சளித் தொல்லை இல்லாத நபர்களும் இல்லை; சளித் தொல்லை இல்லாத பருவ நிலையும் இல்லை! நாசியில் இருந்தும் சளியானது வெளிவருகிறது; தொண்டைக் குழி மூலம் வாய் வழியாகவும் வெளிவருகிறது!
அஃது எவ்வாறு நிகழ்கிறது? என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது அல்லவா?!? நுரையீரலில் சளி உருவாகும் போது மட்டுமே அது நாசி வழியாகவும், தொண்டைக் குழியின் மூலம் வாய் வழியாகவும் வெளிவருகிறது!
எனில் இந்தச் சளி எப்படி நுரையீரலில் உருவாகிறது? இது குறித்து விளக்கம் அளிக்கிறார் நுரையீரலியல் சிறப்பு மருத்துவர் திரு.எஸ்.ஜெயராமன் அவர்கள்.
நுரையீரலில் சளி
“மியூகஸ் (Mucus)” என்றால் சளி என்று பொருள். நுரையீரலில் சளி எப்படிச் சேர்கின்றது என்றால், இயல்பாகவே நுரையீரலில் சளியை உற்பத்திச் செய்யக்கூடிய சில சுரப்பிகள் உள்ளன. ஒரு சிலருக்கு இந்தச் சுரப்பிகள் அதிகமாகச் சுரப்பதால் சளியானது பிரச்சனைக்குரிய ஒன்றாக மாறுகிறது.
ஒவ்வாமை, மாசு, தூசு, நோய்த் தொற்றுக் கிருமிகள் போன்றவை அதிக அளவில் நுரையீரலுக்குள் செல்வதால், அதன் பக்க விளைவாக இச்சுரப்பிகள் அதிகமாகச் சுரந்துச் சளியை அதிக அளவில் உற்பத்திச் செய்வதே இதற்குக் காரணம்!
இவ்வாறு சளித் தோன்றுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஒவ்வாமையே முதன்மையான காரணியாகக் கருதப்படுகிறது. இப்படி உருவான சலியானது வெளியேற்றப்படும் போது வெள்ளை, மஞ்சள், மற்றும் பச்சை நிறங்களில் காணப்படுகின்றன. இந்த நிற மாற்றத்திற்குக் காரணம் சூடோமோனாஸ் (Pseudomonas Bacteria) என்ற பாக்டீரியா ஆகும்.
READ ALSO: உப்பு குறைவா சாப்பிட்டா இதயத்துக்கு நல்லதா?
நுரையீரல் சளியும், உபாதைகளும்
இவ்வாறு உற்பத்தியான அதிகப்படியான சளியானது மூச்சுக் குழலில் படியும்போது இரும்பல், மூச்சு இரைப்பு, மூச்சுத் திணறல்,
மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகளை ஏற்படுத்துகின்றது.
நீண்ட நாட்களாக மாசு, தூசு நிறைந்த காற்றையே சுவாசிக்கும் போது சிலருக்கு மூச்சுக்குழாய் அழற்சி (Bronchitis) நோயும் ஏற்படுகின்றது. சில வேளைகளில், சிலருக்கு இந்தப் பிரச்சனையானது நுரையீரல் புற்று நோயாகவும் மாறுகிறது. சளியுடன் இரத்தமும் கலந்து வெளிவருவது காச நோயாகும்.
நுரையீரல் சளிக்கான சிகிச்சை முறைகள்
ஒவ்வாமை எதிர்ப்புச் சிகிச்சை, உறிஞ்சி மருந்துகள், நோய்த் தொற்று எதிர்ப்பு மருந்துகள், காசநோய் இருப்பின் அதற்கான மருந்துகள், நுரையீரலில் தங்கி இருக்கக்கூடிய சளியை வெளியேற்றுவதற்கான திரவ மற்றும் திட மருந்துகள் உள்ளன.
ஆஸ்துமா, நுரையீரல் அகழ்சி நோய், நிமோனியா, காசநோய் உள்ளவர்களுக்கு அதிகப்படியான சளிச் சேரும் போது மருந்துகள் வாய்வு (Gas) நிலையில் உட்செலுத்தப்படும். இச்சிகிச்சை முறைக்கு நெபுலைசர் (Nebulizer) சிகிச்சை என்று பெயர்.
இந்தச் சிகிச்சை முறையின் மூலம் சுவாசப் பாதையில் அடைப்பட்டுள்ள சளியானது வெளியேற்றப்பட்டு, சுருங்கிய மூச்சுக் குழல் விரிவடைந்து, இயல்பான சுவாசம் நடைபெறும். இதனால் இதய வலியும் புறக்கணிக்கப்படும்.
READ ALSO: மூச்சு விடும்போது விசில் சத்தம் வர காரணம்
தற்காப்பு நடவடிக்கைகள்
முகக் கவசம் அணிந்து மாசு, தூசு, நோய்த் தொற்றுக் கிருமிகள், ஒவ்வாமைப் போன்றவற்றில் இருந்தும் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். மூச்சுப் பயிற்சி மூலமும் நுரையீரலைப் பாதுகாக்கலாம்.
சிறிய உயிரிகளால் பெரிய உயிர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளுக்கு உதாரணமாக, “யானையின் காதில் எறும்பு நுழைந்தது போல” என்று கூறுவார்கள்.
அதைப் போலத்தான் யானையையே அடக்கி ஆளக்கூடிய ஆற்றல் கொண்ட மனித இனத்தின் சுவாசப் பாதையில் கண்ணுக்கே தெரியாத தூசியும், மாசும், நோய்க் கிருமிகளும் நுழைந்து முக்கியச் செயலான சுவாசத்தையே முடக்குகின்றன; இது வியப்புத்தான்!
ஆனால் அதனையே ஒரு முகக் கவசம் முடக்குகின்றது; இது வியப்பினும் வியப்பு!! எனவே முகக் கவசம் அணிந்து நுரையீரலைப் பாதுகாப்போம்!!!