Homeஉடல் நலம்தைராய்டு புற்றுநோய் கண்டறிவது எப்படி?

தைராய்டு புற்றுநோய் கண்டறிவது எப்படி?

நம் உடலில் இருக்கக்கூடிய நாளமில்லாச் சுரப்பிகளில் ஒன்றுதான் கழுத்தில் பட்டாம்பூச்சியின் வடிவில் இருக்கக்கூடிய ‘தைராய்டு சுரப்பி’.

இந்தத் தைராய்டு சுரப்பியே மூளை, இதயம், தசைகள் போன்ற உடலின் முக்கிய உறுப்புக்கள் சீராக இயங்கக் காரணமாக இருக்கின்றது. எனில் அதில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் பின்விளைவு பெரிதாக இருக்கும்.

இத்தகைய பெரிய விளைவுகளைத் தவிர்த்துக் கொள்ள வழிகாட்டுகிறார் தலை மற்றும் கழுத்து அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் வித்தியாதரன் அவர்கள்.

தைராய்டு புற்றுநோய்

‘தைராய்டு’ என்பது கழுத்தின் முன்புறம் உள்ளச் சுரப்பி ஆகும். அதில் ஏற்படும் புற்றுநோயே ‘தைராய்டு புற்றுநோய்’. இதில் இரண்டு விதமான கட்டிகள் தோன்றலாம். ஒன்று தீங்கற்றக் கட்டி (Benign Nodules), மற்றொன்று வீரியம் மிக்கக் கட்டி (Malignant tumour).

தீங்கற்றக் கட்டி (Benign Nodules) தைராய்டு சுரப்பியிலே இருக்கும்; வேறெங்கும் பரவாது. வீரியம் மிக்கக் கட்டி (Malignant tumour) பரவும் தன்மை கொண்டது; இதுவே புற்றுநோய் கட்டி.

‘தைராய்டு புற்றுநோய்’ ஆண்களை விடப் பெண்களையே இரண்டு மடங்கு அதிகமாகப் பாதிக்கிறது! தைராய்டு சுரப்பியில் தோன்றும் எல்லாக் கட்டிகளுமே புற்றுநோய்க் கட்டிகள் அல்ல.

READ ALSO: நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள 10 டிப்ஸ்

தைராய்டு பிரச்சனை உள்ள நூறு பேரில் பன்னிரண்டு பேருக்கே இக்கட்டியானது புற்றுநோய்க் கட்டியாக மாறுகிறது.

நமது உடலில்,

  • பிட்யூட்டரிசுரப்பி (Pituitary Gland),
  • தைராய்டு சுரப்பி (Thyroid Gland),
  • தைமஸ் சுரப்பி (Thymus Gland),
  • கணையம் (Pancreas),
  • ஹைபோதாலமஸ் (Hypothalamus),
  • பினியல் சுரப்பி (Pineal Gland),
  • அட்ரீனல் சுரப்பிகள் (Adrenal Glands)
  • கருப்பை சுரப்பிகள் (Ovary Glands)

என்று பல சுரப்பிகள் உள்ளன. அதில் இந்தத் தைராய்டு சுரப்பியில் ஏற்படக்கூடிய புற்றுநோயானது பொதுவானதே!

தைராய்டு புற்றுநோயின் வகைகள்

தைராய்டு புற்றுநோயானது பொதுவான புற்றுநோயாக இருந்தாலும், இதிலும் நான்கு வகைகள் உள்ளன. அவை முறையே,

  • பாப்பில்லரி புற்றுநோய் (Papillary Cancer)
  • ஃபோலிகுலர் புற்றுநோய் (Follicular Cancer)
  • மெடுல்லரி புற்றுநோய் (Medullary Cancer)
  • அனாபிளாஸ்டிக் புற்றுநோய் (Anaplastic Cancer)

பாப்பில்லரி மற்றும் ஃபோலிகுலர் புற்றுநோய்கள் இயல்பாய் யாருக்கு வேண்டுமானாலும் தோன்றலாம். அதேவேளையில் இவ்வகையான புற்றுநோய்களைக் கண்டறிதல் மிகவும் எளிதானது.

மெடுல்லரி புற்றுநோய் மரபு ரீதியாகக் குடும்பத்தில் யாருக்கேனும் இருக்கும்போது மட்டுமே அடுத்தத் தலைமுறை நபர்களுக்கு வருகிறது.

அனாபிளாஸ்டிக் புற்றுநோயானது யாரை வேண்டுமானாலும் தாக்கும். மேலும் இது சற்று விபரீத விளைவுகளை அளிக்கக்கூடிய ஆபத்தானப் புற்றுநோயாகும்.

தைராய்டு புற்றுநோயைக் கண்டறியும் முறைகள்

தற்போது வேறொரு உடல் உபாதையின் காரணமாக எடுக்கப்படும் பரிசோதனைகளிலேயே தைராய்டு புற்றுநோயானது இயல்பாகக் கண்டறியப்படுகிறது.

உதாரணமாக, காச நோயைக் கண்டறிவதற்காக எடுக்கப்படும் சி.டி ஸ்கேனில் (CT Scan) தைராய்டு சுரப்பியும் படம்பிடிக்கப்படும்; அப்போது அதுவும் கண்டறியப்படுவதுண்டு!

இருப்பினும் நீண்ட நாட்களாகக் கழுத்துப் பகுதிகளில் ஏதேனும் கட்டி இருக்குமேயானால், அது திடீரென்று அதன் இயல்பான அளவை விட அளவு அதிகரிக்கும் போது, அது புற்றுநோய்க் கட்டியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

READ ALSO: வாய் புற்றுநோய் கண்டறிவது எப்படி?

இவ்வாறாகத் தற்செயலாகவோ, சந்தேகத்தின் அடிப்படையிலோ பரிசோதனைச் செய்யப்படும் போது கட்டி கண்டறியப்படும்.

அவ்வாறு கண்டறியப்படும்போது அல்ட்ராசவுண்ட் பரிசோதனை (Ultrasound Test) மூலம் ஊசி வழியாக ‘அல்ட்ராசவுண்ட் – வழிகாட்டப்பட்ட ஃபைன் ஊசி ஆஸ்பிரேஷன் சைட்டாலஜி (Ultrasound-guided fine needle aspiration cytology)’ என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

அதன் மூலம் கட்டியில் இருந்து திரவம் அல்லது திசுக்கள் சேகரிக்கப்பட்டுப் பயாப்ஸி (Biopsy) பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதன் மூலம் புற்றுநோயானது உறுதிச் செய்யப்படுகிறது.

‘சிறிய கட்டித் தானே’ என்று அலட்சியமாக இல்லாமல் உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதனைச் செய்து மிகப் பெரிய விளைவுகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வோம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும் தனிக் கவனம் தேவை! ஏனென்றால் ஒவ்வொரு உறுப்பும் நாம் இயல்பாய் வாழ இன்றியமையாததே!! கவனமுடன் இருப்போம்; இயல்பான வாழ்வை வாழ்வோம்!!!

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read