Homeஉடல் நலம்இளமையின் முதுமைநோய் என்று அறியப்படாமல் உலகின் பெரும்பான்மையான இறப்புக்கு காரணமாவது இதுவே!

நோய் என்று அறியப்படாமல் உலகின் பெரும்பான்மையான இறப்புக்கு காரணமாவது இதுவே!

உயர் ரத்த அழுத்தம் A to Z | நீங்கள் அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்!

முதியோர் நல மூத்த மருத்துவர் டாக்டர் வி.எஸ்.நடராஜன்

உலகளவில் இறப்புக்கான முக்கிய மற்றும் முதன்மைக் காரணம் உயர் ரத்த அழுத்தம் என்றால் அது மிகையாகாது. உலகளாவிய கணக்கெடுப்பின்படி தற்போது சுமார் 150 கோடி நபர்கள் இந்த ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், 14 சதவிகித மக்கள் மட்டுமே அதில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். அதில் ஒரு கோடி நபர்கள் ஆண்டுதோறும் உயர் ரத்த அழுத்தத்தினால் இறக்கிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?


இந்தியாவில் சர்க்கரை வியாதி ஏழு கோடி மக்களைப் பாதித்துள்ளது. ஆனால் இந்தியாவில் சுமார் 20 கோடி நபர்கள் உயர் ரத்த அழுத்தத்துடன் உள்ளனர். மாரடைப்பு மற்றும் மூளைப் பாதிப்பு, பக்கவாதம் மூலம் உயிருக்கு பேராபத்தை ஏற்படுத்தும் முதன்மை மற்றும் மிக முக்கியமான காரணி உயர் ரத்த அழுத்தம். ஆகையால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர் ஆபத்தைத் தடுக்க முடியும். மேலும் இந்த உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் 40% பக்கவாதம் ஏற்படுவதையும் 20% மாரடைப்பு ஏற்படுவதையும் 50% இதயச் செயலிழப்பதையும் தவிர்க்கலாம். 50%-க்கும் மேற்பட்ட சிறுநீரகப் பாதிப்பு மற்றும் செயலிழப்பைத் தவிர்க்கலாம்.

உயர் ரத்த அழுத்தம் ஒரு நோயா?

அல்லது வயதானால் எல்லோருக்கும் வரக்கூடிய ஒரு தொல்லையா?

உயர் ரத்த அழுத்தம் முதுமையின் விளைவினால் ஏற்படுகிறது என்றால் வயதான எல்லோருக்கும் உயர் ரத்த அழுத்தம் வரவேண்டுமே! ஆனால் அப்படியில்லை. இதைப் பற்றி ஓர் ஆராய்ச்சி ஒன்று நடைபெற்றது. ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் மக்களைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உயர் ரத்த அழுத்தப் பரிசோதனை செய்துகொண்டே வந்தார்கள். அக்கிராமத்தில் அவர்கள் முதுமையடையும் காலம் வரை உயர் ரத்த அழுத்தம் யாருக்கும் வரவில்லை. ஆனால், அக்கிராமத்திலுள்ள ஒரு சிலர், மேலைநாட்டிற்குக் குடியேறி அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குத் தொடர்ந்து உயர் ரத்த அழுத்தப் பரிசோதனை செய்யும் பொழுது அவர்களில் பெரும்பாலானோருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால் உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு அவர்களுடைய பழக்க வழக்கங்கள், இருக்கும் இடம், சுற்றுப்புறச் சூழ்நிலை மற்றும் உணவுமுறை ஆகியவையே முக்கியக் கராணங்களாகும். இதன் மூலம் ரத்த அழுத்தம் வருவதற்கு முதுமை ஒரு காரணமல்ல என்பது தெரிகிறது.

இதயம் காப்போம் இன்றே!


காரணங்கள்
முதுமையில் இதயம் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் மாற்றங்களினாலும், ரத்தக்குழாய்களில் விரிந்து சுருங்குவதில் உண்டாகும் மாற்றங்களினாலும் உயர் ரத்த அழுத்தம் வருகிறது. சுமார் 90% முதியோர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான காரணம் தெரியாது (Essential hypertension).

உயர் ரத்த அழுத்தம் வர வேறு காரணங்கள்

(Secondary Hypertension)
ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு, சிறுநீரகம் செயலிழத்தல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், தைராய்டு தொல்லைகள், மாத்திரைகள், உதாரணம்: வலி நிவாரணி, ஸ்டீராய்டு, ஈஸ்ட்ரோஜன் மற்றும் மன அழுத்தத்திற்கு கொடுக்கும் மாத்திரை.

