வயதான பெண்களுக்கான பரிசோதனைகள்
பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் செய்யப்படும் மாஸ்டர் ஹெல்த் செக்அப் (Master Health Checkup) பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தக் கட்டுரையில் பெண்களுக்கான குறிப்பிட்ட சோதனைகள், அவை ஏன் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன என்பதையும் மற்றும் எந்த அளவுக்கு அடிக்கடி செய்ய முடியும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். இதன் முக்கிய நோக்கம்… பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே தடுப்பதே. பிரச்னைகளை அடையாளம் கண்டு சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பதன் மூலம் நீண்டகாலச் சிக்கல்களைத் தவிர்க்கலாம்; சிறந்த வாழ்க்கைத் தரத்துக்கு உதவலாம்.
சீனியர் பெண்களுக்கான பரிசோதனைகள்
மகளிர் நல மருத்துவரால் மருத்துவப் பரிசோதனை (Clinical Examination)
பாப் ஸ்மியர்
மேமோகிராம்
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்– – முழு வயிறு மற்றும் இடுப்புப் பகுதி
டெக்ஸா ஸ்கேன்
மருத்துவப் பரிசோதனை
அனைத்துப் பெண்களும் ஒரு மகளிர் மருத்துவ நிபுணரால் அவர்களின் அந்தரங்க பாகங்களில் ஏதேனும் தடிப்புகள், தொற்று, வறட்சி போன்ற (Atropic changes) பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்கத் தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். பின்னர் பாப் ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
பாப் ஸ்மியர்
இது அடிப்படையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் சோதனை. இது திருமண வயதிலிருந்து 65 வயது வரை ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. இது கருப்பையின் வாயில் உள்ள அசாதாரண செல்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது. இந்தப் பரிசோதனை மூலம் புற்றுநோய் ஆரம்பிக்கும் காலத்திற்கு முன்பே கண்டறிய முடியும். இந்தப் புற்றுநோய் முக்கியமாக ஹூமன் பாப்பிலோமா வைரஸ் எனப்படும் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது.
மேமோகிராம்
இது மார்பகப் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் சோதனையாகும். இது 40 வயதுக்குப் பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும். குடும்பத்தில் யாருக்காவது இந்தப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு நெருக்கமான கண்காணிப்புக்காக ஆண்டுதோறும் செய்யப்படலாம். இது இரண்டு சோதனைகளை உள்ளடக்கியது.
டிஜிட்டல் எக்ஸ்-ரே மேமோகிராபி மற்றும் சோனோ மேமோகிராம் (ஸ்கேன்): சில குறிப்புகள் எக்ஸ்-ரேவில் அடையாளம் காணப்படுகின்றன மற்றும் சில குறிப்புகள் ஸ்கேன் மூலம் அடையாளம் காணப்படுகின்றன. ஸ்கேன் கருவி மூலம் சில கட்டிகளை பயாப்ஸி செய்ய உதவுகிறது.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்
இது ஒவ்வோர் ஆண்டும் வயிறு மற்றும் பிறப்புறுப்பில் செய்யப்படும் ஸ்கேன் ஆகும். பொதுவாக மாதவிடாய் நின்ற பிறகு, கர்ப்பப்பை மற்றும் கருப்பைகள் சுருங்கி எண்டோமெட்ரியம். அதாவது கருப்பையின் புறணி மெல்லியதாகிறது (<4mm). இந்தப் பரிசோதனை அதைக் கண்டறிய உதவும்.
டெக்ஸா ஸ்கேன்
இது எலும்புகள் வலிமை இழத்தலைக் கண்டறிய செய்யப்படும் சிறப்பு ஸ்கேன் ஆகும். வயதானவர்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்படக்கூடிய மூன்று சிறப்புப் பகுதிகள் உடலில் உள்ளன. அதாவது இடுப்பு மூட்டு, மணிக்கட்டு மூட்டு
(Colles Fracture) மற்றும் இடுப்பு முதுகெலும்புப் பகுதி. எலும்பு முறிவு அபாயத்தைக் கணிக்கும் ‘டி’ ஸ்கோர் மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. முன்கூட்டியே மாதவிடாய் நின்ற பெண்கள், மெல்லிய பலவீனமான பெண்கள், ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள், நீண்ட கால ஸ்டீராய்டு மாத்திரைகள் உபயோகிப்பவர்கள் ஆஸ்டியோபோரோசிஸீக்கு ஆளாகின்றனர். ஒரு சிறிய காயம் அல்லது கீழே விழுதல் கூட வயதான பெண்களில் எலும்பு முறிவுகளுக்கு வழிவகுக்கும்.
இவை தவிர சி.பி.சி., தைராய்டு பரிசோதனை, ரத்தச் சர்க்கரை நோய் பரிசோதனைகள், கல்லீரல் பரிசோதனைகள், சிறுநீரகப் பரிசோதனைகள், ஈ.சி.ஜி., எக்கோ போன்ற சிறப்புப் பரிசோதனைகள் தேவைப்படும்.
‘வருமுன் காக்க’ என்ற பழமொழிக்கேற்ப ஆரம்பக் காலத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சையளித்தால், அது அந்நோயைத் தடுத்து அதிலிருந்து மீள உதவி புரிகிறது.