வயதான காலத்தில் நினைவுக்கு வருவது, “வாரிசுகளுக்கு தன் சொத்துகளை உயில் எழுதி வைப்பது நன்று” என்றுதான். ஆனால், இதைவிட மிக முக்கியமான ‘வாழும் உயில்’ என்று ஒன்று இருப்பது பலருக்குத் தெரியாது. நாம் இறக்கும்போது எவ்வாறு இறக்க வேண்டும்? என்ற நமது ஆசையை முன்கூட்டியே உறவினர்களுக்கு தெரிவிப்பது தான் இந்த ‘வாழும் உயிலின்’ சிறப்பு.
பணக்கார நோயாளி.
தீவிர சிகிச்சைப் பிரிவில் தேவையான பிராணவாயு, உணவு, நீர் என்று அனைத்தும் செலுத்தப்பட்டு இறுதியாக கிட்டத்தட்ட ஒரு அனாதையைப் போல உறவினர் இருந்தும், உடன் இருக்க முடியாத சூழலில் தனியாக மருத்துவமனையில் இறக்கிறார் ஒரு பணக்கார நோயாளி.
சுமார் 30-40 வருடங்களுக்கு முன்பு பெரியவர்களுக்கு உடம்பு முடியவில்லை என்றால், மருத்துவர் கொடுக்கும் மருந்தினை வீட்டில் இருந்தபடியே எடுத்துக் கொள்வார். இறுதிக் காலம் நெருங்கிவிட்டது என்று அறிந்தவுடன், உற்றார் உறவினர்களுக்கு செய்தி அனுப்பப்படும். அவர்கள் படுக்கை அருகில் அமர்ந்து முடிந்தவரை பழைய நினைவுகளை முதியவரிடம் பகிர்ந்து கொள்வார்கள். முதியவருக்கு அது ஒரு மலரும் நினைவாக இருக்கும்.
ஏழை நோயாளி.
மகள், மகன், பேரன், பேத்தி, மற்ற உற்றார் உறவினர்கள் அருகில் இருந்து ஆறுதல் சொல்வார்கள். சில குடும்பங்களில் பக்திப் பாடல்கள் பாடுவார்கள். இந்தச் சூழலில் முதியவரின் வலியும், மற்ற வேதனைகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். இறுதியில் தன் வீட்டிலேயே உற்றார் உறவினர்கள் புடைசூழ நிறைவாக நிம்மதியான நினைவில் உயிர் பிரியும் – ஓர் ஏழை நோயாளி.
ஐம்பது வயதிற்கு மேற்பட்ட, இறக்கும் மக்களில் சிலரே தீடீர் மரணத்தைச் சந்திக்கிறார்கள். மற்றவர்களில் பெரும்பாலோர் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு, அவர்களுடைய இதயம், சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம் போன்ற உடல் உறுப்புகள் சரியாக வேலை செய்யாததால், நீண்ட தீவிர சிகிச்சைக்குப் பின்னரும், பலனில்லாமல் மரணமடைகிறார்கள். இவர்களுக்கு இறப்பதற்கு சில மாதங்கள் முன்னரே, தங்களது இறுதிக் காலம் நெருங்கிவிட்டது என்பதும், கூடிய விரைவில் இறக்கப் போகிறோம் என்பதும் தெரிந்துவிடும்.
வாழும் உயில்
இறுதிக் காலத்தில் நோய் உள்ளவர்கள், அதுவும் எல்லா சிகிச்சைகளும் பயன் அளிக்காத இறுதிக் கட்டத்திலும், நமது இறுதி நாட்கள் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதை முடிவு செய்வதுதான் இந்த ‘வாழும் உயில்’. நாமும் நமது இறுதிக் காலத்தில் நிம்மதியான, மரணத்தைச் சந்திக்கும்படியானதொரு சூழலை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது தான் ‘வாழும் உயில்’.
நம்முடைய உடல் உபாதைகளுக்கு, வேதனைகளுக்கு மருந்தை வீட்டிலேயோ, மருத்துவமனையிலோ எடுத்துக் கொள்ளலாம். உயிர் நீட்டிப்புக்குத் தேவையற்ற மருத்துவத்தைத் தவிர்க்கலாம்.
நாம் மட்டும் தனியாக ‘வாழும் உயில்’ என்ற இந்த ஒப்பந்தத்தின் முடிவை எடுக்க முடியாது. நம் துணைவியார், உடன் பிறந்தவர்கள், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பிறகே இந்த சாசனத்தை உருவாக்க முடியும். இதற்கு நம் கருத்துகளை ஒரு மனதோடு ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும்.
மேலே கூறிய அனைத்து நபர்களும் ஒப்புக் கொண்ட பிறகு, இந்த ‘வாழும் உயிலை” தயார் செய்ய வேண்டும். அடுத்ததாக, இந்த சாசனத்தை நடைமுறைப்படுத்த, மூன்று சுகாதார பாதுகாப்பு வழக்கறிஞர்கள் (Health Care Power of Attorney) நியமிக்கப்பட வேண்டும். அவர்களுடைய பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் ஏதேனும் அரசு அடையாள அட்டை எண்ணையும் எழுத வேண்டும்.
இந்த சாசனத்தில், நமது பெயர், வயது, பான் முகவரி மற்றும் ஆதார் அல்லது ஏதேனும் அரசு அடையாள அட்டையின் எண்ணையும் எழுத வேண்டும். தேதி இட்ட கையொப்பம் போடவேண்டும். இதற்குப்பின், இரண்டு சாட்சிகள், அவர்கள் பெயர் முகவரியுடன் கையொப்பம் இடவேண்டும். இப்பொழுது ‘வாழும் உயில்’ சாசனம் முழுமை பெற்றுவிட்டது.
இந்த உயிலில் எந்த எந்த மருத்துவ முறைகள் நமக்குத் தேவையில்லை என்று குறிப்பிடலாம்.
உதாரணத்திற்கு
தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பிராண வாயு செலுத்துதல்
மூக்கு வழியாக உணவு செலுத்துதல்
இதய, நுரையீரல் புத்துயிர் அளித்தல் அதே நேரம், ஒருவருடைய மூச்சுத் திணறல், வலி, மயக்கம் போன்றவற்றுக்கு சிரமமின்றி இறக்கத் தக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். உயிர் நீட்டிப்பிற்கு என்ற மருத்துவ முறையை மட்டும் நாம் நிராகரிக்கலாம்.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 550 லட்சம் மக்கள் இந்த தீவிர சிகிச்சையின் காரணமாக வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்படுகிறார்கள். மேலும் இது அடுத்த தலைமுறை மக்களுக்கு ஒரு பெரிய கடன் சுமையை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்க்கவே இந்த ‘வாழும் உயில்’ என்ற ஒப்பந்த ஏற்பாடு.
இந்த முறை, மேலை நாடுகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. நம் நாட்டில் கேரள மாநிலத்தில் சில பகுதிகளில் இது செயல்பாட்டில் உள்ளன.
நாமும் இதைப் பற்றி தெரிந்து கொண்டு, செயல்படுத்தலாமே!
– டாக்டர் வே. கனகசபை
பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர்