Homeஉடல் நலம்அடிக்கடி மூச்சு திணறுகிறதா? இதுவும் காரணமாக இருக்கலாம்!

அடிக்கடி மூச்சு திணறுகிறதா? இதுவும் காரணமாக இருக்கலாம்!

உங்களுக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா? அது COPD என்கிற நாள்பட்ட நுரையீரல் அழற்சி நோயாகவும் இருக்கலாம். பொதுவாக மூச்சுத்திணறல் இருந்தால் அதை ஆஸ்துமா என்றே பலரும் நினைத்துக்கொள்வார்கள். ஆனால், ஆஸ்துமாவும், COPD-யும் வேறுவேறு.

இதையும் படிக்கலாமே! COPD, ஆஸ்துமா: இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

COPD பிரச்னையின் சிக்கல்கள் என்னென்ன?

Chronic Obstructive Pulmonary Disease-ஐ கண்டுகொள்ளவில்லையென்றால், அது பொறுமையாக வேலையைக் காட்டத் தொடங்கும். அப்போது மூச்சுவிட இன்னும் சிரமமாகும்; இருமல் அதிகரிக்கும். இதனால் வாழ்க்கைத் திறன் குறையும். மருந்துகளின் தேவை அதிகரிக்கும். இதன் காரணமாக வெளியில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும். அது மட்டுமல்ல… நுரையீரல் செயலிழக்கக் கூடிய அபாயமும் இருக்கிறது. அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட்டு, நிமோனியா போன்ற நோய்த்தொற்றும் ஏற்பட்டால் சில நேரம் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

நுரையீரல் செயலிழப்பில் இரண்டு வகைகள் உள்ளன.

1. சுவாச செயலிழப்பு வகை-1

2. சுவாச செயலிழப்பு வகை-2

ஆக்ஸிஜன் மட்டும் குறைவது சுவாசச் செயலிழப்பு வகை-1. சுவாச செயலிழப்பு வகை 2-ல் ஆக்சிஜன் குறைவாவதோடு, கார்பன் டை ஆக்சைடு அதிகமாகி, அதன் விளைவாக நோய்த்தொற்று ஏற்படும். மேலும் இவை மெதுவாக இதயத்தையும் பாதிக்கும். இதயம், நுரையீரல் இரண்டுமே பாதிப்படையும் இந்த நிலையை Cor Pulmonale என்பார்கள்.

COPD பாதிப்பு இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?  

COPD உள்ளவர்களுக்கு நாள்பட்ட இருமல் இருக்கும். நாள்பட்ட மூச்சு வாங்குதல் தொந்தரவு இருக்கும். இளைப்பு, மூச்சுத் திணறல் ஏற்படும். இதற்காக மருந்து மாத்திரைகள் சாப்பிடும்போது பிரச்னை குறையும்… மீண்டும் மாத்திரைகள் சாப்பிட நேரிடும். அடிக்கடி இருமல் ஏற்படும் என்பதால் இரவிலும் சரியாகத் தூங்க முடியாது. இவை 6 மாதம் அல்லது 1 வருடம் என இப்படியே தொடர்ந்து வரும். இதன் பிறகே பாதிக்கப்படுகிறவர்களுக்கு ‘இது நமக்கு ஏற்பட்டுள்ள நாள்பட்ட வியாதி’ என்றும் ‘இவைதாம் COPD பிரச்னையின் அறிகுறி’ என்றும் தெரியவரும். 

COPD இருப்பதைத் தெரிந்துகொள்ள என்னென்ன பரிசோதனைகள் உள்ளன?

நுரையீரலில் Chest Skiagram என்று சொல்லக்கூடிய Chest X-ray எடுத்துப் பார்க்க வேண்டும். Spirometry Test என்கிற முக்கியமான நுரையீரல் செயல்திறன் சோதனைகள் – அதாவது Pulmonary Function Tests (PFT) எடுத்துப் பார்க்க வேண்டும். இந்த இரண்டு சோதனைகளும் மிக அவசியம்.

X-ray மூலமாக உடற்கூறியலால் நுரையீரல் வீக்கமாக இருக்கிறதா அல்லது சுருங்கிக் காணப்படுகிறதா என்பதைக் கண்டறிய முடியும். நுரையீரல் செயல்திறனை அறிய உதவும் Spirometry Test மூலம் நுரையீரலின் திறன் மற்றும் மூச்சுக்குழலின் சுருங்கி விரியும் தன்மை எப்படி இருக்கிறது என்பதை முக்கியமாகப் பரிசோதிக்க வேண்டும். தேவைப்பட்டால் Arterial Blood Gas Analysis (ABG) என்ற ரத்தப் பரிசோதனையை மேற்கொண்டு ஆக்ஜிஜன் குறைபாடு இருக்கிறதா, Co2 அதிகமாக இருக்கிறதா என்பதையும் கண்டறிவோம். அவசியமெனில் CT Scan பரிசோதனை செய்து எந்த இடங்களில் எல்லாம் COPD பாதித்திருக்கிறது என்பதைக் கண்டறியலாம்.

இந்த அடிப்படையில் இந்த நான்கு பரிசோதனைகளும் COPD-க்கு முக்கியமானவை.

1. Chest X-ray

2. Pulmonary Function Tests(PFT)

3. Arterial Blood Gas Analysis(ABG)

4. CT Scan

COPD-யில் எத்தனை நிலைகள் உள்ளன?

அறிகுறிகள், நுரையீரல் செயல்திறனை அடிப்படையாக வைத்து COPD-யில் நிலைகளை 3 வகைகளாகப் பிரிக்கலாம். அவை Mild Stage, Moderate Stage, Severe Stage.

Mild Stage என்பது லேசானது. Moderate Stage என்பது மிதமானது. Severe Stage என்பது தீவிரமானது.

COPD காரணமாக மரணம் நிகழ வாய்ப்புண்டா?

COPD-க்கு சரியாகச் சிகிச்சை எடுக்கவில்லை என்றால், நோய்த்தொற்று, நுரையீரல் செயலிழப்பு, இதயச் செயலிழப்பு காரணமாக மரணம் ஏற்படக்கூடிய அபாயம் மிக அதிகம். ஆகவே, கவனம் அவசியம்.

இந்த கட்டுரையில் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) பற்றிய அறிமுகத்தை தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டுரையில் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்க்கான (COPD) சிகிச்சைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read