நாம் வாழக்கூடிய இன்றைய சூழ்நிலை மற்றும் வாழ்க்கை முறையில் ‘பயணம்’ என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
சொந்த வாகனத்தில் பயணம் செய்வது, பொது வாகனத்தில் பயணம் செய்வது என்று பயணத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
இப்படி எந்த வகையான பயணத்தை நாம் மேற்கொண்டாலும் காற்றின் மூலம் பரவக்கூடிய நோய்கள் தவிர்க்க முடியாதவை!
இத்தகைய நோய்களைத் தவிர்த்து, நுரையீரலைக் காக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை அளிக்கிறார் நுரையீரலியல் சிறப்பு மருத்துவர் திரு.எஸ்.ஜெயராமன் அவர்கள்.

காற்றில் பரவும் நுரையீரல் நோய்கள்
இன்றைய காலகட்டத்தில் பயணம் செய்வதே ஆபத்துக் காரணித் தான்! ஏனென்றால் பயணத்தின் போது நாம் அதிக மக்களை ஒரே இடத்தில் சந்திக்கின்றோம்.
இந்தச் சந்திப்பில் ஒருவரோடு ஒருவர் பேசும் போது, தும்பும் போது, இரும்பும் போது காற்றின் மூலமாக நோய்க் கிருமிகள் ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்குப் பரவும்.
மேலும் ஒவ்வொரு இடத்திலும் அதன் சுற்றுச் சூழலுக்கு ஏற்றால் போல் நோய்க் கிருமிகள் வசிக்கும். அக்கிருமிகளும் சுவாசித்தல் மூலம் நுரையீரலைத் தாக்கும்.

ஏற்கனவே ஆஸ்துமா, சுவாச அடைப்பு நோய் போன்ற நுரையீரல் நோய் உள்ளவர்களை இந்நோய்க் கிருமிகள் விரைவாகத் தாக்கும்.
மேலும் பரவும் நோய்கள், ஒவ்வாமை, எரிச்சலூட்டும் ஒவ்வாமை, காச நோய்க் கிருமிகள் போன்றவையும் தாக்கும் சூழல் உள்ளது.
இதிலும் குறிப்பாகக் காசநோய், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை நோய்த் தொற்றுகள் வெகு இயல்பாக, எளிதாக மக்களிடம் பரவும்.
பாதுகாப்பு வழிமுறைகள்
ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், நாள்பட்டச் சுவாச அடைப்பு நோய், இடைப்பட்ட நுரையீரல் நோய் போன்ற நுரையீரல் நோய் உள்ளவர்கள் அதீதக் கவனத்தோடும், தற்காப்பு நடவடிக்கையோடும் பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.
தடுப்பு நடவடிக்கையாகத் தவறாமல் முகக் கவசம் அணிதல், முறையாகத் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றைப் பின்பற்றப்பட வேண்டும்.
மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்ற இயலாத சூழ்நிலையில் பயணம் செய்வதைத் தவிர்த்தல் சாலச் சிறந்தது. இவ்வாறு செய்யும் போது நம்மிடமிருந்து நோய் பிறருக்குப் பரவுவதும், பிறரிடம் இருந்து நோயானது நமக்குப் பரவுவதும் தடைச் செய்யப்படும்.
READ ALSO: உப்பு குறைவா சாப்பிட்டா இதயத்துக்கு நல்லதா?
சுவாசிக்காமலும் இருக்க இயலாது; அதேபோன்று பயணம் செய்வதையும் தவிர்க்க முடியாது. ஆனால் தற்காப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றிப் பிறரிடம் இருந்து நம்மையும் பாதுகாக்கலாம்;
நம்மின் மூலம் நோய்கள் பரவுவதையும் தடுத்து நிறுத்தலாம். எனவே தற்காப்பு நடவடிக்கைகளின் மூலம் நம்மையும், உலகையும் காப்போம்!
கட்டுரையாளர்
