‘நுரையீரல்’ பழுதின்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்புக்களில் ஒன்று.
ஆனால் நோய்த் தொற்றை உடலின் பிற உள் உறுப்புகளை விட முதலில் சந்திக்கக்கூடிய உறுப்பு நுரையீரல் என்றால் அது மிகையாகாது! ஏனென்றால் உணவு இன்றி, நீர் இன்றி வாழும் யோகிகள் கூட உயிர் வாழத் தேவைச் சுவாசம்; சுவாசத்திற்குத் தேவை நுரையீரல்!
வளிமண்டலக் காற்றினை உயிர் காற்றாக மாற்றும் சுத்திகரிப்புச் செயலில் ஈடுபடும் மகத்தான நுரையீரலினைப் பாதிக்கும் நிமோனியா நோய்த் தொற்று, தீர்வுகள், தற்காப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை நுரையீரலியல் சிறப்பு மருத்துவர் திரு.எஸ். ஜெயராமன் அவர்களின் வழிகாட்டலை இக்கட்டுறையில் காண்போம்.
நோய்த் தொற்று:
பருவநிலைக் காரணமாக நம் உடலில் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றால் நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையில் மழை மற்றும் பனியால் ஏற்படும் சளி மக்களிடையே சுவாசித்தல் மூலமாகத் தொற்றாகப் பரவுகிறது.
READ ALSO: உங்க நுரையீரல் ஆரோக்கியமா இருக்கா?
இதன் அடுத்தக்கட்ட நோய் வளர்ச்சியாக இருமல், இளைப்பு, நுரையீரல் சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இவை அனைத்திற்கும் காரணம் ‘இன்ஃப்ளூயன்சா’ என்று அழைக்கப்படும் வைரஸ் கிருமியே.
இப்படியாகப் பருவநிலைக் காரணமாக இயல்பாய்ப் பரவும் இத்தொற்றுகளை முறையாகச் சரி செய்யாத நிலையில் ‘இன்ஃப்ளூயன்சா ஏ’ வகை வைரஸ்ஸால் தோன்றும் நிமோனியா மற்றும் நுரையீரல் செயலிழப்பு போன்ற விபரீத விளைவுகளையும் நாம் சந்திக்க நேரிடலாம்!
யாரைத் தாக்கும் நிமோனியா?
உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களை மிக எளிதாக நிமோனியா தாக்கும். எனவே ஐந்து வயது வரை உள்ளக் குழந்தைகளையும், ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களையும் இஃது எளிதில் தாக்கலாம்.
தீர்வுகள்:
இவ்வாறாக இயல்பாய்ப் பரவும் சளித் தொடர்பான தொற்றுகளான இருமல், காய்ச்சல், சுவாசக் கோளாறுகள் போன்றவை இரண்டு நாட்களுக்கு மேலாக நீடிப்பின் நாம் முறையாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, அவரின் அறிவுரையின்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் முழுமையாக நிமோனியாவைக் குணப்படுத்த இயலும்.
READ ALSO: உங்களது குரலை மோசமாக பாதிக்கும் காரணங்கள்!
பரவலைத் தடுக்கும் முறைகள்:
நிமோனியா நோய்த் தொற்றானது இயல்பாக, விரைவாகக் காற்றில் பரவக்கூடிய ‘இன்ஃப்ளூயன்சா ஏ’ வைரஸைச் சார்ந்தது என்பதை நாம் நன்கு அறிவோம்.
எனவே காற்றின் மூலம் கிருமிகள் பரவாமல் இருக்க நோய்த் தொற்று உள்ளவர்களும், மற்றவர்களும் முகக் கவசம் அணிவது சாலச் சிறந்தது. இது போன்றே கைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதலும் முக்கியமானது. சுற்றுச்சூழலையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தற்காப்பு நடவடிக்கைகள்:
‘வருமுன் காப்போம்’ என்ற இச்சொற்றொடர் அனைத்திற்கும் பொருந்த கூடிய ஒன்று. எனவே நிமோனியாவிற்கென்று பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை ஆண்டுத்தோறும் செலுத்திக் கொள்வது தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாகும்.
இத்துடன் முகக் கவசம் அணிவது, கைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வது, சுற்றுச்சூழலைத் தூய்மையாகப் பராமரிப்பது போன்றவையும் முக்கியமானதே.
நீரின்றி மட்டும் அமையாது உலகு! சுவாசம் இல்லாவிட்டாலும் இல்லை உலகு! ஆதலால், சுவாசித்தலால் நிகழக்கூடிய தொற்றுகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நுரையீரலை முறையாய்ப் பராமரிப்போம்! பாதுகாப்போம்!! ஆரோக்கியமாய் வாழ்வோம்!!!