்லை. ஆனால், அந்த மருத்துவர்கள் எனக்கு உளவியல் நோய்க்கான மருந்துகள் எழுதிக் கொடுக்கிறார்கள்.
என்னைச் சுற்றி உளவியல் மருத்துவர்கள் அமர்ந்து என்னை நடுவில் அமரச் செய்கிறார்கள்” என்று பொரிந்தான் அவன். அவன் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கி றான் என்பது பார்த்தவுடனே தெரிந்தது.
தொழில்நுட்பம் படித்தவன், நல்ல பணியில் இருகிறவன… அவனின் அம்மா கண் கலங்கிக்கொண்டே கேட்கிறார், “நேற்று வரை அவன் தூங்கவில்லை. எதையாவது செய்து என் மகனைக் குணப்படுத்துங்க’’ என்று கதறி நிற்கிறார்.
அவன் தூங்குவதற்காக சித்த மருத்துவத்தில் இருக்கும் சில மருந்துகளை எழுதிவிட்டு, அத்துடன் அவனுக்கு நவீன மருத்துவத்தில் கொடுக்கப்பட்டிருந்த ஒரு மருந்தினையும் சேர்த்து எடுத்துக் கொள்ளுமாறு கூறினேன்.
நீ இன்றைக்கு நிச்சயம் உறங்கியாக வேண்டும் என்றேன். அதன் பிறகு இரவு 11:30 மணிக்கு ரயிலில் ஏறி காலை 4:30 மணிக்கு இறங்கினேன். பிறகு என் ஊர்திக்கு அழைக்க செல்போனை எடுத்தேன். அப்போது அந்த இளைஞன் என்னை தொடர்புகொள்கிறான்.

அழைப்பை எடுத்து பேசினேன். ‘‘சார் 12:30 – 3:00 மணி வரை 3 மணி நேரம் மட்டுமே தூங்கியிருக்கிறேன். எனக்கு இது போதாது… வேறு எதாவது ஒரு மருந்து சொல்லுங்கள்” என்கிறான். எனக்கு அவனுடைய பதற்றம் புரிந்தது.
அந்தத் தாய் எவ்வளவு வேதனையில் இருந்திருப்பார்? எப்படியான சூழலில் அந்தக் குடும்பம் இருக்கும்? பிறகு ‘எதற்கும் பயப்பட வேண்டாம். செல்போன், புத்தகம் என எதையும் எடுக்காதே.
இருட்டு அறையில் 15 நிமிடமாவது ஆழ்ந்து உறங்கினால் இன்னும் சில மணி நேரம் தூக்கம் கிடைக்கும். நாளையும் இந்த மருந்தினை எடுத்தே ஆக வேண்டும்’ என்று கூறினேன்.
நண்ப ர்களே… நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நம் சமூகத்தில் மிகப்பெரிய அளவில் பெருகி வரக்கூடிய நோய்களில் ஒன்று, மனநல நோய்.
மனநலம் என்றால் சட்டையைக் கிழித்து ரோட்டில் கத்திக் கொண்டிருப்பதுதான் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், மனநல நோய் என்பது. ஆனால் அப்படி கிடையாது.
உங்களில் எத்தனை பேர் எந்த இடையூறும் இல்லாமல் தூங்கி, அதிகாலையில் எழுந்து, எழுந்த 10 நிமிடத்தில் பீறிடும் உற்சாகத்துடன் இருக்கிறீர்களோ, அவர்களே மனநோய் இல்லாதவர்கள்.
ஆனால், இங்கு பலரும் தூக்கம் என்கிற அத்தியாவசியத் தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியாத அளவு ஏதேனும் ஓர் உளவியல் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள்.