முதுமையை முறியடிக்க 60 வழிகள்!

முதுமையின் இளமை 60 வயதிலிருந்து ஆரம்பம், உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணிக் காத்து முதுமையில் ஆரோக்கியமாக வாழ இதுதான் சிறந்த தருணம். முதியோர் நல மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன் இந்த நூலில் கூறும் எளிய வழிமுறைகளை பின்பற்றுங்கள். காலம் செல்லச் செல்ல முதுமைப் பருவம் ஒரு வசந்த காலமாக மாறுவதை நீங்களே உணர்வீர்கள்.
ஹெல்த் செக்கப்

வருமுன் காக்க காலமுறைப்படி மருத்துவ பரிசோதனை அவசியம்!
நோயின் தொல்லைகள் தலைகாட்டும் வரை காத்திருக்க வேண்டாம். மறைந்து தாக்கும் பல நோய்களை கண்டறிய இதுவே சிறந்த வழி. இதன் மூலம் பல நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தக்க சிகிச்சை அளிக்கலாம். அவற்றை மேலும் வளராமல் தடுத்துக் கொள்ளலாம்.
சுய மருத்துவம்
டாக்டரின் ஆலோசனை இல்லாமல், தானாகவே மருந்து உட்கொள்வது தற்கொலைக்குச் சமம். இப்பழக்கத்தைத் தவிர்ப்பது அவசியம்.
உணவு

வயிறு முட்ட உண்ணாமல் குறைவான உணவை உண்டு ஆரோக்கியத்துக்கு வித்திடுங்கள். காலை சற்று அதிகமான சிற்றுண்டியும், மதியம் மிதமான உணவும், இரவில் குறைந்த அளவு உணவும் உண்பது மிகவும் நல்லது.
உறக்கம்

உணவு உண்ட உடனேயே படுக்க செல்ல வேண்டாம். அதனால் நெஞ்சு எரிச்சல், அஜீரணம் மற்றும் சில நேரங்களில் மாரடைப்பும்கூட ஏற்படலாம். சுமார் 1-2 மணி நேரம் கழித்து படுக்கைக்கு செல்லுங்கள்.
நீர் நம் உயிர்!

