இயலாத நிலையிலுள்ளவர்களை பராமரிப்போருக்கான வழிகாட்டி
இந்த விழிப்புணர்வுத் தகவல்கள், கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு, தன்னைத் தானே பராமரித்துக்கொள்ள முடியாமல், அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளுக்கு அடுத்தவரை எதிர்பார்த்து உள்ளவர்களைப் பராமரிக்கும் சேவை உள்ளம் கொண்டவர்களுக்கு உதவும்.
நீண்ட காலமாக நீடிக்கும் ஸ்ட்ரோக், டிமென்சியா எனும் மறதி நோய், பார்க்கின்சன்ஸ் போன்ற பிரச்னைகளில் உள்ளவர்கள், கீழே விழுந்து படுக்கையில் இருப்பவர்கள், விபத்தில் சிக்கியவர்கள், மாற்றுத் திறனாளிகள் – குறிப்பாக மூத்த குடிமக்கள் போன்றவர்களைப் பராமரிக்கும் சூழல் நம்மில் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். எதிர்பாராமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தப் பொறுப்பு நாள் கணக்கில் அல்ல; ஆண்டுக் கணக்கில் நீடிக்கக் கூடியது. சுருக்கமாகக் கூறினால் இது சுகமான சுமையாகவே இருக்கும். ஏனெனில், பராமரிப்பது என்பது எளிதானதல்ல…
இப்படி, அன்புக்குரியவர்களுக்காக நேரத்தையும் உழைப்பையும் அளிக்கும் பராமரிப்பாளர்களுக்கு பல நேரங்களில் சொந்த வாழ்க்கை, தனக்கான நேரம் என்பதே இல்லாமல் போகக் கூடும். அதனால் இயலாத நிலையிலுள்ளவர்களைப் பராமரிக்கும் நிலையிலுள்ளவர்கள் தங்களையும் பராமரித்துக் கொள்வது மிக அவசியம்.
மீ டைம் எடுத்துக் கொள்ளுங்கள்!
உங்கள் அன்புக்குரியவரைப் பராமரிப்பதற்காக நீண்ட நேரம் செலவிடும் நீங்கள், உங்களுக்கான நேரத்தையும் (Me Time) எடுத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்களாவது உங்களுக்கே உங்களுக்காகச் செலவிட வேண்டியது அவசியம். அந்த நேரத்தில் குடும்பத்தில் உள்ள மற்றவர்களைப் பராமரிப்புப் பணியில் ஈடுபடச் செய்யுங்கள்.
உங்களுக்கான சில மணி நேரங்களில் என்ன செய்யலாம்?
- இயல்பாகவே இந்தப் பணி காரணமாக உங்களுக்கு போதுமான உறக்கம் இருக்காது. அதனால், கிடைக்கும் நேரத்தில் நன்றாக உறங்கலாம்.
- அருகிலுள்ள பூங்கா, கடற்கரை போன்ற இயற்கைச் சூழல் மிகுந்த இடங்களுக்குச் சென்று வருவது உங்களை ரிலாக்ஸாக உணர வைக்கும்.
- மால் அல்லது ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் சென்று விண்டோ ஷாப்பிங்கோ, தேவையெனில் நிஜ ஷாப்பிங்கோ செய்யலாம்.
- யோகா, தியானப் பயிற்சியில் ஈடுபடலாம்.
- நடைப் பயிற்சி அல்லது ஜாக்கிங் செய்யலாம். ஜிம் செல்லலாம்.
- நண்பர்களைச் சந்தித்து அவர்களோடு பொழுதைக் கழிக்கலாம்.
- புத்தகங்கள் படிக்கலாம்.
- இசை கேட்கலாம்.
- தொலைக்காட்சி, திரைப்படங்கள், வெப் சீரிஸ் பார்க்கலாம்.
- உங்களுக்கு விருப்பமான விளையாட்டுகள், பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்.
- மேற்கண்ட பட்டியலில் உங்களுக்கு விருப்பமானவற்றுக்கு நேரம் செலவழிப்பதை அன்றாட வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதேபோல மாதம் ஒருமுறையாவது ஒரிரு நாள்கள் மொத்தமாக பராமரிப்புப் பணியிலிருந்து மொத்தமாக விடுபட்டு வேறு எங்கேனும் சென்று வாருங்கள். அது ஒரு பிக்னிக் ஆகவோ, உறவினர்-நண்பர்களின் வீடாகவோ இருக்கலாம்.
நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய மிக முக்கியமான விஷயம் இதுதான்!
இதுபோன்ற உங்களுக்கே உங்களுக்கான நேரங்களில் உங்கள் அன்புக்குரிய நோயாளியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். இந்த நேரத்தில் அந்தக் கவலையை விடுங்கள். அவரை மற்றவர்கள் கவனித்துக் கொள்வார்கள். ரிலாக்ஸ்!

பராமரிப்பாளரின் குடும்பத்தினர்களின் கனிவான கவனத்துக்கு…
‘‘இந்த உலகில் நான்கு வகையான மக்கள் மட்டுமே உள்ளனர். பராமரிப்பாளர்களாக இருந்தவர்கள், இப்போது பராமரிப்பாளர்களாக இருப்பவர்கள், இனி பராமரிப்பாளர்களாக இருக்கப் போகிறவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் தேவைப்படுபவர்கள். பராமரிப்பு என்பது உலகளாவியது!’’
அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்ணாக இருந்தவரும், எழுத்தாளர் மற்றும் செயல்பாட்டாளருமான ரோஸ்லின் கார்ட்டர்
ஆம்…
கவனிப்பு தேவைப்படுபவர்களுக்கு மட்டுமல்ல; அந்தக் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கும் சுமை அல்லது மன அழுத்தத்தைக் குறைக்க தேவையானதை பராமரிப்பாளர்கள் செய்கிறார்கள். அதன் காரணமாக அவர்கள் தனிப்பட்ட நேரத்தை இழக்கிறார்கள். சிலருக்கு இது வாழ்க்கை முழுக்கவே தொடரக்கூடும். பராமரிப்பாளர் என்பவர் உங்கள் குடும்ப உறுப்பினராக இருந்தாலும், நெருங்கிய நண்பராக இருந்தாலும், அவர் உங்கள் வாழ்க்கையில் இன்றியமையாத அங்கம். அவருக்கு நன்றி சொல்ல வேண்டியது நம் கடமை. ஒரு பராமரிப்பாளரை அங்கீகரிப்பதே அவர்களின் பணியை தொடரச் செய்யும். ஏனெனில், இந்தப் பணி நாம் எல்லோரும் நினைக்கக்கூடிய அளவு அவ்வளவு எளிதானதல்ல!

பராமரிப்பாளருக்கு குடும்பத்தினர் எப்படி உதவலாம்?
நன்றி சொல்ல ஒரு வார்த்தை!
நம்மைச் சுற்றியுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, அடிப்படைகளை மறந்துவிடுவது எளிதாகிவிட்டது. ஓர் உண்மையான கையால் எழுதப்பட்ட, உறுதியான குறிப்பு ஒரு வாட்ஸ்அப் குறுந்தகவலை விட மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். அவர்களின் கடின உழைப்புக்கு நீங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதைப் பகிர்ந்துகொள்வதற்கான குறிப்பை எழுதுங்கள். “தயவுசெய்து” அல்லது “நன்றி” என்று கூறுவதுகூட அவர்களின் சேவைகளுக்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டும். இப்படி உங்கள் நன்றியை இதயப்பூர்வமான வார்த்தைகளால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அவர்களின் வாழ்க்கையில் ஆர்வம் காட்டுங்கள்!
அவர்கள் சொல்வதைக் கேட்க அங்கே இருங்கள். அவர்களின் வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்குகளில் ஆர்வம் காட்டுவது, நீங்கள் அவர்களையும் அவர்களின் சேவைகளையும் கவனித்துக்கொள்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்த உதவும். அவர்களின் அன்றாட நாள்களைப் பற்றிக் கேட்பதன் மூலம் நீங்கள் ஒருவரையொருவர் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் அவ்வப்போது கோபமோ, வருத்தமோ, மகிழ்ச்சியோ- தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தட்டும். நீங்கள் அதை அவர்கள் பக்கமிருந்து உணர்ந்துகொள்வது முக்கியம்.
சுய கவனிப்பை (Self Care) ஊக்குவிக்கவும்!
தினமும் அவருக்கான தனிப்பட்ட நேரம் கிடைக்க வழிவகை செய்யுங்கள். அந்த நேரத்தில் நீங்களோ, குடும்பத்திலுள்ள மற்றவர்களோ நோயாளியைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். இதை ஒருபோதும் தவிர்க்காதீர்கள். பராமரிப்பாளரின் உடல்நலம், மனநலத்திலும் அக்கறை காட்டுங்கள்.
உதவிக் கரம் கொடுங்கள்!
ஒரு நல்ல செயல் வாயிலாக நீண்ட தூரம் செல்ல முடியும். நீங்கள் அவர்கள் செய்ய வேண்டிய தனிப்பட்ட காரியங்களை ஏற்றுக்கொண்டு, அவற்றைப் பொறுப்பாகச் செய்து முடியுங்கள்.
காது கொடுங்கள்!
சில நேரங்களில், நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம் என்ன தெரியுமா? அவரை உணவகத்துக்குச் அழைத்துச் சென்று, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேளுங்கள், இது அவர்களின் உணர்வுகளைப் பகிர உதவும்.
நோயின் கடுமையில் தவிக்கும் ஒருவருக்கு அக்கறையான பராமரிப்பு தருவதைவிட இந்த உலகில் உன்னதமான விஷயம் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட அன்பும் கருணையுமான சேவை புரியும் பராமரிப்பாளர்களுக்கு
நன்றிகளையும் பாராட்டுகளையும் ப்ரியங்களையும் உளமாரத் தெரிவிக்கிறோம்!
In a challenging situation, it is important to identify existing resources and available support. Sometimes caregivers fail to identify this. Also, sometimes they consciously refuse to avail it. Hence there should be a mentor or counsellor for the caregiver. Caregiver can freely ventilate their feelings, pain and helplessness to the counsellor.
Counsellor can also play the role of family counsellor to resolve family conflict. Once family conflict is resolved and interpersonal communication is revived then primary caregiver gets an additional resource of family member support.
I can volunteer to give support to caregivers.