சூர்ப்பனகை நடந்து செல்கிறாள். அவள் எப்படி நடந்தாள் என்கிற பாடல் நம் அனைவருக்குமே தெரியும்.
அந்தப் பாடலில் கம்பனுடைய, ‘பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவமனுங்க’ என்கிற அடிகளில் ‘பல்லவம னுங்க’ என்ற இடமே எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஏனெனில், அந்த ‘அனுங்க’ என்கிற சொல்லில் ஒரு குலுக்கல் இருக்கிறது.
நடந்து சென்று கொண்டிருக்கும் சூர்ப்பனகை தன் உடலை ஒரு வெட்டு வெட்டுகிறாள். அதுவே அந்த ‘அனுங்க’ என்கிற சொல்லின் அர்த்தம்.
‘பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவமனுங்க’ – இதிலுள்ள ‘அனுங்க’ என்கிற சொல் இன்று பயன்பாட்டில் இல்லையே, பழைய சொல்லோ என்று நினைக்காதீர்கள்.

யாழ்ப்பாணம் சென்றால் அவர்கள் ‘குழந்தை அனுங்கறான்’ என்பார்கள். இன்றும் ஈழத்தில் ஈரத்தமிழ் உயிரோடு இருக்கிறது.
எடுத்துக்காட்டாக, ‘இருங்கள், கதைக்கிறீர்கள், உட்காருங்க ள் என்பார்கள்.
‘இரு’ என்கிற சொல்லின் வேரடியாக இருங்கள் என்கிறார்கள். அதுவே மலையாளத்தில் ‘இரீ’ என்பார்கள். இவையெல்லாம் பழைய தமிழ்ச் சொற்கள்.
‘பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம னுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்’
என்கிற இந்தப் பாடலில், அதென்ன இன்ச் (நஞ்சமென) என்கிற சத்தம்? அது கொலுசின் சத்தம். இதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் பாரதிராஜாவின் படங்களைப் பார்க்கவேண்டும்.
Click to Read: உயர் இரத்த அழுத்தம் நோயா? முதுமையின் விளைவா?
அவர், கொலுசின் சத்தத்தை மிகத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். நாம் கொலுசை மார்பிள் தரையில் தூக்கிவீசினால், ‘ஸ்ஸ்… ஷ்ஷ்.,. ஷ்… ஷ்…’ என்று தேய்த்துக்கொண்டே ஒரு பக்கமாகச் செல்லும்.
அதற்கேற்ற சிறப்பு ஒலிக்கூறுகளை இளையராஜா சிறப்பாகக் கொடுப்பார். மேற்குறிப்பிட்ட அந்தப் பாடலின் ஒலியைக் கவனித்தால் சந்தக் குழிப்பில் சூர்ப்பனகையின் நடைக்கு ஒரு ஒலி. இந்தச் சந்தக்குழிப்பை கம்பன் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார். சீதை கல்யாண மண்டபத்துக்கு நடந்து வருகிறாள். அதற்கு ஒரு சந்தக்குழிப்பு போட வேண்டும் அல்லவா? அதற்கு
‘பொன்னின் ஒளி. பூவின் வெறி.
சாந்து பொதி சீதம்.
மின்னின் எழில். அன்னவள்தன்
மேனி ஒளி மான.
அன்னமும். அரம்பையரும்.
ஆர் அமிழ்தும். நாண.
மன் அவை இருந்த மணி
மண்டபம் அடைந்தாள்.’
இதுவும் சூர்ப்பனகைக்கு கொடுத்த அதே சந்தக்குழிப்பு. இது என்ன நியாயம்?

ஒரு கதாநாயகிக்கு கொடுக்க வேண்டிய அதே உடையை வில்லிக்கு கொடுக்கலாமா? ஒரு கதாநாயகனுக்கு கொடுக்க வேண்டிய அதே உடையை வில்லனுக்குக் கொடுக்கலாமா?
சினிமாவில் இதுபோன்று செய்தால் அவ்வளவுதான்…
கம்பன், இப்படி ஒரே மாதிரியாக வரும் ஒலியின் சந்தத்தை சீதைக்கும் சூர்ப்பனகைக்கும் ஒன்றுபோலவே கொடுத்திருக்கிறார். இதில் எப்படி நீங்கள் வித்தியாசம் காண்பீர்கள்?
கு.அழகிரிசாமி என்று ஒரு சிறந்த விமர்சகர் இருந்தார். மிகப் பெரிய மனிதர். அவர் விமர்சனம் எழுதுகிறார், ‘இரண்டு நடைக்கும் ஒரே சந்த முறையை கம்பன் பின்பற்றுகிறான்,
என்றாலும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. என்ன அர்த்தம்? ‘சீதை நடந்தாள், அழகாக இருந்தது. சூர்ப்பனகை அழகாக நடந்தாள் ’ என்கிறார்.
இரண்டும் ஒன்று என்பதால் ஒரே கோணத்தில் அதே ஒலிக்குறிப்பை கம்பன் பயன்படுத்தினார். ஆனால், இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது.
‘சீதை நடந்தாள், அழகாக இருந்தது. சூர்ப்பனகையோ அழகாக நடந்தாள். பொதுவாக வீட்டில் பாட்டிமார்கள் சமைப்பார்கள்.
அதில் உப்பு எவ்வளவு போட்டீர்கள் என்று கேட்டால், ‘கொஞ்சம்தான் போட்டேன்’ என்று அவர்கள் ஒரு அளவைச் சொல்வார்கள்.

