புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் உடல் பாதிப்புகள், புகைத்தலால் ஏற்படும் நுரையீரல் பாதிப்புகள் போன்ற அனைத்தையும் நாம் நன்கு அறிவோம்.
இவ்வாறு புகைத்தலால் பாதிப்புக்கு உள்ளான நுரையீரலின் செயல்பாடுப் புகைத்தலை நிறுத்திய பிறகு எவ்வாறு இருக்கும்? இந்த ஐயம் என்றேனும் உங்களுக்கு எழுந்திருக்கின்றதா?
அவ்வாறு எழுந்து இருக்குமேயானால் இந்தக் கட்டுரை உங்களுக்கானதே. உங்களின் சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்கிறார் நுரையீரலியல் சிறப்பு மருத்துவர் திரு.எஸ்.ஜெயராமன் அவர்கள்.
புகைத்தல் புகை மற்றும் புகைத்தல் புகை அல்லாத இதர மாசுகள், தூசிகளால் நுரையீரலானது பாதிப்பிற்கு உள்ளாகின்றது.

எனவே புகையிலைப் புகைத்தலில் இருந்து வரக்கூடிய புகை மற்றும் இதர வெளிப்புற மாசுகள் மீண்டும் நுரையீரலுக்குள் செல்வதைத் தடுக்கும் பட்சத்தில் நுரையீரலானது மீண்டும் நல்ல முறையில் இயங்கத் தொடங்கும்.
எனவே பாதிப்புக்கு உள்ளான நுரையீரலையும் நல்ல முறையில் இயங்கச் செய்ய மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதனால் நுரையீரலுக்குத் தேவையான ஆக்சிஜனானது கிடைக்கும்; எனவே, பாதிப்பிற்கு உள்ளான நுரையீரல் கூட மீண்டும் அதனைத் தூய்மை செய்து கொண்டு, குணமடைந்து நல்ல முறையில் இயக்கும்!
மேலும் புகைத்தலால் பாதிப்பிற்கு உள்ளான நுரையீரல் நோயாளிகள் தவிர, நுரையீரல் தொற்று, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் பாதிப்பிற்கு உள்ளான நுரையீரல் நோயாளிகளும் வெளியில் செல்லும்போது தனிமனித இடைவெளி,
READ ALSO: முதுமையில் எய்ட்ஸ் வருவது உண்மையா?
முகக் கவசம் அணிதல், தடுப்பூசிச் செலுத்திக் கொள்ளுதல் போன்ற செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் நுரையீரலானது ஆரோக்கியம் பெற்று, நல்ல முறையில் இயங்கும்.
இத்துடன் நுரையீரல் புற்றுநோய், இடைநிலை நுரையீரல் நோய் [ILD] போன்ற நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுக் குணம் அடைந்தவர்களும் மேற்கூறியச் செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அத்துடன் புரதம், வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்திக் கிடைக்கப்பெற்று, நுரையீரல் பாதிப்பு மேலும் அதிகமாகாமல் தடுக்கப்படும்; நுரையீரலும் ஆரோக்கியம் பெற்றுச் சிறப்பாக இயங்கும்.
உடலின் உள்ளுறுப்புகள் பழுதடையும் போது மேலும் அவை பழுதடையாமல் பாதுகாக்க மருத்துவரின் அறிவுரைகளையும், மருத்துவ ஆலோசனைகளையும் பின்பற்றி, மருந்துகளையும் முறையாக எடுத்துக் கொள்வோம்;
பாதிப்பு அதிகமாகாமல் உறுப்புகளைப் பாதுகாப்போம்; பாதிப்பிலிருந்தும் உறுப்புகளைப் பாதுகாப்போம்.
கட்டுரையாளர்
