இன்றைய நவீன உலகில் பல முன்னேற்றங்கள் பல துறைகளில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவத் துறையில் முன்னேற்றங்கள் அசுர வேகத்தில் உள்ளது என்றால் மிகையாகாது.
குறிப்பாக முதியோர் நலனில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றிற்கு முழு முதல் காரணம் என்றால் அது முதியோர் நல மூத்த மருத்துவர் பத்மஸ்ரீ வி.எஸ். நடராஜன் அவர்களைத் தான் சாறும்.
அரசு இயன்முறை மருத்துவத்தின் சிறப்பை அறிந்து எல்லா மாவட்டத் தலைநகர மருத்துவமனைகளில் இயன்முறை சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
முதிர் வயதில் முதியோருக்கு அநேக பிரச்சனைகள் இருந்தாலும் இயல்பாக எல்லோருக்கும் காணப்படும் ஒரு பிரச்னை எலும்பு தேய்மானம் (ஆஸ்டியோ போரோசிஸ்) மற்றும் மூட்டுவலியாகும்.
இது அதிக உடல் எடையுடையவர்களுக்கு, படுக்கையிலேயே இருப்போருக்கு, எலும்பு மஜ்ஜை வலுவிழந்தவர்கட்கு மற்றும் வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கட்கு அதிக பாதிப்பைத் தரும்.

இயன்முறை சிகிச்சை மூலம் அவர்கட்கு சில உடற்பயிற்சிகள் மற்றும் நவீன சாதனங்கள் மூலம் நல்ல பலன் கிடைக்கும். முதிர் வயதில் உடல் தசைகள் வலுவிழப்பதால் தசைப்பிடிப்பு மற்றும் தசைபிறழ்சி ஏற்படும்.
இதனால் எளிதில் தடுமாறி விழுந்து விடுவார்கள் (Fall). அத்தகையோருக்கு இயன்முறை சிகிச்சை மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வயது ஆக ஆக மூளையின் செயல்திறன் குறைந்து ‘டிமென்சியா’ என்னும் மறதி நோய் ஏற்படும். மூளையின் செயல்திறனை தூண்டக்கூடிய (Brain stimulation) சிகிச்சை இயன்முறை மருத்துவத்தில் உண்டு.
மூளையில் டோபோமின் வேதிச்சுரப்பு குறைவதால் நரம்புகளின் செயல்பாடு குறைந்து தளர்ச்சி ஏற்படும். இதனால் முதியோருக்கு ‘பார்க்கின்சன்ஸ்’ என்னும் உதறுவாத நோய் ஏற்படும். இதை இயன்முறை மருத்துவம் மூலம் சீர்செய்ய முடியும்.
வயதானோர் தம் வாழ்க்கைத் துணையை இழக்கநேரிட்டால் தனிமை உணர்வு அவர்களை அதிகமாக வாட்டும். இதனால் அவர்கள் மனச்சோர்வு நிலைக்குத் தள்ளப்படுவர்.
Click to Read: கோடையில் முதியோர் கடைப்பிடிக்க வேண்டியவை!
அத்தகையோருக்கு மகிழ்வூட்ட ‘கிரேனியல் ஸ்டிமுலேஷன்’ சிகிச்சை முறை இயன்முறை மருத்துவத்தில் உண்டு. முதியோர் முதிர்வு காரணமாக எந்த வலியையும் எளிதில் தாங்கக்கூடிய நிலையில் இருக்கமாட்டார்கள்.
அத்தகையோருக்கு இயன்முறை மருத்துவத்தில் ‘வலி நீக்க சிகிச்சை’ (Pain Management) உண்டு. ஆஸ்டியோபதி சிகிச்சை மூலம் மூளையை ஓய்வு நிலைக்கு கொண்டு சென்ற வலியை உணராவண்ணம் செய்ய இயலும்.
இச்சிகிச்சை மேலும் மைக்கிரேன் எனும் ஒற்றைத் தலைவலியை நீக்க உதவும். இதய அறுவை சிகிச்சை மற்றும் வேறு எந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னும் தசைகளை மீட்டெடுக்க இயன்முறை மருத்துவத்தில் வழிவகைகள் உண்டு.
கேன்சர் எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ‘கீமோதெரபி’ செய்து கொண்டவர்களுக்கு ஏற்படும் தசைவீக்கத்தை இயன்முறை சிகிச்சை முறையால் சீர் செய்யலாம்.
சிலருக்கு அஜீரணம், வயறு உப்புசம் (Irritable Bowel syndrome) போன்ற உபாதைகள் நீங்க இயன்முறை மருத்துவத்தில் விசரல் ஆஸ்டியோபதி சிகிச்சை நல்ல பலனளிக்கிறது.

வேலை நிமித்தமாக நம் உடலின் ஏதோ ஓர் உறுப்பு அதிக செயல்பாடு கொண்டால் வரும் வீக்கம், வலி, பிடிப்பு இவற்றை இயன்முறை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
‘உலர் ஊசி மின்தூண்டல்’ சிகிச்சை மூலம் உடலின் தூண்டு புள்ளிகள் (Trigger points) கண்டறியப்பட்டு அவற்றை எளியமுறையில் சரி செய்யலாம்.
முதியோருக்கு அதிக ரத்த அழுத்தம் காரணமாக ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் ஏற்பட்டு கை, கால் முகம் இவை ஒரு பக்கமாக இழுத்துக் கொள்வதால் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்படுகிறது.
இதற்கு இயன்மறை மருத்துவத்தில் ‘Stroke Rehabilitation exercise’ எனும் சிகிச்சை முறை உண்டு. முதியோருக்கு சிறுநீர் வெளியேறும் பாதையிலுள்ள ஸ்பிங்டர் தசைகள் செயலிழப்பதால் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து சிறுநீர் அடிக்கடி வெளியேறி அவர்களின் ஆடைகளை ஈரமாக்கிவிடும்.
இக்குறைபாட்டிற்கு ‘Urinary Incontinence’ என்று பெயர். இதை சரிசெய்ய ‘பெல்விக் கேர் பயிற்சி’ மற்றும் ‘பெல்விக் ஸ்டிமுலேஷன்’ சிகிச்சை முறைகள் இயன்முறை மருத்துவத்திலுண்டு.
Click to Watch: 80 வயதிலும் மனநிறைவு பெறும் வழி
முக்கியமாக முதியோரின் தூக்க நேரம் குறைந்து தூக்கமின்மை நோய் (Insomnia) ஏற்படுகிறது. இதை சீர் செய்ய மற்றும் Osteopathy சிகிச்சைகள் நல்ல பலனளிக்கிறது.
மனிதனின் உடல்நலம் மட்டுமின்றி மனநலனையும் சீர் செய்யும் செயல்திறன் இயன்முறை சிகிச்சைக்கு உண்டு.
சீரான காலத்திற்கு இச்சிகிச்சை முறைகளை முறையாகக் கடைபிடித்தால் நிச்சயமாக எல்லாவித உபாதைகளிலிருந்தும் முழுமையான சுகம் பெறலாம்.
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதற்கிணங்க நோய் நீங்கி சுகம் பெற்று இனிதே வாழ அனைவரையும் உளமாற வாழ்த்துகிறேன்.
கட்டுரையாளர்
திரு. டேவிட் விஜயகுமார்
முதியோர் இயன்முறை சிகிச்சை நிபுணர்