பொதுவாக குரல் பிரச்னை உள்ள நோயாளிகள் தெளிவாகப் பேச மாட்டார்கள். சில நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு முக்கி முக்கி பேசுவார்கள். அல்லது இடைவெளி விட்டு நிறுத்தி நிறுத்தி பேசுவார்கள். அதனால், அவர்களின் குரல் மென்மையாக இருக்காது. அவர்கள் பேசும்போது ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி இருந்துகொண்டே இருக்கும்.
மேலும் அவர்களின் குரல் நம்பிக்கைத் தன்மையற்று காணப்படும். இவைதாம் குரல் பிரச்னையின் அறிகுறிகளாகும். குரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் சில நேரம், அழும்போதும், கோபப்படும்போதும் குரல் மாறாது. சாதாரணமாக பேசும் போதுதான் இப்பிரச்னை வரும்.
இதைச் செயல்பாட்டு குரல் பிரச்னை (Functional Voice Problem) அல்லது உளவியல் குரல் பிரச்னை(psychological voice problem) என்று சொல்வார்கள். இப்பிரச்னை தற்சமயத்தில் மட்டும் இருக்கலாம் அல்லது நிலையாகவும் இருக்கலாம். காரணம், சிலருக்கு வியத்தகு காட்சிகளை பார்க்கும்போதும், மன அழுத்தம் கூடும்போதும் குரல் பிரச்னை தூண்டப்படும்.
இதற்கு உளவியல் சிகிச்சை, குரல் சிகிச்சை அளிப்போம். அதோடு, குரலுக்குத் தேவைப்படும் அனைத்து வழிமுறைகளையும் அறிவுறுத்துவோம். இச்சிகிச்சையின் மூலம் நோயாளி குணமடைந்து விடுவார். ஒருவேளை, அனைத்து சிகிச்சைகள் அளித்த பிறகும் பலனில்லை என்றால், போடோக்ஸ் (Botox injection) என்ற ஊசியை நோயாளிக்குஅ செலுத்தி குரலில் தூண்டுதலை ஏற்படுத்தக்கூடிய தசையை சமநிலைக்கு மாற்றிவிடுவோம்.
அப்போது குரலின் திறன் சமநிலையை அடையும். அறுவை சிகிச்சைகளும் இருக்கின்றன. ஆனால், இதுபோலச் செயல்படுத்துவதே முறைப்படி சரியாக இருக்கும். இதை செயல்பாட்டு அல்லது உளவியல் குரல் பிரச்சனை என்று கூறுவோம்.
மற்றொரு குரல் பிரச்னை… ஏதோ ஒரு சிறு கட்டி குரல் பெட்டியில் இருக்கிறது. அவை சாதாரண கட்டியாகவும் அல்லது தீங்கற்ற கட்டியாக இருக்கலாம் அல்லது கேன்சர் கட்டியாக இருக்கலாம். அந்த மாதிரி சூழ்நிலையில் சாதாரண கட்டிகளின் அளவு அதிகரிக்காமல் அப்படியே இருக்கும். ஆனால், குரலின் தன்மையை கடுமையாக்கிக் கொண்டே இருக்கும். ஆனால், அந்தக் கட்டியின் வளர்ச்சியில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. இதை சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் சரிசெய்து விடலாம்.
READ ALSO: எல்லோருக்கும் குரல் எவ்வளவு முக்கியம்?
ஒருவேளை கேன்சர் கட்டி அல்லது வளரக்கூடிய கட்டியாக இருந்தால், அந்த கட்டி வளர வளர நோயாளிக்கு குரல் பிரச்னை மட்டுமல்லாமல் மூச்சு விடுவதும் கடினமாக இருக்கலாம், அப்போது அவர்கள் சமதளத்தில் படுக்கவே சிரமப்படுவார்கள். ஏனென்றால், சமநிலையில் படுத்தால் மூச்சு அடைக்கும். அதனால் நோயாளி அடிக்கடி எழுந்து, உட்கார்ந்தபடியே உறங்கிக் கொண்டிருப்பார். இதன்மூலம் குரல் பிரச்னை மற்றும் மூச்சுப் பிரச்னையும் இருக்கலாம்.