பாட்டிமார்களை நம்பி நாமும் கொஞ்சமாக உப்பைச் சேர்த்தால் ரசம் ரசமாக இருக்காது. பாட்டி சமைக்கும்போது எல்லாவற்றிலும் கையளவு பொருட்களைப் போட்டுச் சமைப்பார்.
பாட்டியிடம் ‘இன்னும் எவ்வளவு நேரம் குழம்பு கொதிக்க வேண்டும்?’ என்று கேட்டால், ‘அது கொதித்ததா, இல்லையா என்று மூக்கு சொல்லாதா’ என்பார்.
பிறகு கொதித்தபின் வாசனையை வைத்தே குழம்பை இறக்கிவிடுவார்கள். இன்று நாம் பார்த்துச் சமைக்கிற புத்தகத்தில் குழம்பு கொதிக்கத் தேவைப்படும் கால அவகாசம் 10 நிமிடம் என்றிருக்கும்.
ஆனால், கேஸ் பர்னர் திகுதிகுவென எரிந்து குழம்பு பாயசமாகவோ, கேக்காகவோ மாறிவிடும். புத்தகத்தில் உள்ளபடி 10 கிராம் உப்பு போடவும் என்பது சாத்தியமா?
சீதை நடந்தாள் என்பது பாட்டி சமையலைப் போன்றது. அவள் இயல்பாகவே நடந்தாள். இட் வாஸ் ஸோ பியூட்டிஃபுல். சூர்ப்பனகை அப்படி இல்லை. அழகாக நடப்பது எப்படி என்று தமிழ்வாணன் புத்தகத்தை வாங்கிப் படித்ததைப் போல நடந்தாள்.
ஏனென்றால், தமிழ்வாணன் அனைத்து விஷயங்களுக்குமே புத்தகம் எழுதியிருப்பார். அதில், ‘30 டிகிரிக்கு முகத்தைத் திருப்பு. உன் இடது காலை 20 கிலோமீட்டர் வேகத்தில் எடுத்துவை.
வலது காலை 22 கிலோமீட்டர் வேகத்தில் எடுத்து வை. நடை அழகாக இருக்கும்…’ – இதைப் படித்த பிறகு அவள் நடந்து பார்த்தாள் எப்படி இருக்குமோ அவ்வாறு சூர்ப்பனகை நடந்தாள்.
அதாவது, பாட்டி தானாகச் சமைப்பதற்கும், பு த்தகத்தைப் பார்த்துப் பேத்தி சமைப்பதற்கும் என்ன வித்தியாசமோ, அதேதான் ‘சீதை நடந்தாள்… அழகாக இருந்தது. சூர்ப்பனகை அழகாக நடந்தாள்’ என்பதிலும் இருக்கிறது.
என்ன ஓர் அருமையான வேறுபாடு! இதில் நாம் புரிந்துகொள்வது கவிஞனை மட்டுமே அல்ல. கவிதை விமர்சகனும் வணங்கத்தக்கவரே.
ஏனென்றால் , கு.அழகிரிசாமி அந்தப் பாடலை உணர்ந்து மிகவும் அருமையாக எடுத்துரைக்கிறார்.
Click to Watch: முதியோர் இல்லவாசிகளின் கவலையை தீர்த்த இசைக் கச்சேரி
பொதுவாக வடமொழி இராமாயணத்தையும், தென்மொழி இராமாயணத்தையும் ஒப்பிட்டுப் படிக்க வேண்டுமென்றால், காவ்ய ராமாயணம் என்று ஒரு புத்தகம் இருக்கிறது.
டில்லி சீனிவாசன் எழுதியது. தமிழில் கம்பனுடைய நயத்தைப் படிக்கவேண்டுமென்றால் பி.ஸ்ரீ. உடைய சித்திர ராமாயணத்தைப் படிக்க வேண்டும்.
வாரியார், புலவர் திலகர் கீரன், சத்தியசீலன், பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோரின் உரைகள் எல்லாம் நமக்கு மிகப்பெரிய கொடையாக இருப்பவை.
புலவர் கீரனின் இராமாயண உரை மிகச் சிறப்பு. புலவர் கீரன் போல யாரெல்லாம் இராமாயணத்தை வளர்த்தார்களோ அவர்களையெல்லாம் நான் இப்போதும் மரியாதையோடு நினைக்கிறேன்.
ஜெகவீர பாண்டியன் என்கிற ஒரு பெரியவர் ஒரு பாட்டுக்கு நயம் எழுதினால் 40 பக்கமாவது எழுதுவார். இந்த மாதிரியான நல்ல புத்தகங்களை நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டும்!