Homeஉடல் நலம்இரவு தூக்கத்தின்போது மூச்சு வாங்குதா?

இரவு தூக்கத்தின்போது மூச்சு வாங்குதா?

இயந்திரத்தின் பாகங்கள் பழுதடையும் போது அதனைச் சரி செய்து கொள்ளவும், சரி செய்யவே இயலாத நிலையில் மாற்றுப் பாகங்களைப் பொருத்திக் கொள்ளுவும் இன்றைய அறிவியல் வளர்ச்சி உதவுகின்றது‌.

அதனைப் போன்றே உடலின் உறுப்புகளைச் சரி செய்து கொள்ளவும், மாற்று உறுப்புகளைப் பொருத்திக் கொள்ளவும் நவீன மருத்துவ வளர்ச்சி உதவுகின்றது.

எனினும் இயந்திரத்தின் பாகங்கள் பழுதடைவதைச் சில அறிகுறிகளை வைத்து நாம் கண்டுபிடிக்கின்றோம்! அவ்வாறே உடலின் முக்கிய உறுப்பான இதயமும் செயலிழப்பு நிலையை அடையத் தொடங்குவதைச் சில அறிகுறிகளை வைத்து முன்னரே கண்டறியலாம்;

அந்த அறிகுறிகள் என்னென்ன என்று விளக்குகிறார் இருதய நோய் நிபுணரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் முதன்மை மருத்துவருமான திரு. சு. தில்லை வள்ளல் அவர்கள்.

இருதயச் செயலிழப்பும், உறக்கத்தில் சுவாசச் சிக்கலும்

இரவில் எந்தவித அறிகுறியும், பிரச்சனையும் இல்லாமல் உறங்கச் செல்பவர் நடு இரவில் தூக்கத்தில் அதிகப்படியான மூச்சு வாங்கும் பிரச்சனைக்கு உள்ளாவார்.

இந்தப் பாதிப்பிற்குப் பராக்ஸிஸ்மல் நாக்டர்னல் டிஸ்ப்னியா (Paroxysmal nocturnal dyspnea – PND) என்று பெயர். நுரையீரலுக்குச் செல்லும் காற்று விலகலே இதற்குக் காரணம்.

இவ்வேளைகளில் கதவு, சன்னலைத் திறந்து வெளிக் காற்றை நன்கு சுவாசித்தாலே இந்தப் பிரச்சனையிலிருந்து குறைந்தது அரைமணி நேரத்தில் குணமடையலாம்.

எனினும், இந்தப் பிரச்சனை ஏற்பட வேறேதேனும் காரணம் உள்ளதா என்று மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக் கண்டறிய வேண்டும்.

மேலும் சிலருக்குப் படுக்கும்போது மூச்சுத் திணறல் இருக்கும். எழுந்து அமர்ந்தப் பின் சுவாசமானது இயல்பாக இருக்கும்! இந்தப் பிரச்சினைக்கு ஆர்த்தோப்னியா (Orthopnea) என்று பெயர். இது சற்றுத் தீவிரமான பாதிப்பைக் கொண்ட பிரச்சனையே.

READ ALSO: நுரையீரலை வலுவாக்கும் மூச்சுப்பயிற்சிகள்

வலதுப் பக்க இருதயச் செயலிழப்பு

சென்ற கட்டுரையில் இடது பக்க இருதயச் செயலிழப்பைப் பற்றி அறிந்துக் கொண்டோம். இக்கட்டுரையில் வலதுப் பக்க இருதயச் செயலிழப்பைப் பற்றி அறிந்து கொள்வோம். வலதுப் பக்க இருதயச் செயலிழப்பைக் கீழ்க்கண்ட உதாரணத்தின் மூலம் அறியலாம்.

காலில் உள்ள இரத்தக் குழலில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த அடைப்பானது இரத்த ஓட்டத்தின் வழியாக நுரையீரல் தமனியைச் சென்று அடைகிறது.

இவ்வாறு அடையும் பொழுது உடலின் பிற உறுப்புகளில் இருந்து பெறப்படுகின்ற அசுத்த இரத்தமானது இதயத்தின் வலதுக் கீழ் அறையான வென்ட்ரிக்களை வந்து அடைகிறது.

இவ்வாறு வலது வென்ட்ரிக்களை அடைந்த இரத்தமானது இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையின் மூலம் நுரையீரலுக்குச் செல்ல இயலாத நிலையால் காலில் இருந்து வந்த இரத்தமானது அங்கேயே தேக்கத் தொடங்குகிறது.

இதனால் கால் வீக்கம் ஏற்படுகிறது. கல்லீரலில் இருந்து பெறப்பட்ட இரத்தமானது அங்கேயே தேக்கத் தொடங்க வயிறு உப்பத் தொடங்குகிறது. இதனால் பசியின்மை, மாந்த நிலை ஏற்படுகிறது.

