Homeஉடல் நலம்முதுமையின் இளமைதனிமையில் வசிக்கும் முதியோர்களே... கவனம்!

தனிமையில் வசிக்கும் முதியோர்களே… கவனம்!

கூட்டுக்குடும்ப முறை சிதைந்து கொண்டே இருக்கிறது. உலகம் முழுக்க வேலைவாய்ப்புகள் தேடி பலரும் இடம்பெயர்வதால், தனித்து வாழும் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வாழ்க்கையை அவர்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை. குடும்பச் சூழ்நிலையின் காரணமாகத் தனித்தே தள்ளப்பட்டார்கள். பொதுவாக அவர்கள் மகிழ்ச்சியுடன் காலத்தைக் கடப்பதில்லை. பழைய நினைவுகள் ஒரு பக்கம் வாட்டும். ஒவ்வொரு நிமிடமும் தங்கள் நிலையை எண்னி அச்சம் கொள்வார்கள். தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற பயத்துடனே தனிமையில் காலம் தள்ளுகிறார்கள்.

முதுமையில் தனிமை துயரம்தான். என்றாலும், அந்தச் சூழலில் பாதுகாப்பாக வாழ்வது நம் கையில்தான் உள்ளது. இதோ அதற்குச் சில வழிமுறைகள்…

தொடர்ந்து உங்களைப் பரிசோதித்து வரும் மருத்துவரின் ஆலோசனை பெற்று, அவசர காலத்தில் தேவைப்படும் மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்ளவும்.

உடல் பாதுகாப்புக்கு…

  • 60 வயது தாண்டிய முதியவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையும், 70 வயதைத் தாண்டியவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் முழு உடல் பரிசோதனைகள் செய்து கொள்வதன் மூலம் திடீரென ஏற்படும் உடல்நலக் கோளாறுகளிலிருந்து தப்பிக்கலாம்.
  • நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் திடீரென்று சர்க்கரையின் அளவு குறைந்தால், மயக்கம் வந்து உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். சாக்லெட், சர்க்கரை, குளிர்பானம் போன்றவற்றை உடனடியாகக் கொடுக்க வேண்டும். இதை வீட்டில் உள்ளவர்களிடமோ, அல்லது வேலைக்காரர்களிடமோ முன்கூட்டியே சொல்லி வைப்பது நல்லது.
  • திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டால், ‘அய்சார்டில்’ 5 மி.கி. மாத்திரையை நாக்குக்கு அடியில் வைத்துக் கொண்டால் உடனே வலி குறைந்து விடும். அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வரை இது உதவியாக இருக்கும். டாக்டரின் ஆலோசனையுடன் இதைக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.
  • மருத்துவரை ஆலோசித்து இன்ஃபுளூயன்ஸா மற்றும் நிமோனியா நோய்களுக்கு தடுப்பு ஊசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம்.
  • குடும்ப மருத்துவரின் கைப்பேசி எண் மற்றும் முகவரியைக் கையில் வைத்திருங்கள். அவசர காலத்தில் உதவ பக்கத்து வீட்டுக்காரர், வேலைக்காரர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனரிடம் இதைக் கொடுத்து வைப்பது நல்லது.
  • அவசர தொலைபேசி அழைப்புக்கான எண்களை வீட்டில் ஒரு பலகையில் எழுதி வைப்பது நல்லது. முதியோர்களுக்கான ஹெல்ப் லைன் எண் 1253 (சென்னைக்கு மட்டும்), 1800 180 1253 (மற்ற ஊர்களுக்கு), ஆம்புலன்ஸ் 108 போன்றவற்றையும் அதில் குறித்து வைக்கவும்.
  • தொடர்ந்து உங்களைப் பரிசோதித்து வரும் மருத்துவரின் ஆலோசனை பெற்று, அவசர காலத்தில் தேவைப்படும் மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்ளவும். எந்த மருந்து எந்த நோய்க்கு எனத் தெளிவாக எழுதி வைத்தால், அவசர காலத்தில் உதவ முன் வருபவர்களுக்கு வசதியாக இருக்கும்.
  • அடிக்கடி ஏற்படும் சிறு சிறு தொல்லைகளுக்கு குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்துகளை வாங்கி கைவசம் வைத்துக் கொள்ளவும். உதாரணம்: தலைவலி, காய்ச்சல், சளி, வயிற்றுத் தொல்லைகள் போன்றவை.
  • நல்ல காற்றோட்டமான இடத்திலேயே எப்போதும் இருக்கவும். அதிக குளிர், அதிக வெயில்… இரண்டையும் தவிர்க்கவும்.

