பெற்றவர்களின் அன்பை, காலம் கடந்து செல்வதற்கு முன்பாகவே அறிந்துகொள்ள வேண்டும்.
முதியவர் ஒருவர் தன்னுடைய வழக்கை நீதிபதி முன்பாக வைக்க நீதிமன்றத்திற்குள் நுழைந்தார்.
நீதிபதி கேட்டார், ‘யாருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளீர்கள்?’ ‘என்னுடைய மகனுக்கு எதிராக’ என்று பதில் கூறியதும் நீதிபதி ஆச்சரியம் அடைந்து கேட்டார்,
‘என்ன புகார்?’ அதற்கு முதியவர் ‘ என் மகனின் திறமைக்கேற்ப எனக்கு மாதாந்திரச் செலவு கேட்டு வந்திருக்கிறேன்’ என்றார்.
நீதிபதி மிகவும் ஆச்சரியம் அடைந்தார். மகனின் பெயர் மற்றும் முகவரியை எடுத்துக்கொண்ட பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
மகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி கூறினார், ‘மாதாந்திரச் செலவுகள் எவ்வளவு குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செலுத்த வேண்டும் என்று உங்கள் தந்தை வழக்குப்பதிவு செய்துள்ளார்’ என்று.
Click to Read: முதியோருக்கு ஏற்படும் ‘நீர் சுருக்கு’
Click to Watch: முதுமையை உணர்த்தும் அறிகுறிகள்
மகன் ஆச்சரியத்துடன் சொன்னான்… ‘பெரும் பணக்காரர்களாக இருப்பதால் என் உதவி தேவையில்லையே… என்னிடம் ஏன் செலவுக்குக் கேட்கிறார்கள்’ என்று.
நீதிபதி கூறினார்… ‘அது உங்கள் தந்தையின் கோரிக்கை. அவர் தன் கோரிக்கையில் சுதந்திரமாகவும் நியாயமாகவும் இருக்கிறார்’ என்று.
முதியவர் கூறினார்… ‘நீதிபதி அவர்களே, மாதம் ஒரு ரூபாய் மட்டும் அவர் கையால் என்னிடத்தில் வந்து கொடுத்தால் போதும்… நான் மகிழ்ச்சி அடைவேன்’ என்று.
நீதிபதி கூறினார்… ‘அது உங்களின் உரிமையே. நானும் அதன்படி உத்தரவிடுகிறேன். வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மாதமும் தந்தைக்கு ஒரு ரூபாயைத் தனது சொந்தக் கைகளால் தாமதமின்றி வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார் நீதிபதி!
நீதிமன்ற அறையிலிருந்து வெளியேறும் முன், வயதான அந்தத் தந்தையிடம் நீதிபதி, ‘உங்களுக்கு ஆட்சேபணையில்லை என்றால் என்னுடைய சந்தேகத்தைத் தீர்க்க வேண்டும்.
நீங்களே பெரும் பணக்காரராக இருக்கும் போது, எதற்கு இந்த வழக்கைத் தாக்கல் செய்தீர்கள், அதுவும் இவ்வளவு குறைந்த தொகையை ஏன் கேட்டீர்கள்?’ என்றார்.
அதற்கு முதியவர் அழுதுகொண்டே, ‘மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே… என் மகனைக் காண நான் ஏங்குகிறேன். ஆனால், அவரோ வேலையில் மிகவும் மும்முரமாக இருக்கிறார்.
என் மகன் மீது நான் மிகவும் ஆழ்ந்த அன்பில் உள்ளேன். என்னால் அவர் முகத்தைக்கூடப் பார்க்க முடியவில்லை. நான் அவரைப் பற்றி நினைக்கும் எல்லா நேரமும் அவரால் என்னுடன் தொலைபேசியில் கூடப் பேச முடியவில்லை.
மாதம் ஒருமுறையாவது அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்தவழக்கைப் பதிவு செய்துள்ளேன்’ என்றார்.
இதைக் கேட்ட நீதிபதி மற்றவர்களுடன் சேர்ந்து அடக்க முடியாமல் அழத் தொடங்கிவிட்டார்.
பெற்றோர் அவர்களின் மனத்தில் எவ்வளவு அன்பு வைத்துள்ளார்கள் என்பதைக் காலம் கடந்து செல்வதற்கு முன்பாகவே மகன்கள் அறிந்துகொள்ள வேண்டும்!