மேலும் கழுத்துச் சிரை அழுத்தம் (JVP -Jugular Venous Pressure) ஏற்பட்டுக் கழுத்துப் பகுதியில் உள்ள நரம்புகள் துடிக்க ஆரம்பிக்கின்றன. இதைத் தவிர இதயமானது முறையாகச் செயல்படாததால் மூளைக்குத் தேவையான இரத்த அளவுக் குறைந்து மயக்கம் மற்றும் சோர்வு ஏற்படுகிறது.

நுரையீரலுக்குத் தேவையான இரத்தம் கிடைக்காததால் சிறுநீரகச் செயல்பாடானது குறைகிறது. இதனால் வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு குறைகிறது;

இரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாகிறது. இதே போன்று தசைகளுக்கும் தேவையான இரத்தம் கிடைக்காததால் சிறிய செயலைச் செய்தாலும் விவரிக்க முடியாத அளவு அதீதச் சோர்வு ஏற்படுகிறது. இவற்றுக்குக் காரணம் இரத்தத்தின் மூலம் கிடைக்கக்கூடிய தாதுக்கள், வைட்டமின்கள், ஆக்சிஜன் போன்றவை போதுமான அளவுக் கிடைக்காமையே.

மேலும் இதயத்தில் சேகரிக்கப்பட்ட இரத்தமானது சுருங்கி விரியும் தன்மையின் மூலம் இதயத்தின் வலது மேல் அறையை அடைய இயலாமல் இதயத்தின் வலதுக் கீழ் அறையிலேயே தங்குகிறது.

இதனால் அந்தப் பகுதியில் இரத்தம் தேங்கி இதயத்தின் வலப்புற அடிப்பகுதியானது பருமனடையத் தொடங்குகின்றது. இவ்வாறாக இதயச் செயலிழப்பானது நிகழத் தொடங்குகிறது.

பரிசோதனை முறைகள்

மேற்கண்ட இருதயச் செயலிழப்பைக் கால் வீக்கம், வயிறு உப்புதல், கல்லீரல் வீக்கம், கழுத்தில் நரம்புகள் துடித்தல் போன்ற அடிப்படை அறிகுறிகளை வைத்துக் கண்டறிய முடியும்.

தொழில் நுட்பக் கருவிப் பரிசோதனையில் முதன்மையானது இருதய மென் வரைபடப் (ECG -Electrocardiogram) பரிசோதனை. இதன் மூலம் இதயத்தின் அறைகளின் அளவு, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்ற பல முக்கியமான தகவல்கள் அறியப்படுகின்றன. மேலும் பல நோய்களுக்கான காரணங்களும் கண்டறியப்படுகின்றன.

அடுத்ததாக ஊடு கதிர் (X-ray) பரிசோதனையின் மூலம் நுரையீரலில் உள்ள நீரின் அளவு, இதயத்தின் அளவு கண்டறியப்படுகின்றன. \மின் ஒலி இதய வரைவு (Echocardiogram) பரிசோதனையின் மூலம் இதயத்தின் அனைத்து அறைகள், வால்வுகளின் அளவுகள், அதன் செயல்பாடுகள் என்று அனைத்துச் செயல்பாடுகளும், குறைபாடுகளும் கண்டறியப்படுகின்றன.

தற்போது நவீன விஞ்ஞான வளர்ச்சியினால் 3D மற்றும் 4D மின் ஒலி இதய வரைவு (3D & 4D Echocardiogram) பரிசோதனைகளும் உள்ளன. இதன் மூலம் மிகத் துல்லியமாக இதயத்தின் செயல்பாடுகள், குறைபாடுகள் கண்டறியப்படுகின்றன.

READ ALSO: புற்றுநோயை விட அதிகமாக உயிரைக் கொல்லும் நோய்

எனவே மருத்துவர் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தும் போது அதனைப் புறக்கணிக்காமல், பரிசோதனைகளை மேற்கொண்டு, குறைபாடுகளைக் கண்டறிந்து, முறையாகச் சிகிச்சைப் பெற்று, இதயத்தைப் பாதுகாப்போம்

நமது உடல் உறுப்புகளின் செயல்பாடும் சங்கிலித் தொடர்புப் போன்றதே! ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் அதனால் மற்றொன்றும் பாதிக்கப்படுகிறது; ஒன்று ஆரோக்கியம் அடையும் போது அதனால் மற்றொன்றும் ஆரோக்கியம் அடைகிறது!

எனவே உடலில் எந்த உறுப்பில் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கக் கூடிய அளவில் மாறுபட்ட அறிகுறிகளைக் கண்டாலும், உடனே மருத்துவரை அணுகி, அதற்கான சரியான பரிசோதனையை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட உறுப்பை மட்டும் அல்லாது அதனோடு தொடர்புடைய உடலின் மற்ற உறுப்புகளையும் பாதுகாப்போம்.

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read