“எனக்குத் தலையே சுத்துது; நீ ஏன் இப்படிச் செஞ்ச?” என்று நாமும் பல வேலைகளில் இப்படிக் கூறியது உண்டு; பலர் இப்படிக் கூறக் கேட்டதும் உண்டு.
ஆனால் உண்மையில் தலைச்சுற்றல் இயல்பானது அல்லது சாதாரணமானது அல்ல. உண்மையில் தலைச்சுற்றல் நிகழ்ந்தால் நமது நிலை என்ன?
இந்த விசித்திரமான வினாவிற்கு விடையைக் கண்டறிய முற்படும் முன் தலைச்சுற்றல் என்பது ஏன் ஏற்படுகிறது? அதற்குத் தீர்வுகள் என்ன? என்பது குறித்து (காது, மூக்கு மற்றும் தொண்டை) மருத்துவர் A. சுதா அவர்கள் கூறும் தகவல்களை அறிந்து கொள்வோம்.
தலைச்சுற்றல்:
இது வயது வரம்பின்றி அனைவரையும் பாதிக்கக் கூடியது. ஆனாலும் வயது முதியவர்களை அதிகமாகத் தாக்குகிறது. தலைச்சுற்றல் என்பது ஒரு நோய்க்கான அறிகுறி மட்டுமே; அஃது ஒரு நோய் அல்ல.
READ ALSO: தொண்டைவலி எதனால் வருகிறது? தீர்வு என்ன?
எனவே தலைச்சுற்றலுக்கான காரணங்களைக் கண்டறியும் போது அதை முழுமையாகச் சரி செய்ய இயலும்.
தலைச் சுற்றலில் அக்கியூட் வெர்டிகோ, பொசிஷனல் வெர்டிகோ, ஒற்றைத் தலைவலி வெர்டிகோ என்று வகைகள் உள்ளன.
அக்கியூட் வெர்டிகோ:
இயல்பான நிலையில் ஒருவருக்கு ஏற்படும் தலைச்சுற்றலை அக்கியூட் வகையில் கூறலாம். இதற்குச் சாதாரணச் சத்துக் குறைபாடும் காரணமாக இருக்கலாம்! அல்லது மூளையில் இரத்தக் கசிவு அல்லது இரத்த அடைப்பு போன்ற சற்று விபரீதக் காரணங்களும் இருக்கலாம்!
பொசிஷனல் வெர்டிகோ:
இயல்பான நிலையைத் தவிர்த்துப் படுத்து இருக்கும்போது, குனியும் போதும், தலையை ஒரு நிலையிலிருந்து மறுநிலைக்குத் திருப்பும் போது, தலைச் சுற்றல் ஏற்படலாம்! அவ்வகையான தலைச் சுற்றல் பொசிஷனல் வெர்டிகோ வகையைச் சார்ந்தது!
நமது காதின் உட்புறம் வெவ்வேறு திசைகளில் மூன்று கெனல்கள் (canals) உள்ளன. அதில் உள்ள கால்சியம் துகள்கள் ஓர் இடத்திலிருந்து மறு இடத்திற்கு இயல்பாய் நகர்ந்து அந்த இடத்திலேயே நிலையாய் இருக்கும் போது, தலைச் சுற்றல் ஏற்படும். பிறகு மீண்டும் இயல்பு நிலையை அடையும் போது தலைச்சுற்றல் சரியாகும்.
இப்படி கால்சியம் நகர்விற்கு இது தான் காரணம் என்று குறிப்பாகக் கூறுவதற்கு இல்லை; என்றாலும், வெகு நேரமாகப் பல காரணங்களுக்காகப் படுத்து இருக்கும் பொழுது இது நிகழலாம்! இதுவும் அனைவருக்கும் வரும் என்று கூறுவதற்கு இல்லை; சிலருக்கே வரலாம்.
மேலும் வைரஸ் கிருமிகள் நோய்த் தோற்றானது காது நரம்புகளில் ஏற்படும் போதும் இவ்வகையான தலைச்சுற்றல் வரலாம்.
ஒற்றைத் தலைவலி வெர்டிகோ (Migraine-Associated Vertigo):
முறையான உணவுப் பழக்கவழக்கம்யின்மை, தேவைக்கேற்ப நீர் அருந்தாமை, நெடுநேரப் பயணம், உடல் அயர்வு அல்லது சோர்வு, மன அழுத்தம் இது போன்ற காரணங்களாலும் ஒற்றைத் தலைவலியானது வரக்கூடும்.
இதன் காரணமாகவும் தலைச் சுற்றல் ஏற்படலாம். இவ்வகையான தலைச்சுற்றல் மைக்கெரைன் அசோசியேட்டட் வெட்டிக்கோ ஆகும்.
READ ALSO: உங்க நுரையீரல் ஆரோக்கியமா இருக்கா?
தீர்வுகள்:
காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவரையோ அல்லது நரம்பியல் மருத்துவரையோ அணுகி இதற்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வி.என்.ஜி பரிசோதனையின் மூலம் Videonystagmography (VNG) இஃது எவ்வகையான தலைச்சுற்றல் என்பதைக் கண்டறிந்து, அதற்கான மருந்துகளையோ அல்லது படுக்கை நிலை மாற்ற செயல் மூலமோ தலைச்சுற்றலில் இருந்து குணம் பெறலாம்.
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். அத்தகைய நோயற்ற வாழ்வைக் குறையற்றச் செல்வமாகப் பெற நமது வாழ்க்கை முறையை நமது உடலின் ஆரோக்கியத்திற்கு உகந்த வகையில் மாற்றி அமைத்துக் கொண்டாலே நம் முன்னோரின் வாக்கு நம்மின் வாழ்வாகும்! நோயற்ற வாழ்வை வாழ நமது வாழ்க்கை முறையை ஆரோக்கியத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வோம்!! நலமாய் வாழ்வோம்!!!