Homeஉடல் நலம்முதியோருக்கு தாழ்வு மனப்பான்மையா?

முதியோருக்கு தாழ்வு மனப்பான்மையா?

முதுமையில் மறதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது; அங்கீகரிக்கப்படுகிறது; சாதாரண தகவலாகவும் தெரிகிறது!

ஆனால், காது கேட்கவில்லை என்பதை ஏன் முதியவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை? ஏன் அதை அவர்கள் பெரும் குறைபாடாக எண்ணிக்கொண்டு, தாழ்வு மனப்பான்மைக்குக் கூடச் சென்று விடுகிறார்கள்?

இதற்கான விளக்கத்தை மிகவும் அழகாக விளக்குகிறார் காது, மூக்கு, தொண்டை நிபுணர் மருத்துவர் A.சுதா அவர்கள். அதனை இங்கே அறிந்துகொண்டு பயன்பெறுவோம்.

முதுமையில் காது கேளாமையும், தாழ்வு மனப்பான்மையும்

கண் பார்வைக் குறைபாடுக் கூடக் காது கேளாமையைப் போன்று ஒரு குறைபாடுத் தான். அவ்வாறு கண் பார்வைக் குறைபாடு ஏற்படும் பட்சத்தில், கண்ணாடி அணிந்து கொள்ள எந்த வயதினரும் தயங்குவதில்லை;

இன்னும் சுவாரசியமான தகவல் என்னவென்றால், கண்ணாடி அணிந்துகொள்ள அனைவரும் விருப்பப்பட்டு முன்வருகிறனர் என்பதே! இதற்கே கண்ணாடியானது அனைவர் பார்வையிலும் தெள்ளத் தெளிவாகத் தெரியக் கூடிய ஒரு காட்சிப் பொருள்.

READ ALSO: வயதானால் காது கேளாமல் போவது ஏன்?

இப்படி அனைவருக்கும் தெரியும் கண்ணாடியை மகிழ்வோடு அணிந்து கொள்ள முன்வரும் மக்கள், காது கேளாமையைப் போக்கிக் கொள்ள உதவக் கூடிய கருவியை அணிந்து கொள்ள அல்லது பயன்படுத்த மட்டும் தயக்கம் காட்டுகிறார்கள்! இதற்கே அது வெளியில் கூடத் தெரிவதில்லை.

மேலும் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இளையவர்களும், நடுத்தர வயதினரும் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக அல்லது பணியின் நிமித்தம் உடனே அணிந்துக் கொள்கிறார்கள்! முதியவர்களே அதைப் பயன்படுத்த தயங்குகிறார்கள்!

காரணம் அக்கருவியைப் பயன்படுத்தும் போதே அவர்கள் முதுமை நிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தக்கூடிய ஒரு நிலைக்குத் தள்ளப்படுவதாக எண்ணுவதால். அந்த நிலையில், ”தனக்கு வயதாகி விட்டது; அதனால் காது கேட்கவில்லை” என்ற தாழ்வு மனப்பான்மைக்குள்ளும் சென்று விடுகிறார்கள்!

இந்த நிலையைப் புறக்கணிக்க நாற்பது, ஐம்பது வயது இருக்கும்போதே முதுமையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் அடைய வேண்டும். முதுமையில் நமக்கு எந்தவிதமான குறைபாடுகள் ஏற்படும்,

அதனை நாம் எவ்வாறு போக்கிக் கொள்ளலாம் என்பதை நாம் முன்கூட்டியே ஆலோசித்து நம்மையே நாம் அதற்காகப் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.

காது கேளாமையும், ஆலோசனைகளும்

காது கேளாமையில் லேசான நிலை, மிதமான நிலை, தீவிரமான நிலை என்று மூன்று நிலைகள் உள்ளன.

எவ்வாறு கண் பார்வைத் தெரியாத பட்சத்தில், கண்ணில் புரை வளரும் பட்சத்தில் அதனை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கிக் கண்ணாடி அணிந்துக் கொள்கிறோமோ அதே போன்று காது கேளாமையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். முழுமையாகக் காது கேட்காத நிலை வரும் வரை காத்திருத்தல் கூடாது.

எப்போது தேவைக் கேள்விச் சாதனம்?

தங்களைக் கவனித்துக் கொள்ளும் உதவியாளர்கள், உறவினர்கள் பேசும்போதும், அலைபேசி அழைப்பு, அழைப்பு மணி ஒலிக் கேட்காதச் சூழலுக்கு முதியவர்கள் ஆளாகும் போதும் கட்டாயம் இக்கருவியை அணிய வேண்டும்!

காரணம் ‘வாழ்க்கைத் தரம்’ என்பது முதுமையிலும் மிக முக்கியமான ஒன்றே. அத்துடன் இக்கருவியைப் பொறுத்திக் கொள்ளப் பல பேர் முன் வந்த போதிலும், அதனைத் தொடர்ந்து பயன்படுத்த அவர்கள் முன் வருவது இல்லை.

இதற்குக் காரணமாக அவர்கள் பல காரணங்களைக் கூறுகின்ற போது அவர்களைப் பராமரிக்கக் கூடியவர்களே உந்து சக்தியாக மாறி ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.

அஃதாவது இதனைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது இதனால் ஏற்படக்கூடிய இடையூறுகள் இடையூறாகத் தெரியாமல், இயல்பாக மாறும் என்பதே அது! சில வேலைகளில் கருவிக் காதினுள் பொருந்தும் அமைப்பானது முதியோரின் காதின் அளவைப் பொருத்து மாறுபடக்கூடும்.

READ ALSO: நுரையீரல் அலர்ஜி வருவது எதனால்?

அப்பொழுதுக் காதுக்கும், கருவிக்கும் இடையே ஏற்படக்கூடிய இடைவெளியினால் அதிர்வுகள், எதிரொலிப்பு போன்றவை ஏற்படலாம். அஃது அவர்களுக்கு மேலும் சில உபத்திரங்களைத் தரக் கூடும்.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பொறுத்த நிலையால் ஏற்படக்கூடிய சிக்கலைச் சரிசெய்துத் தொடர்ந்து கருவியை அணிந்துக் கொள்ளும்படி ஆலோசனை வழங்க வேண்டும்.

மேலும் இளம் வயதில் இதனை அணியக்கூடியவர்களாக நீங்கள் இருப்பின் உங்களின் பணி மற்றும் பிற தேவைகளுக்கு ஏற்ப ‘ப்ளூடூத் கனெக்டிவிட்டியோடு’ இருக்கக் கூடிய கருவிகளைப் பொறுத்திக் கொள்ளலாம்! எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் குறைபாட்டு நிலைக்கு ஏற்பக் கருவியைப் பொறுந்திக் கொள்ள வேண்டும்.

காது கேளாமை என்பது குறைபாடுத் தான். அவமானம் அல்ல! குறைபாடை நிவர்த்திச் செய்து கொள்ளத் துணையாய் நிற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்வோம்!! குறைபாடிலும் நிறைவான வாழ்வை வாழ்வோம்!!!

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read