அறிகுறிகள்
உயர் ரத்த அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகள் மயக்கம், நடந்தால் மூச்சு வாங்குவது, நெஞ்சுவலி, கால் வீக்கம் போன்றவை. ஆனால் பலருக்கு முதுமையில் மேற்கண்ட தொல்லைகள் ஏதுமின்றி மறைந்திருக்கும். வேறு ஏதாவது நோய்களுக்கு உடல் பரிசோதனை செய்யும் பொழுது உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்படும். ஆகையால் காலமுறைப்படி டாக்டரிடம் சென்று ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் மறைந்திருக்கும் நோயை எளிதில் கண்டறிய முடியும்.
ரத்த அழுத்தத்தின் மேல் அளவையை Systolic அழுத்தம் என்றும், கீழ் அளவையை Diastolic அழுத்தம் என்றும் கூறுவோம். முதுமையில் ஒருவருக்கு 140/90 அளவுக்கு மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம் இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் 130/80-க்குள் இருக்க வேண்டும்.

முதுமையில் ஒருமுறை பரிசோதனை செய்த உடனேயே ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக முடிவு
செய்துவிடக் கூடாது. ஏனெனில், முதுமையில் முக்கியமாக மேல் அளவு அடிக்கடி ஏற்ற இறக்கத்துடன் இருக்க வாய்ப்புண்டு. முதியவருக்குக் குறைந்தது மூன்று முறையாவது பரிசோதனை செய்த பின்னரே அவருக்கு உயர் ரத்த அழுத்தம் பற்றி முடிவு செய்ய வேண்டும். மனதில் ஏற்படும் பயம், குளிர்காலம், காய்ச்சல், உடல்வலி மற்றும் நெடுநேரம் சிறுநீர் கழியாது இருத்தல் போன்ற காரணங்களாலும் ரத்த அழுத்தம் மாறி வர வாய்ப்புள்ளது. எந்த வயதானாலும் உயர் ரத்த அழுத்தத்தின் மேல் அளவு 120 – 140, கீழ் அளவு 80 – 90 அளவில் தான் இருக்க வேண்டும்.

மேல் அளவு மட்டிலும் அதிகமாக இருக்கும் ரத்த அழுத்தம் (Isolated Systolic Hypertension)
சில முதியோர்களுக்கு மேல் அளவு மட்டும் அதிகமாக இருக்கும் (160 -180). ஆனால் கீழ் அளவு 80 – 90 அளவிலேயே இருக்கும். இதை மேல் அளவு உயர் ரத்த அழுத்தம் என்று கூறுவார்கள் (Isolated Systolic Hypertension). இது ஓரளவிற்கு முதுமையின் விளைவாக இருக்கும். இவர்களுக்குப் பக்கவாதம், மாரடைப்பு, இதயம் வலிமை இழத்தல், சிறுநீரகப் பாதிப்பு நோய் மற்றும் இறப்பு விகிதமும் அதிகரிக்கும்.


மேல் அளவு ரத்த அழுத்தத்தைக் குறைத்தால் பக்கவாதம் வரும் அபாயம் 30% குறையும்.
மாரடைப்பு அபாயம் 28% குறையும்.

பல முதியோர்களுக்கு மேல் அளவு ரத்த அழுத்தம் அதிகரிப்பால் எந்தத் தொல்லையும் இல்லாமலே இருக்கும். வேறு ஏதாவது காரணத்திற்காக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் பொழுது இது கண்டுபிடிக்கப்படும். தலைச்சுற்றல், மயக்கம், மூச்சு இரைத்தல், மூக்கில் ரத்தம் சொட்டல், களைப்பு, படபடப்பு, கால்களில் வீக்கம் போன்ற தொல்லைகள் இந்நோயின் முதல் அறிகுறிகளாக இருக்கலாம்.

சுமார் இரண்டு அல்லது மூன்று முறையாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்த பின்பு தான் இந்நோயை உறுதிப்படுத்த வேண்டும். இது முதுமையின் விளைவு தான் என்று எண்ணி அலட்சியப்படுத்தாமல் உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். பொதுவாக உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான மாத்திரையே இந்தத் தொல்லைக்கும் நல்ல பயனை அளிக்கும்.

தொல்லைகள்
எந்தவிதமான தொல்லையுமின்றி மறைந்திருக்கும் உயர் ரத்த அழுத்தம், திடீரென்று பலவிதத் தொல்லைகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய கொடிய நோய் இது. இதயத்தைப் பாதிக்கும் பொழுது மாரடைப்பு வரலாம், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும் பொழுது பக்கவாதம், மறதி நோய் வரலாம். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் மயக்கம் மற்றும் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிக அளவில் இருப்பவர்க்கு சிறுநீரகம் மற்றும் கண் பார்வை பாதிப்பு ஏற்படும். கால்களில் ரத்த ஓட்டம் தடைபட்டு, கால்களில் நடக்கும் பொழுது கடுமையான வலி ஏற்படலாம்.

