Homeஉடல் நலம்சிகரெட் பழக்கத்தை உடனடியாக நிறுத்தும் வழி!

சிகரெட் பழக்கத்தை உடனடியாக நிறுத்தும் வழி!

‘புற்றுநோய்’ என்றாலே நாம் கூறுகின்ற காரணங்களில் முதன்மையாக இருப்பது புகையிலையும் அதனோடு தொடர்புடைய பொருட்களுமே.

அத்தகைய புகையிலைத் தொடர்பான பொருட்களில் சிறியவர் முதல் முதியவர் வரை அனைவரையும் தனது கட்டுப்பாட்டிற்குள் ஓர் அடிமையாக வைத்திருக்கக் கூடியது ‘புகைப் பிடித்தல்’ பழக்கம் என்றால் அது மிகையாகாது.

புகைப் பிடித்தலால் புகைப்பவருக்கு மட்டும் தீங்கல்ல; புகைப்பவர் புகைத்து விடுகின்ற புகையைச் சுவாசிக்கும் அனைவருக்குமே தீங்குத் தான்!

இதை நன்கு அறிந்தப் போதிலும் தனக்காகவும் தவிர்க்க இயலாமல், பிறருக்காகவும் தவிர்க்க இயலாமல் தடுமாறுகின்ற மக்களுக்கான வழிகாட்டுதல்களை அளிக்கிறார் நுரையீரலியல் சிறப்பு மருத்துவர் திரு.எஸ்.ஜெயராமன் அவர்கள்.

புகையிலையும் அதன் வேதிப் பொருட்களும்

புகையிலையில் 4000 வேதிப்பொருட்கள் உள்ளன. அதில் இருநூற்று ஐம்பது வேதிப் பொருட்கள் புற்றுநோயிக்குக் காரணமானவை! இதிலும் குறிப்பாக ‘நிக்கோட்டின்’ என்ற வேதிப்பொருள் அடிமையாக்கும் தன்மையைக் கொண்டது!

அஃதாவது அதன் அளவு இரத்தில் குறையும் போது அதன் அளவை இரத்தில் ஈடு செய்ய அது மனிதனை மீண்டும் அதனை உட்செலுத்தும் படித் தூண்டும்.  இதனாலேயே மனிதர்கள் இந்தப் பழக்கத்திற்கு அடிமைகளாக மாறுகிறார்கள்!

READ ALSO: முதியோரைத் தாக்கும் கோடைக்கால நோய்கள்

மேலும் இதில் கரிப் பொருட்கள் (Tar), கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide), கார்பன்-டை -ஆக்சைடு (Carbon Dioxide), சல்பர்- டை -ஆக்சைடு (Sulphur Dioxide), நைட்ரஸ் ஆக்சைடு (Nitrous Oxide) போன்ற தீங்கிழைக்கும் வேதிப்பொருட்களும் உள்ளன.

புகைப் பிடித்தலால் ஏற்படும் பாதிப்புகள்

புகைக்கும் போது புகையானது நேரடியாக முதலில் நுரையீரலைச் சென்று சேருகிறது. இதனால் முதலில் பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரல். பிறகு இதயம், மூளை என்று தலை முதல் பாதம் வரை பாதிப்புகள் அனைத்து உறுப்புகளிலும் நிகழ்கின்றன.

புகைப் பிடிப்பதை நிறுத்த உதவும் வழிமுறைகள்

புகைப் பிடித்தலால் விளையும் பாதிப்புகளான நுரையீரல் செயலிழப்பு, மாரடைப்பு, மூளைப் பக்க வாதம், உயிரிழப்பு போன்ற விபரீத விளைவுகளை விளக்கும் வகையில் ஆலோசனைகள் அளிக்கப்படும். இவற்றைப் புரிந்து கொண்டு மக்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சிப்பார்கள்.

மேலும் அவர்களின் சுய முயற்சியால் அப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியாத பட்சத்தில் அவர்களுக்கு உதவ நிக்கோடினுக்கு மாறுதலாக ஒட்டு (Patch) பசை (Gum), உறிஞ்சி (Inhaler) போன்றவை அளிக்கப்படுகிறன.

அப்போதும் புகைப் பிடித்தல் உந்துதலைப் புறக்கணிக்க முடியாமல் போகும் போது இதற்காகப் பிரத்தியேகமாக உள்ள மாத்திரையை மூன்று முதல் நான்கு மாதங்கள் தொடர்ந்து உட்கொள்ள அப்பழக்கத்தில் இருந்து மீண்டு வரலாம்.

இதன் பிறகு மீண்டும் அப்பழக்கத்திற்கு உட்படாமல் இருக்கக் குடும்பம், உறவுகள், நண்பர்கள் என்று அனைவரும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மீண்டும் அவர்கள் அச்சூழலுக்குள் செல்லாமல் பாதுகாக்கவும் வேண்டும்.

READ ALSO: இதயநோய் வராமல் தடுக்கும் 5 வழிகள்!

இவ்வாறு புகைப் பிடித்தல் எந்த நிலையில் இருந்தாலும் அந்த நிலையிலேயே புகைத்தலை நிறுத்தும் போது மேலும் பாதிப்புகள் அதிகமாகாமல் தவிர்க்கலாம். மேலும் தற்போது வரை இப்பழக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்தும் படிப்படியாகக் குணமாகலாம்.

‘பழகிய ஒன்றை விடுவது என்பது சாத்தியமற்றது’ என்று அப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கூறுவார்கள். ஆனால் அடிமைகள் என்று இங்கு யாரும் இல்லை என்பதை இப்பழக்கத்திற்கு உள்ளானவர்கள் உணரும் போது அதில் இருந்து வெளிவருவது சாத்தியம்!

காரணம் இதற்குத் தேவை மனப் பலம்; அஃது அனைவருக்கும் உள்ளது; அதனை உணர்ந்தவே இத்தருணம் என்பதை உணர்ந்து, மனப் பலம் கொண்டு இத்தீயப் புகைப்பழக்கத்தில் இருந்து விடுபடுவோம்!! நலமாய் நோயின்றி வாழ்வோம்!!!

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read