உயிர் மற்றும் உடைமைகள் பாதுகாப்புக்கு:

  • தனியாக வசிக்கும் முதியவர்களைத்தான் திருடர்கள் மற்றும் சமூக விரோதிகள் அதிகம் தாக்குகிறார்கள். குறிப்பாக இரவைவிட பகலில்தான் முதியவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
  • அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதையோ, வீட்டுக்குள் அனுமதிப்பதையோ தவிர்க்க வேண்டும். கதவுகளைக் கொஞ்சமாகத் திறக்கும்விதமாக, கதவுக்கும் வாசக்காலுக்கும் இடையே சங்கிலி பொருத்திக்கொள்ளவும்.
  • வாஷிங் மெஷின் சர்வீஸ், மின் பொருட்கள் பழுது பார்ப்பது என யாராவது வரும்போது, தெரிந்தவர்கள் யாரே ம் உடன் இருக்குமாறு ஏற்பாடு செய்துகொள்ளவும்.
  • நீங்கள் தனியாக வசிக்கிறீர்கள் என்ற தகவலை, உங்களுக்கு அறிமுகம் இல்லாத எவரிடமும் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டாம்.
  • வீட்டில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
  • ஜன்னல்களுக்கு திரைச்சீலை பொருத்தவும். வெளியிலிருந்து யாரும் உங்களை நோட்டமிடாமல் அது தடுக்கும்.

வீட்டில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

  • மின்சார செலவைக் குறைப்பதாக நினைத்து, இரவில் விளக்கு போடாமல் இருக்க வேண்டாம். வெளிச்சம் அவசியம்.
  • வீட்டில் கைத்தடி மற்றும் டார்ச் லைட் அவசியம். சற்று அதிக சத்தம் எழுப்பக்கூடிய அலாரமும் வைத்துக் கொள்ளலாம்.
  • வெளியில் செல்லும்போது, நீங்கள் இருக்கும் சூழலை நன்கு கவனிக்கவும். சந்தேகப்படும்படியாக யாராவது அருகில் இருந்தால், எச்சரிக்கை.
  • பயணங்களில் தூங்க வேண்டாம். பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில் தனியாக இருக்க வேண்டாம். கூட்டத்துடன் கூட்டமாக இருங்கள்.
  • வெளியில் செல்லும்போது தேவை இல்லாமல் அதிக நகைகளை அணிய வேண்டாம். விழாக்களுக்கு முடிந்தவரை தனியாகச் செல்ல வேண்டாம்.
  • இரவு நேரங்களில் வெளியில் சென்றால், நம்பிக்கையானவர்கள் யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்லவும்.
  • வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் டிரைவர் முன்பு பணம் மற்றும் நகைகளைப் பற்றிப் பேச வேண்டாம். உங்களிடம் பணம் மற்றும் நகைகள் அதிகம் இருப்பதாக யாரிடமும் காட்டிக் கொள்ள வேண்டாம்.
  • நகைகளைப் பாதுகாப்பாக வங்கி லாக்கரில் வையுங்கள். வெளியில் செல்லும்போது பர்ஸில் பணம் எடுத்துச் செல்வதைவிட, கண்களை உறுத்தாத துணிப்பை போன்றவற்றில் எடுத்துச் செல்லலாம்.
  • வீட்டில் வளர்ப்பு பிராணிகள் (உதாரணமாக, நாய்) வைத்துக் கொள்ளலாம்.
  • பாதுகாவலர்கள் மற்றும் வேலையாட்களை நியமிப்பதில் சற்று அதிக கவனம் தேவை.
  • நீண்ட நாட்களுக்கு வெளியூர் செல்வதென்றால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்துவிட்டுச் செல்லுங்கள்.
  • வீடு மாறிப் புது வீட்டுக்குச் சென்றால், பூட்டுகளை புதிதாக வாங்கிப் பயன்படுத்துங்கள்.
  • மகன், மகள் மற்றும் உறவினர்கள் உங்களைத் துன்புறுத்துவது தெரிந்தால் உடனே காவல் நிலையத்தில் தெரிவிப்பது நல்லது.
  • அக்கம் பக்கத்தினரிடம் நல்ல உறவை வளர்த்துக் கொள்வது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read