Yoga for Seniors
உடல் உள்ளம் யோகா
உடலையும் உள்ளத்தையும் ஒரு சமநிலைக்குக் கொண்டுவரும் வாழ்வியல் பயிற்சியே யோகா.
யோகா எந்த வயதினருக்கானது?
யோகாவுக்கு வயது வரம்பு கிடையாது. இது அனைவருக்குமான ஓர் ஆரோக்கிய வழிமுறை. 5 வயது குழந்தைகள் முதல் 80 வயது முதியவர்கள் வரைஅனைவரும் செய்யக்கூடிய, செய்ய வேண்டிய பயிற்சி இது.
இந்தியாவில் முதியோர் மக்கள்தொகை சதவிகிதம் கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது. இது 2011-ம் ஆண்டில் 8.6% ஆக இருந்தது. 2021-ம் ஆண்டில் இது 10% ஆக உயர்ந்திருக்கிறது. இது 2031-ம் ஆண்டில் 13.2 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதுமையை நோக்கிய பயணத்தை மிக அழகாகவும் எளிமையாகவும் கடக்கும் ஒரு இனிமையான பாதையே யோகா.
முதுமையில் யோகாவின் அற்புதங்கள்
யோகா என்பது இளையவர்களுக்கானது என்பது பொதுவாக உள்ள தவறான கருத்து. உண்மையில், யோகாசன பயிற்சிகள் நாம் எவ்வளவு வயது முதிர்ந்தாலும் செய்யக்கூடிய உடற்பயிற்சியே. மனம் மற்றும் உடலை உறுதி செய்து உடல் உறுப்புகளுக்கும், ஹார்மோன் சுரப்பிகளுக்கும் புத்துணர்வு கொடுக்கும் ஒரு எளிய கலை யோகா.
யோகா தரும் புத்துணர்வான எதிர்ப்புசக்தி
வயது முதிர்வு அடையும்போது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே குறையத் தொடங்கும். இதனால், நமது உடலில் பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. யோகாசனப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் மூலமாக உடல் பலமுடன் வாழ வழி கிடைக்கிறது.
முதுமையில் யோகாவின் பலன்கள்
எலும்பினை உறுதி செய்தல்
முதுமைப் பயணத்தில் யோகா எலும்புத் தேய்மானத்தைத் தடுத்து நிறுத்துகிறது. இதனால் ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) என்கிற நிலை வராமல் தவிர்க்கப்படுகிறது. ஆஸ்டியோபொரோசிஸ் என்பது, எலும்பு செல் உற்பத்தியானது, வயது முதிர்வால் ஏற்படும் எலும்புத் தேய்மானத்துடன் சரி விகிதத்தில் இல்லாமல் போவதுதான். முறையான யோகா பயிற்சியினால் இந்த எலும்புத் தேய்மானத்தைத் தவிர்க்க முடியும்.
மன அழுத்தத்தில் இருந்து விடுதலை!
மிக முக்கியமாக தோள், பின்னங்கழுத்து, முதுகுப் பகுதியிலுள்ள தசைகளில் உள்ள இறுக்கம் தளர்வு அடைய யோகா உதவுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் சார்ந்த நோய்கள் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளையும் சரி செய்ய முடியும். இதன் விளைவாக இதய நலம், ரத்த அழுத்தம் மற்றும் சுவாச நலம் – இவை மூன்றுமே சரியாகப் போற்றப்படுகிறது.
தூக்கமின்மைக்கான தீர்வு
உடலையும் மனதையும் அமைதி அடைய செய்வதனால், நீண்ட மற்றும் ஆழ்ந்த உறக்கத்துக்கும் யோகா வழி செய்கிறது.
உடல் சமநிலை மற்றும் இயக்கம்
யோகாசனப் பயிற்சிகள் பொதுவாகவே நிதானமாகவும் மெதுவாகவும் செய்யக்கூடியவை. இவ்வாறு செய்யும்போது உடலை எளிதாக சமநிலை செய்ய முடியும். இதன் மூலமாக தவறுதலாக கீழே விழுவது மற்றும் தடுமாற்றமும் தவிர்க்கப்படுகிறது. இது ஒரு புதிய தன்னம்பிக்கையை தருகிறது.
மனநல மேம்பாடு
யோகாசனம், தியானம், மூச்சுப் பயிற்சி ஆகிய மூன்றும் ஒன்று சேரும்போது, அது நமது மூளையை தெளிவாகவும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட வைக்கிறது. நண்பர்களுடன் சேர்ந்து செய்யும்போது ஒரு நல்ல வாழ்க்கைச் சூழ்நிலையை உருவாக்குகிறது.
வலியில் இருந்து விடுதலை!
முதுமையின் காரணமாக வரும் உடல் வலி மற்றும் உடல் பிரச்சனைகளால் வரும் வலியையும் சரி செய்யும் தன்மை யோகாசன பயிற்சிகளுக்கு உண்டு. நாட்பட்ட கை, கால் மற்றும் மூட்டு வலியையும் முறையான பயிற்சியால் சரி செய்ய முடியும்.
முதியவர்களுக்கு ஏற்ற யோகா பயிற்சிகள்
● நின்ற நிலையில் செய்யும் ஆசனங்கள்.
● அமர்ந்த நிலையில் செய்யும் ஆசனங்கள்
● படுத்த நிலையில் செய்யும் ஆசனங்கள்.
யோகா ஆசிரியர் இல்லாமல் பயிற்சி எடுக்கலாமா?
யோகா என்பது ஒட்டுமொத்த உடல் மற்றும் மனம் சார்ந்த பயிற்சி. எனவே இதனை சரியான முறையில் செய்யும்போது மட்டுமே அதற்கான பலன்கள் சரியான விதத்தில் கிடைக்கும். குறிப்பாக முதியவர்கள், அவர்களின் உடல் தேவைகளுக்கு ஏற்ப யோகா ஆசனங்களை செய்வது மிகவும் முக்கியம்.
யோகா கற்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்…
● சுறுசுறுப்பற்ற வாழ்கை முறை (sedentary lifestyle)
● இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் (Cardiovascular problem)
● எலும்புப்புரை பிரச்னை உள்ளவர்கள் (Osteoporosis)
மேலே உள்ள ஒவ்வொரு வாழ்க்கைமுறைக்கும் ஏற்ற தனித்துவமான பயிற்சிகள் தேவைப்படுகின்றன. எனவேதான் முதியவர்களின் யோகாவில் பயிற்றுவிப்பாளர் (trainer) மிகவும் முக்கியம்.
இனியதொரு வாழ்க்கைப் பயணத்தை இன்றே தொடங்குவோம் முறையான யோகாவுடன்!