வயதான காலத்தில் தாக உணர்ச்சி குறையும். அதனால் தண்ணீர் குடிப்பது குறைந்து, உடல் பலவீனம் அடையலாம். குறைந்தது முன்று லிட்டர் தண்ணீரை அவசியம் பருக வேண்டும். இதயம் மற்றும் சிறுநீரக நோயாளிகள் டாக்டரின் ஆலோசனைப்படி தண்ணீர் பருக வேண்டும்.
சிக்கல் தவிர்க்கலாம்!
உடற்பயிற்சி, தேவையான அளவு தண்ணீர், குறைந்த அளவு மாத்திரைகள், சிறுதானியங்கள் சேர்ந்த உணவு மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள் மூலம் மலச்சிக்கலைத் தவிர்க்க முடியும்.
நடை நல்லது!
தினமும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சியே பல நோய்களை விரட்டும் சிறந்த டானிக்! தினமும் மூன்றிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் நடப்பது அல்லது முப்பதிலிருந்து நாற்பத்து ஐந்து நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வது சிறப்பு.
பருமனா?
உடற்பருமன் பல நோய்களின் நண்பன். எடையைக் குறைப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுக்கவும்.
எடை குறையுதா?
திடீரென்று எடை குறைந்தால், முதுமையின் விளைவு என்று அலட்சியப்படுத்த வேண்டாம். ஆரம்ப நிலையில் உள்ள காச நோய். நீரிழிவு அல்லது புற்றுநோயின் அறிகுறியாகக்கூட அது இருக்கலாம்.
தைராய்டு
பெண்களுக்கு எடை அதிகரித்தால், தைராய்டு தொல்லை ஒரு காரணமாக இருக்கலாம். டாக்டரிடம் கூறி தைராய்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
பசி இல்லையா?
வயதானால் பசி சற்று குறையும். மாறாக பசி அதிகரித்தால், சில நோய்களும் காரணமாகலாம். உதாரணம்: தைராய்டு தொல்லை, நீரிழிவு, குடல் புண், சில மாத்திரைகள்… அப்படி இருப்பின் டாக்டரை ஆலோசிக்கவும்.
உயிர் காக்கும் அட்டை!
வெளியே செல்லும் போது (சிறிது தூரம் என்றாலும்) உங்களின் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல மறவாதீர்கள். சில வேளைகளில் இது உயிரைக்கூட காக்க உதவும்.
வலியின்றியும் வரலாம் மாரடைப்பு
நெஞ்சுப் பகுதியில் சிறு சங்கடம் இருந்தாலும் உடனே டாக்டரிடம் சென்று ஈ.சி.ஜி. எடுத்து பார்ப்பது நல்லது. அஜீரணக் கோளாறு என்று அலட்சியப்படுத்த வேண்டாம்.
தலைக்காயம்
தலையில் சிறிது அடிபட்டால்கூட அதை அலட்சியப்படுத்தக் கூடாது. அப்போது ஒன்றுமில்லாமல் இருக்கலாம். ஆனால், அந்த ரத்தக் கசிவு தொடர்ந்து இருந்தால் பக்கவாதம், வலிப்பு அல்லது மறதி நோய் கூட வர வாய்ப்பு உள்ளது.
வலிப்பு
வயதான காலத்தில் வலிப்பு நோய் போன்ற தொல்லை ஏற்பட்டால் பயப்படவேண்டாம். ரத்தம் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் அதன் காரணம் கண்டறிந்து தக்க சிகிச்சை அளித்து மீண்டும் வலிப்பு வராமல் செய்ய முடியும்.
எழுதலும் விழுதலும்
படுக்கையிலிருந்து வேகமாக எழுந்து உடனே நடக்கக்கூடாது. படுக்கையில் இருந்து
முதலில் மெதுவாக எழுந்து உட்கார வேண்டும். பிறகு சற்று நேரம் கழித்து மெதுவாக நிற்கவேண்டும். அதன் பின்பே நடக்க வேண்டும். இது படுக்கையிலிருந்து எழும்போது ஏற்படும் மயக்கத்தையும், கீழே விழுதலையும் தடுக்கும்.
நடுக்கம்
கைகளில் சிறிது நடுக்கம் ஏற்பட்டாலும் முதுமையின் விளைவு என்று அலட்சியம் வேண்டாம். அது உதறுவாதம் என்கிற பார்க்கின்சன்ஸ் நோயினால் கூட இருக்கலாம். இதை தெரிந்துகொள்ள மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
ஆஸ்துமாவுக்கு அவசியம்
ஆஸ்துமா நோயாளிகள் எப்பொழுதும் கைவசம் இன்ஹேலர் அல்லது மாத்திரையை வைத்திருக்க வேண்டும். எந்த அளவுக்கு சிகிச்சை பெறுகிறார்களோ அந்த அளவுக்கு ஆஸ்துமா விரைவில் குணமடையும்.
புகை பகை
புகை பிடிப்பதால் மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல், வயிறு. சிறுநீர்ப்பையில் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் வரும் அபாயம் அதிகம். கை, கால்களில் ரத்த ஓட்டம் குறைதலும், சிறுநீரகக் கோளாறும்கூட புகை பிடிப்பதால் ஏற்படுகின்றன. அதனால், அந்தப் பழக்கத்தை அறவே நிறுத்த வேண்டும்.
மதுவில் கவனம்
அதிக அளவு மது அருந்துவதால் பல தீமைகள் உண்டாகும். கீழே விழுதல், கல்லீரல் நோய், வயிற்றில் புண், சத்துணவுக் குறைவு, மனநிலையில் மாற்றம், விபத்து, அறிவுத்திறன் வீழ்ச்சி என பல பிரச்னைகளுக்கும் மதுவுக்கும் தொடர்பு உண்டு. எனவே, மது விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
குரலில் மாற்றம்
குரல் தொடர்ந்து மாறி வருகிறதா? உடனே டாக்டரிடம் சென்று தொண்டையில் புற்றுநோய் ஏதும் உள்ளதா என்று தெரிந்துகொள்ளவும். முக்கியமாக புகையிலை போடுபவர்கள், புகை பிடிப்பவர்களுக்கு குரல் மாற்றம் வரக்கூடாது.
வராமல் தடுக்கலாம்!
ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் யாரேனும் 50 வயதுக்குள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையத்தை அணுகவும். மரபு அணு பரிசோதனை மூலம் அதைக் கண்டறிந்து அந்நோயை வராமலேயே தடுக்கமுடியும்.