உணவினை விழுங்குவதிலும் சிரமம் ஏற்படலாம். மேலும், அவர்களின் எச்சிலை விழுங்குவதிலும் சிரமப்படுவார்கள். அதன் மூலம் அவர்களுக்கு இருமலும் ஏற்படும். இந்த மாதிரியான பிரச்னையைக் கண்டறிந்து, ஒருவேளை அது புற்றுநோய் கட்டியாக இருந்தால், எந்த நிலையில் இருக்கிறது என்று சோதித்து. அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
குரல் பிரச்னை சிகிச்சைகளுக்கு எத்தனை காலம் எடுத்துக் கொள்ளும்?
ஒருவேளை செயல்பாட்டு குரல் பிரச்னை(Functional Voice Problem) அல்லது உளவியல் குரல் பிரச்னை(psychological voice problem) இருந்தால், சில வாரம் அல்லது சில மாதங்களுக்கு குரல் சிகிச்சை கொடுப்போம். அது நோயாளியின் நோய்த் தாக்கத்தைப் பொருத்தே அமையும். நோயாளியும் தொடர் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே சாத்தியம்.
மேலும், பேச்சு நோயியல் நிபுணர்(speech pathologist) உதவியுடன் குரல் பயிற்சி உள்பட சில பயிற்சிகள் அளித்து நோயாளியின் மூளையின் குறிப்பிட்ட செயல்பாடுகளை மீட்டெடுக்க முயற்சி செய்யவோம். ஏனென்றால் மூளைக்கும் குரல் பெட்டிக்கும் ஒரு செயல்பாட்டுத் தொடர்பு இருக்கிறது. அதனை பயிற்சி கொடுத்து குணப்படுத்தி விடலாம்.
இச்சிகிச்சை 4-6 வாரங்கள் அல்லது 6 மாத காலங்கள் கூட எடுத்துக் கொள்ளும். இதனால் சிகிச்சை காலத்தில் மெதுவாக குரல் திறனை மேம்படுத்த முடியும். மற்றொரு புறம் உளவியல் நிபுணர் உதவியுடன் மனதிற்கு தனிப் பயிற்சியும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும்.
READ ALSO: டிமென்சியா நோயாளிகள் எப்படியெல்லாம் இருப்பார்கள்?
நோயாளிக்குப் புற்றுநோய் அல்லது வேறு ஏதேனும் கட்டி இருந்தால், அப்போது கட்டியின் அளவைப் பொறுத்து சிகிச்சை அமையும். அப்படி நோயாளிக்கு கட்டி இருந்தால், அறுவை சிகிச்சை செய்து, சிறிது காலம் குரலுக்கு ஓய்வு கொடுத்து, மருந்துகள் கொடுத்து, சிகிச்சை முடித்து அதிகபட்சம் ஒரு வாரத்தில் நோயாளியை வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். பிறகு சிகிச்சையின் காயம் ஆறும் வரைக்கும் குரல் கடினமாக இருக்கும்.
அதன்பிறகு சிகிச்சையின் புண் 2 வாரத்துக்குள் ஆறி விட்டால், 3-வது வாரம் சாதாரண குரல் வந்துவிடும். ஒருவேளை நோயாளிக்கு புற்றுநோய் இருந்தால், அதற்கான சிகிச்சை இருக்கிறது. ரேடியேஷன் அல்லது கீமோ தெரபி மற்றும் ரேடியேஷன் இரண்டையும் சேர்த்துக் கொடுத்து சிகிச்சையை மேற்கொள்வோம்.
அல்லது அறுவை சிகிச்சை செய்து குரல் பெட்டியை அகற்றி விடுவோம். அம்மாதிரியான சூழ்நிலையில் குரல் பெட்டி நீக்கப்படும்போது, வடிவம் மாறிவிடும். ஆகையால் குரலும் நிரந்தரமாக மாறக்கூடும். நோயாளி அதனை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு, இனிவரும் காலங்களில் அந்தக் குரலில் பேச வேண்டும்.