மாதவிடாய் என்பது பெண்கள் பூப்பெய்திய நாள் முதல் மாதவிடாய் நிறைவுபெறும் வரை கிட்டத்தட்ட 30-லிருந்து 35 ஆண்டுகள் வரை சந்திக்கக்கூடிய ஓர் இயல்பான நிகழ்வு. பல குடும்பங்களில் இதுபற்றி ஒரு தெளிவின்மை உள்ளது.
சிலருக்கு மூடநம்பிக்கைகளும் உண்டு. அதனால், வீட்டிலுள்ள பெரியவர்களே (குறிப்பாக பாட்டிகள்) இது பற்றி மகள்களுக்கும் பேத்திகளுக்கும் உணர்த்த வேண்டும். அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டிய அடிப்படை விஷயங்களை இப்போது அறிந்துகொள்வோம்.
உடலியங்கியல் அடிப்படையில் பார்த்தால் மாதவிடாய் நாள்களில் ஒரு சிறு சோர்வுக்கு உட்பட்டு இருப்பது இயல்பான ஒன்றே. அந்த நாள்களில் சரியான அளவில் ரத்தப்போக்கு இருக்க வேண்டும்.
மாதவிடாய் முடிவடையும்போது அந்த ரத்தப்போக்கு குறைந்து, முற்றிலுமாக நின்றுவிட வேண்டும். இந்த நிகழ்வு மிகச்சிறப்பாக நடந்தால்தான் அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருக்கும்.
மாதவிடாய் என்பது குழந்தைப்பேறு கிடைப்ப தற்காக உருவாகியுள்ள அருமையான இயற்கைச் செயல்பாடு. அதுமட்டுமல்ல…
சரியான ரத்தப்போக்கு சரியான அளவில் சரியான இடைவெளியில் நிகழ்ந்தால் அந்தப் பெண்ணின் சிறுநீரகம், இதயம், குடல் போன்ற உறுப்புகள் அனைத்தும் முறையாகச் செயல்படும்.
தொடங்கித் தொடரும்!
பெண்களுக்கு 12 அல்லது 13 வயதில் மாதவிடாய் என்பது பூப்பெய்தல் என்ற நிகழ்வாகத் தொடங்குகிறது. அதற்கடுத்து 28 நாட்களுக்கு ஒருமுறை இரண்டு நாட்களோ, மூன்று நாட்களோ, நான்கு நாட்களோ அவர்களுடைய மரபைப் பொறுத்து மாதவிடாய் நிகழும்.
முதல் சில நாட்களில் குறைவான ரத்தப்போக்கும், இரண்டாவது மூன்றாவது நான்காவது நாட்களில் அதிகமான ரத்தப்போக்கும் நிகழும். நான்காவது நாளுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஐந்தாவது நாள் வரும் போது முற்றிலுமாக நின்றுவிடும்.
READ ALSO: வயதானால் காது கேளாமல் போவது ஏன்?
இதுதான் சரியான மாதவிடாய்
அப்படியில்லாமல் 40 முதல் 60 நாளுக்கு ஒரு முறை மாதவிடாய் வருதல், 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் வந்தாலும் ரத்தப்போக்கு முறையாக இல்லாமல் இருத்தல், 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் நிகழ்ந்தாலும் 5 நாட்கள் முதல் 7 நாட்கள் ரத்தப்போக்கு நீடித்தல்… இப்படிப்பட்ட எல்லா நிகழ்வுமே ஏதேனும் ஒரு பிரச்னையைதான் குறிப்பிடுகிறது.
மாதவிடாய் முடிவு
இதுவும் ஒவ்வொரு மரபைப் பொறுத்தும், ஒவ்வொரு பெண்ணைப் பொறுத்தும் ஒவ்வொரு விதமாக அமையும். ஆசியப் பெண்கள் என்று எடுத்துக்கொண்டால் 48 வயது முதல் 50 வயது வரை மாதவிடாய் முடிவடையக்கூடும்.
முடியக்கூடிய காலகட்டத்தில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படலாம். அதிக ரத்தப் போக்கு ஏற்படலாம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நின்றுவிடும்.
மாதவிடாய் முடியக்கூடிய காலத்தில் அந்தப் பெண்ணுக்கு ஹார்மோன் குறைவு என்பது இருக்கும். அந்த ஈஸ்ட்ரோஜன் சத்து குறைவதால் பெண்களுக்கு மன அழுத்தம், மன நடுக்கம் இதுபோன்று ஏற்படலாம்.
பூண்டு, சோயா இதையும் எடுத்துக் கொண்டால் மாதவிடாய் முடியும் போது அந்த பதற்றத்தில் இருந்து வெளியேறலாம்.
அழுத்தம் அதிகம்
இன்றைக்குப் பார்த்தோமென்றால் மாதவிடாய் நேரத்திலும் ஓடி ஒடி பல வேலைகளைச் செய்கிறார்கள். இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மூலம் வெளியில் பயணிக்கிறார்கள்.
அதோடு, மன அழுத்தம், உடல் அழுத்தம் எனப் பலவற்றையும் தாங்குகிறார்கள். இதுபோன்ற காலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து குறையலாம். அல்லது வேறு பல பிரச்னைகள் ஏற்படலாம்.
ஆகவே, இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை கொடுக்க வேண்டும். முக்கியமாக ஓய்வு கொடுக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி செல்லும் இளம்பெண்களாக இருந்தால் அவர்களுக்கு கருப்பையை வலுப்படுத்தக் கூடிய உணவுகளை அளிக்கவேண்டும்.
READ ALSO: ஆண்களைவிட பெண்கள் எளிதில் நோயிலிருந்து குணமடைய முடியுமா?
உணவில் கவனம் வேண்டும்!
இன்றைய காலகட்டத்தில் பதினொரு வயதிலேயே பூப்பெய்தல் நடைபெறுகிறது. இதனால் கருப்பைக்குத் தேவையான உளுந்தை உணவாக கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அந்த உளுந்தை களியாகவோ உளுந்து சாதமாகவோ, உளுந்து துவையலாகவோ கொடுக்கலாம்.
தென் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் அந்தப் பகுதியில் ஒரு பெண் பூப்படைந்து விட்டால் மாமன்கள் அனைவரும் சீர்வரிசையாக உளுந்து சம்பந்தமான பொருட்களை சமைத்து எடுத்து வருவார்கள்.
அதோடு, பனங்கருப்பட்டி, எள்ளு, பப்பாளி இவற்றையெல்லாம் அவர்களுக்குக் கொடுத்தால் கருப்பையானது நன்றாக இருக்கும். இவை ஹார்மோன்கள் சரியாக சுரப்பதற்கும் உதவியாக அமையும்.
மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு இரும்புச் சத்து குறையும் என்பதால் அத்திப்பழம், கறிவேப்பிலை, உலர் திராட்சை போன்றவற்றை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ராகி, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை அவ்வப்போது எடுத்துக் கொண்டால் இரும்புச்சத்தானது உணவு மூலமாகவே கிடைத்துவிடும்.
அதிக ரத்தப்போக்கு
ஒருவேளை ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் அதை நிறுத்துவதற்கு துவர்ப்புமிக்க கடுக்காய், வாழைப்பூ, சுண்டை வற்றல் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
நல்ல உணவையும் உடற்பயிற்சியையும் எடுத்துக் கொண்டால் மாதவிடாய் காலம் என்பது பிரச்னைக்குரிய காலமாக இருக்காது!