எதிர்ப்பு சக்திக்கு ஏற்ற உணவுகள்
வயது ஆக ஆக நோய்களைத் தடுக்கும் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. ஆகையால், முதுமையில் தொற்றுநோய்கள் வர வாய்ப்பு அதிகமாகிறது. வயதான காலத்தில் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கும் மற்றும் இறப்பதற்கும்
தொற்றுநோய்கள் ஒரு முக்கிய காரணம். உடலில் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க நெல்லிக்காய், ஆரஞ்சு, எலும்மிச்சைப் பழம், பாதாம் மற்றும் கொட்டை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
முதியவர்களுக்கும் தடுப்பு ஊசி!
நிமோனியாவுக்கு தடுப்பு ஊசி போட்டுக் கொண்டு, பின்னாளில் நிமோனியாவினால் ஏற்படும் தொல்லைகளையும் இறப்பையும் தவிர்க்கலாமே! இந்த ஊசியினால் பக்கவிளைவுகள் ஏதும் கிடையாது. இன்ப்ளூயன்ஸா, டெட்டனஸ், டைபாய்டு போன்ற நோய்களுக்கும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளலாம்.
எலும்பின் வலிமை
எலும்பு வலிமை இழத்தலை தவிர்க்க சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சூரியன் அளிக்கும் சக்தி
நமது உடலில் சூரிய ஒளி தொடர்ந்து படும்பொழுது வைட்டமின் டி கிடைக்கிறது. சுண்ணாம்புச் சத்தை குடலில் இருந்து உறிஞ்ச வைட்டமின் டி மிகவும் அவசியம். அதனால் தினமும் 30 நிமிடமாவது உடலை வெயில் படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
வேண்டாமே பெயின் கில்லர்!
இரவு பகலாக எந்த ஓய்வும் இன்றி நமது உடலை சுத்தமாக வைத்திருக்கும் சிறுநீரகத்தை பாதுகாப்பது நமது கடமையல்லவா? உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கு தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து வலிநிவாரணி மாத்திரைகளை உண்பதைத் தவிர்த்து, உப்பின் அளவை வெகுவாக குறைத்து தண்ணீர் அதிகமாக பருகினாலே போதும், சிறுநீரகம் நம்மை பல்லாண்டு வாழ வைக்கும்.
காதில் என்ன பிரச்னை?
காது மந்தமானால், முதுமையின் விளைவு என்று அலட்சியப்படுத்த வேண்டாம். காதினில் மெழுகு அழுக்கு சேர்ந்து அடைத்து இருந்தாலும் காது கேட்கும் திறன் குறையும். உடனே சிறப்பு மருத்துவரை நாடவும்.
பல் போனால் சத்தும் போகும்!
பல் போனால் சொல்லும், முகப் பொலிவும், சத்துக் குறைவும் ஏற்படலாம். பல் இல்லாத முதியவர்கள் செயற்கைப் பல்லை அவசியம் பொறுத்திக் கொள்ளவும்.
மனமே மாமருந்து!
‘இந்த நோய் என்னை என்ன செய்துவிடும்? வயதானால் இதெல்லாம் வருவது இயல்பு’ என்று ஒரேடியாக அலட்சியப்படுத்த வேண்டாம். நோய்கள் வராமல் இருந்தால் நல்லது; வந்துவிட்டால் அதற்கு தக்க சிகிச்சை எடுத்தால் போச்சு என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறர் நலம் காப்போம்!
மனிதப்பிறவி எடுப்பதே மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதற்குத்தான். அப்படி இருக்கையில் முதுமையில் தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டிருத்தல் கூடாது. மற்றவர்களுக்காக வாழும் ஒரு நல்லெண்ணத்தை (thinking outside yourself) ஆழ்மனத்தில் பதியவிட வேண்டும். மற்றவர்களின் பிரச்னைகளுக்கு நீங்கள் உதவும்போது உங்கள் பிரச்னைகள் தானாகவே குறைகின்றன. தொண்டு என்பது உடலால் மட்டுமே செய்யக்கூடியது என்று நினைக்க வேண்டாம்.
பணமே பத்தும் செய்யும்!
முதுமைக் காலத்தில்தான் பணம் மிகவும் அவசியம். ‘பானையிலே சோறு இருந்தால் பூனைகளும் சொந்தமடா’ என்பதை மறக்கவே கூடாது. முதுமைக் காலத்துக்காக ஒரு கட்டாய சேமிப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தன் வாரிசுகளுக்கு முழுமையாக தன் சொத்துக்களை கொடுத்துவிடக் கூடாது. தனக்கு மிஞ்சிய பின்புதான் தானமும் தர்மமும் என்ற பொன்மொழியை முதியவர்கள் மறக்கவே கூடாது!
உள்ளத்தை உறுதி செய்வோம்!
எல்லாவற்றையும் இழந்தாலும் மன உறுதியை மட்டும் இழக்காமல் முதுமைப் பாதையில் முன்னேற வேண்டும். இது ஒன்றுதான் கடைசி துணை. மனதைரியத்துடன் மற்றவர்களிடம் அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொண்டால் முதுமை ஒரு இனிய பருவமாக இருக்கும்.

இந்தியாவின் முதல் மற்றும் முதன்மையான முதியோர் நல மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன் அவர்கள் எழுதியுள்ள ‘முதுமையை முறியடிப்போம்’ – ‘முதுமையை முறியடிக்க 60 வழிகள்’ நூலை விரிவாகவும் முழுமையாகவும் வாசிக்க வேண்டுமா?
டாக்டர் வி.எஸ் நடராஜன் முதியோர் நல அறக்கட்டளையைத் தொடர்புகொள்ளுங்கள்
மொபைல் எண்: 8122102173 | 7200219167 | 8122889180 | 8122002173
மின் நூலாக வாசிக்க: www.poongaatru.com
Amazon Kindle, Magzter தளங்களிலும் டாக்டர் வி.எஸ்.நடராஜனின் எழுத்துகளை மின்னூலாக வாசிக்கலாம்.