Homeஉடல் நலம்நுரையீரல் புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி? டாக்டர் ஜெயராமன் உடன் கேள்வி-பதில் 2

நுரையீரல் புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி? டாக்டர் ஜெயராமன் உடன் கேள்வி-பதில் 2

நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் வராமல் தடுக்க என்னென்ன வழிகளை பின்பற்ற வேண்டும் என்று நுரையீரலியல் நிபுணர் டாக்டர் ஜெயராமன் அவர்களிடம் கேள்வி பதில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் வராமல் தடுக்க என்னென்ன வழிகளை பின்பற்ற வேண்டும்?

  • ரசாயன தொழிற்சாலைகள், ஆர்சனிக் தொழிற்சாலைகள், அணு சார்ந்த தொழிற்சாலைகள், புகை, காற்று மாசு அதிகமுள்ள இடங்களில் வேலை செய்யும்போது, முகக்கவசம் போன்ற அதற்குரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வேலை செய்ய வேண்டும். அவ்வாறு பாதுகாப்பாக வேலை செய்யும்போது நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு விகிதம் மிகவும் குறைந்துவிடும்.
  • யாருக்கெல்லாம் புகை பழக்கம் உள்ளதோ, யாரெல்லாம் ரசாயனம் சம்பந்தப்பட்ட இடங்களில் வேலை செய்கிறார்களோ, அவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
  • குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் இருப்பதை கண்டறிய Low Dose CT Scan என்கிற பரிசோதனை உள்ளது. ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒரு முறை இந்த ஸ்கேன் செய்து பார்க்கும் பட்சத்தில், நுரையீரலில் கட்டிகள் ஏதேனும் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிடலாம். இதுதான் முதல் ஸ்கிரீன் டெஸ்ட்.
  • நுரையீரல் தொந்தரவு இல்லை; ஆனால், புகையிலைப் பழக்கம் இருக்கிறது. அதோடு, ரசாயனம் தொடர்பான வேலைகளில் இருக்கிறார்கள்.., மாசுக் காற்று, நச்சுப் புகையை சுவாசிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கும் ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனையோடு, Low Dose CT Scan, சில ரத்தப் பரிசோதனை  செய்து நுரையீரல் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தால், ஆரம்பத்திலேயே குணப்படுத்திவிடலாம்.

நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை எடுத்தவர்களுக்கு மறுபடியும் பாதிப்பு ஏற்படுமா? 

நுரையீரல் புற்றுநோய் உள்ள சிலர் 3 முதல் 6 மாதங்களுக்கு தொடர் சிகிச்சை எடுக்கும் பட்சத்தில், அதன் பின் அவர்களுக்கு புற்றுநோய் அறிகுறிகள் எதுவும் இருக்காது.

ஸ்கேன், ரத்தப் பரிசோதனையிலும் எந்த அறிகுறியும் தென்படாது. சிலருக்கு மட்டும் புற்றுநோய் மீண்டும் வருவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அதனை மறுபிறப்பு (Relapse) என்று கூறுவோம். முறையாக மருத்துவ ஆலோசனை பெற்று வந்தால், ஒருவேளை மீண்டும் புற்றுநோய் வந்தாலும் குணப்படுத்திவிடலாம்.

சிகிச்சைக்குப் பின் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

  • நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை மேற்கொண்ட அனைத்து நோயாளிகளுக்குமே, சிகிச்சைக்குப் பின் புகைப்பழக்கம் கூடாது.
  • சுற்றுப்புறத்தை  மாசு இல்லாமல் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்.
  • சரிவிகித உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
  •  ஒவ்வொரு மருத்துவமனையிலும் நுரையீரல் சிகிச்சை முடிந்தவர்களுக்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வாழ்க்கை முறை நோய் மாற்றம் (lifestyle disease modification) சேவைகள் உண்டு. அதில் அவர்களை ஈடுபடுத்திக் கொண்டு நல்வாழ்வை மேற்கொள்ளலாம்.