பரிசோதனைகள்
இ.சி.ஜி., (E.C.G.), மார்பு படம் (X-ray), ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு, சர்க்கரை அளவு மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய ரத்தம் மற்றும் சிறுநீரகப் பரிசோதனையை அவசியம் செய்துகொள்ள வேண்டும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிமுறைகள்:
 உடல் பருமனைக் குறைத்து எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.
 தவறாமல் செய்யும் உடற்பயிற்சி (நடைப்பயிற்சி) உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
 புகைப்பிடிப்பதை நிறுத்தினால் மருந்தின்றியே உயர் ரத்த அழுத்தம் குறையும்.
 மதுவும் உயர் ரத்த அழுத்தத்தின் எதிரி. நிறுத்தவும் அல்லது குறைக்க முயற்சி செய்யவும்.
 உப்பின் அளவைப் பெருமளவு குறைக்க வேண்டும். உதாரணம்: ஊறுகாய், அப்பளம், வடகம், வடை, உப்பு பிஸ்கட், டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் கருவாடு.
 தினசரி தியானத்தின் மூலமும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

சிகிச்சை முறைகள்
மேற்கண்ட முறைகளைத் தொடர்ந்து 4 – 5 வாரங்கள் கடைப்பிடித்தும் உயர் ரத்த அழுத்தம் குறையவில்லை என்றால் உயர் ரத்த அழுத்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். தற்பொழுது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க நல்ல மாத்திரைகள் நிறைய உள்ளன. அவை: உயர் ரத்த அழுத்தத்துக்கு மட்டுமின்றி அதோடு சேர்ந்துள்ள நோய்க்கும் சேர்ந்து ஒரே மாத்திரையாகக் கொடுப்பார்கள். உதாரணம்: உயர் ரத்த அழுத்தம் மட்டுமே இருந்தால் அதற்கு ஒரு மாத்திரை. உயர் ரத்த அழுத்தத்தோடு இதய நோயும் இருந்தால் அதற்கு வேறு மாத்திரை. உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்குத் தனியாக ஒரு மாத்திரை. இப்படி உயர் ரத்த அழுத்தத்துக்கு மட்டும் மருந்து கொடுக்காமல், கூட இருக்கும் நோய்களுக்கு தக்கவாறு உயர் ரத்த அழுத்த மாத்திரையைத் தேர்ந்தெடுத்து சிகிச்சையளிப்பதே மிகச் சிறந்த முறையாகும். இதன் மூலம் ஒருவர் எடுத்துக்கொள்ளும் மாத்திரையின் எண்ணிக்கை குறைகிறது, அதன் பக்க விளைவுகளும் குறைகின்றன.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டியிருக்குமா?
ஒருவரின் வாழ்நாளினை நிர்ணயிக்கக் கடவுளைத் தவிர வேறு யாராலும் முடியாது! அப்படியிருக்க மருத்துவரால் மட்டும் எப்படி அதை நிர்ணயிக்க முடியும்? ஆனால் ஒன்று மட்டும் உறுதி, மாத்திரையைக் குறைத்தோ, கூட்டியோ, மருந்தைத் தொடர்ந்து சாப்பிட வேண்டியோ இருக்கும்.

மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்தை நிறுத்தவோ, அளவைக் கூட்டவோ, குறைக்கவோ கூடாது.

நினைவில் கொள்ளுங்கள்!
வயதான காலத்தில் உயர் ரத்த அழுத்தம் எந்தவிதத் தொல்லையுமின்றி மறைந்திருக்கும். தொல்லைகள் வரும் வரை காத்திருக்க வேண்டாம். காலமுறைப்படி (வருடத்திற்கு ஒருமுறையாவது) குடும்ப மருத்துவரை அணுகி உயர் ரத்த அழுத்தத்தைப் பார்த்துக்கொள்வது மிக நல்லது. ஆகவே உயர் ரத்த அழுத்தத்தை எளிதாகக் கண்டறிந்து சுலபமாகச் சிகிச்சை பெற்று முதுமையில் நலமாக வாழலாம். இதற்கு வேண்டியது சிறிய முயற்சியே. ஆனால் கிடைக்கும் பலனோ மிகப் பெரியது. இன்றே முயற்சி செய்யுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read