ஈரோடு தமிழன்பன்
வயதுகளின் தொகுப்பல்ல
வாழ்க்கையின் தொகுப்பே
முதியோர்கள்
காலம் முதியோர்
கனவுகளில் ஞானத்தைச்
சேகரித்துக்கொள்கிறது
அவர்களின்
சில நரம்புகளை மீட்டி
இசை வெள்ளப்பெருக்கின்
இன்பச்சிலிர்ப்பில்
தன்னை மறக்கிறது.
முதியோரை
மண் எவ்வித முணுமுணுப்பும்
இல்லாமல் தாங்குகிறது.
அவர்களே அதன் மூத்த
குழந்தைகள் அல்லவா?
வயதைக்
கழித்தவர்கள் அல்ல அவர்கள்
வாழ்க்கையை உலகுக்காகச்
செலவிட்ட கொடையாளர்கள்!
மூத்தவர் கைகளில்
காசு கொடுப்பதைவிட உங்கள்
கைகளைக் கொடுங்கள்.
மாத்திரை
மருந்து கொடுப்பதைவிட உங்கள்
மனத்தைக் கொடுங்கள்.
அவர்களும்
உங்களைப் போல இருந்தவர்கள்தாம்
நீங்களும் காலத்தால்
கனிவீர்கள் அவர்களைப் போல்.
சபிக்கப்பட்டதால்
முதியவர்களாய் ஆகவில்லை
வாழ்க்கை தந்த வரம்
அவர்கள் வயதுகளின் வளர்ச்சி.
காலத்திடம் அவர்களைக்
கௌரவமாக ஒப்படையுங்கள்
கலவரப் படுத்தாதீர்கள்.
பேரர்கள் பேத்திகள் விளையாடும்
பாசத்தொட்டில்கள் தாத்தா பாட்டிகள்
தூக்கி யெறியாதீர்கள்.
முதியவர்களை மதிப்பவர்களே
முதுமையில்
மதிக்கப்படுவார்கள்.
அன்போடு
அவர்களுக்கு விடைகொடுங்கள்
அவசரப்படாதீர்கள்
உங்கள் நினைவுகளோடு
அவர்கள் புறப்படட்டும்
அவர்கள் நினைவுகளோடு
உங்கள் வாழ்வு தொடரட்டும்
உறவுகளும் உள்ளன்பும் தவிர
உலகில்
உன்னதம் வேறென்ன சொல்லுங்கள்.
Related