நுரையீரல் புற்றுநோய் பாதிப்பின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்குவீர்கள்?

  • புகை சார்ந்த இடங்களுக்கு செல்வது, ஆரோக்கிய உணவு முறைகளைச் சரிவர பின்பற்றாமல் இருப்பது, புகைப் பழக்கம், மதுப்பழக்கத்துக்கு அடிமையாவது ஆகியவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.
  • ஏற்கெனவே அவர்களுக்கு புகை பழக்கம் இருந்திருக்கும், இடையில் அந்த பழக்கத்தை விட்டிருப்பார்கள். பின்னர் மீண்டும் தொடர்ந்திருப்பார்கள். அவ்வாறு செய்தால் மீண்டும் புற்றுநோய்ப் பாதிப்பு ஏற்படக்கூடும்.
  • பொதுவாகவே புகைப் பழக்கம் மிகக் கொடிய பழக்கம்.  அதை மீண்டும் ஆரம்பித்தால் மீண்டும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, புகைப் பழக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • நல்ல உணவு முறைகள், நல்ல தூக்கம் என ஆரோக்கியமான வாழ்க்கை முறையையே பின்பற்ற வேண்டும்.

நோயாளிகளைப் பராமரிப்பவர்கள் சிகிச்சைக்கு பின் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

  • நுரையீரல் புற்றுநோய் பாதிப்படைந்த ஒருவருக்கு, அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருக்க வேண்டும்.
  • சில நண்பர்கள் ‘உங்களுக்குத்தான் நுரையீரல் நோய் குணமாகிவிட்டதே… நீங்கள் எப்ப்போது மது அருந்தலாம்… புகை பிடிக்கலாம்’ என்று கூறினால், அவரிடமிருந்து விலகியே இருக்க வேண்டும்.
  • குடும்ப உறுப்பினர்கள் நோயாளியை நல்ல முறையில் பேணி பாதுகாக்க வேண்டும்.
  • நோயாளியின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறைகளை கும்பத்தினர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

READ ALSO நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சைகள் இருக்கிறதா? – டாக்டர் ஜெயராமன் உடன் கேள்வி-பதில்

நீங்கள் சிகிச்சை அளித்தவர்களில் மறக்க முடியாத ஒரு நோயாளி பற்றி..,

பல விதமான நுரையீரல் புற்றுநோயைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் 35 வயதான ஒருவருக்கு நுரையீரலுக்குள் கட்டி. அவருக்கு இருமும்போது ரத்தம் வருதல், சளியுடன் ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தன.

அந்த நோயாளிக்கு Proctoscopy, ஸ்கேன் பரிசோதனை செய்து முடித்த பிறகு நுரையீரல் கட்டியை மூச்சுக்குழல் உள்நோக்கி மூலமாகவே அகற்றிவிட்டோம்.  மீண்டும் பரிசோதனை செய்து பார்க்கும் போது, அவருக்கு எந்த விதமான புற்று நோயும் இல்லை.

ஆகவே நுட்பமான மூச்சுக்குழல் உள்நோக்கி சிகிச்சை அளித்து, அந்த நோயாளியை நாம் ஆரம்பக்கட்டத்திலேயே குணப்படுத்தி விட்டோம். பெரிய அறுவை சிகிச்சை இல்லாமல், நுரையீரலை அகற்றாமல் மூச்சுக்குழாய் உள்ளே இருக்கின்ற கட்டியை மட்டும் அகற்றி, அவருக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்துள்ளோம்.

தற்போது 6 மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து அந்த நோயாளி மருத்துவரை அணுகுகிறார். இதுவரை அவருக்கு கட்டி அகற்றிய இடத்தில் வேறு கட்டி வளர்வதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இதனால் அந்த நோயாளி நல்ல வாழ்க்கையை மேற்கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்.

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read