‘அவன் இன்றி அணுவும் அசையாது’ என்பார்கள். “இதயம் இன்றி எதுவும் இயங்காது” என்றால் இதுவும் ஏற்கத் தக்கதுத் தானே! எனில் அவனுக்கு நிகரான இதயத்தின் இயக்கம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இந்தக் கூற்றிலேயே நமக்குப் புரிகிறது அல்லவா?
அத்தகைய இதயத்தைப் பாதிக்கும் “இதயத் தமனி அடைப்பு நோய்” குறித்து இருதய நோய் நிபுணரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் முதன்மை மருத்துவருமான திரு. சு. தில்லை வள்ளல் அவர்கள் கூறும் அனைத்துத் தகவல்களையும் இக்கட்டுரையின் மூலம் அறிவோம்.
‘இதயத் தமனி அடைப்பு நோய்’ குறித்து அறியும் முன்னர் இந்தியாவில் தான் இந்நோயாளிகள் அதிமாக உள்ளனர் என்பதையும், மாரடைப்பு அதிகம் வரும் மக்களைக் கொண்ட நாடும் நம் நாடுதான் என்பதையும் அறிந்து கொள்வோம்!
இதயத் தமனி அடைப்பு நோய்
மாரடைப்பு நோய்க்குக் காரணமான இந்த இதயத் தமனி அடைப்பு நோய் என்பது ‘ஃபோம் செல்கள்’ (Foam cells) என்று கூறப்படுகின்றச் செல்லினால் அடைப்பானது சிறுவயதிலேயே தொடங்கிவிடுகிறது! பின்னர் வளர, வளர இந்தச் செல்கள் ஒன்றின் மீது ஒன்று படியத் தொடங்கி அடைப்பு அதிகமாகிறது.
இவ்வாறாக உருவான அடைப்பானது 70 சதவீதத்தை அடையும் போது வெகு தூரம் நடந்தால் வலியை ஏற்படுத்துகிறது; 80 சதவீதம் அடைப்பானது சிறிதுத் தூரம் நடந்தாலேயே வலியை ஏற்படுத்துகிறது; 90 சதவீதம் அடைப்பானது நடந்தாலேயே வலியை ஏற்படுத்துகிறது.
READ ALSO: எது சரியான மாதவிடாய்? ஆண்களும் தெரிஞ்சுக்கலாம்!
மாரடைப்பு
மேற்கூறியவாறு ஏற்பட்ட அடைப்பானது நாம் கடினமாக ஒரு வேலையைச் செய்யும் போது அதாவது எடை அதிகம் கொண்ட பொருளை தூக்கும்போதோ, இல்லையேல் தள்ளும்போதோ, மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போதோ, இல்லையேல் உடல் ரீதியான அழுத்தத்திற்கு ஆளாகும் போதோ தீடீர் என்று குழலில் அடைப்பை ஏற்படுத்தும்.
இதனால் இதயத்தின் இரத்தக் குழல்களில் உள்ள கொழுப்புப் படிவம் சிதைவடைந்து அதில் இருக்கக்கூடிய கொழும்பு பொருட்கள் வெளியே வரும். இவ்வாறு வெளிவந்த கொழுப்பு பொருட்களின் மீது இரத்த கட்டுகளும் ஒன்றின் மீது ஒன்றாகப் படியும்.
இதனால் இரத்தக்குழாய் முழுமையாக அடைப்படும். எனவே அடைப்பிற்கு அப்பால் இருக்கக் கூடிய இதயத்தின் தசைகளுக்குப் போதுமான அளவு இரத்தமும், ஆக்சிஜனும், சத்தும் கிடைக்காமல் போகும். ஆதலால் அங்கே இருக்கக்கூடிய தசைகளும், தசை நார்களும், திசுக்களும் இறக்கும். இதுவே மாரடைப்பு ஆகும்!
மாரடைப்பின் வகைகள்
இவ்வாறு மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு வலியுடன் வரும் மாரடைப்பு இடது கையிக்குப் பரவலாம்; முதுகின் பின்புறம் பரவலாம்; தாடையின் அடியில் பல் பலி போன்று பரவலாம்.
இத்தகைய மாரடைப்பில் அதிகமான இருதய வலி, வியர்த்தல், படபடப்பு, அதிகச் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம் (typical heart attack) போன்ற பாதிப்புகள் அறிகுறிகளாக இருக்கும்.
மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு வலியின்றி மாரடைப்பு நிகழ்ந்ததே தெரியாமல் (silent heart attack) வருவதுண்டு. ஏப்பம் விடுவது போன்று இருக்கும். சற்று அசதியாக உணர்வார்கள். சற்று நேர ஓய்வுக்குப் பின்னர் இயல்பாகி விடுவார்கள்! இத்தகைய மாரடைப்பு சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகமாக வரும்!!
மாரடைப்பில் இன்னொரு வகை ‘கீழ் சுவர் மாரடைப்பு’( Inferior wall heart attack) இதன் அறிகுறிகளாக வயிற்று வலி, விக்கல், ஏப்பம், வாந்தி போன்றவை உள்ளன.
READ ALSO: இந்தியாவும், இதய நோயும்!
தற்காப்பு நடவடிக்கைகள்
சிறு வயது முதலேயே ஆரோக்கியமான மற்றும் சமச்சீர் உணவுகள், உடற்பயிற்சி, யோக, சீரான உறக்கம் என்று உடலை சீராகப் பராமரிக்க வேண்டும். மாரடைப்பு உங்கள் பெற்றோரை தாக்கி இருக்குமேயானால் அது மரபு ரீதியாக உங்களையும் தாக்க வாய்ப்பு உள்ளது.
எனவே ஆண்டுக்கு ஒருமுறையாவது முறையான கால இடைவெளியில் முழுஉடல் பரிசோதனைச் செய்துகொள்ள வேண்டும். இதனால் வலியின்றி, அறிகுறிகள் இன்றி வரக்கூடிய மாரடைப்பிலிருந்தும் உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ளலாம்!
“மாரடைப்பு” இது தவிர்க்க முடியாத நோய் அல்ல! மருத்துவரின் ஆலோசனைப்படி, அவரின் அறிவுரையைப் பின்பற்றினால் மாரடைப்பு இல்லாத இந்தியாவை நம்மால் உருவாக்க முடியும்!! காரணம், உலகிற்கே ஆரோக்கியத்தைக் கற்பித்த மூதாதையர்களைக் கொண்ட சமூகம் நம் சமூகம்!
நம் மரபியையே இல்லாத ஒரு நோயானது எப்படி நம் மரபு நோயானது? சிந்தித்துச் செயல்படுவோம்! நோயில்லா சமுதாயத்தை உருவாக்குவோம்!! மரபு நோய்களை அழிப்போம்!!!