Health Insurance | Why When Where |
கடந்த மூன்றாண்டுக் காலமாகத்தான் நம்மிடையே ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றிய மருத்துவக் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதற்கு நீங்கள் கோவிட்டுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்! ஆம்… கோவிட் போன்ற தொற்றுநோய் பாதிப்பு, கணிக்க முடியாத விபத்துகள், எதிர்பாராத மருத்துவத் தேவைகளின்போது மருத்துவமனையில் நமக்குக் கைகொடுப்பது காப்பீடு மட்டுமே!

கோவிட்டின்போது அதிக நோய்த்தொற்று விகிதம் ஏற்பட்டது. அதோடு, வெற்றிகரமான தடுப்பூசி விநியோகத்துக்கும் தாமதமானது. அப்போதுதான் மக்கள் ஒரு நல்ல மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கினர். அதோடு, ஆண்டுதோறும் மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருவதால், நல்ல மருத்துவ வசதி பெறுவதற்கான செலவுகளைச் சமாளிப்பதும் மிகக் கடினம். அதனால், நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் ஒரு மருத்துவக் காப்பீட்டைப் பெறுவதன் மூலம் கூடுதல் பாதுகாப்பைப் பெற முடியும். நம் அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்வதற்கான செலவுகள் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. அது மட்டுமல்ல… பணவீக்கம் காரணமாக மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் அதிகரிக்கும்போதும் இது போன்ற காப்பீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மருத்துவக் காப்பீடு ஏன் அவசியம்? நாம் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் பெறுவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன? அறிவோம், வாருங்கள்!

- வாழ்க்கை முறை நோய்களை எதிர்த்து போராட இது உதவும்!
குறிப்பாக 45 வயதுக்குட்பட்டவர்களிடையே வாழ்க்கை முறை (லைஃப்ஸ்டைல்) நோய்கள் அதிகரித்து வருகின்றன. முன்பெல்லாம் முதியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட நீரிழிவு, உடல் பருமன், சுவாசப் பிரச்னைகள், இதய நோய் போன்றவையும், இப்போது இளையவர்களையும் அதிகமாகத் தக்குகிறது. உட்கார்ந்த வாழ்க்கை முறை, மன அழுத்தம், மாசு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், கேட்ஜெட்டுகளுக்கு அடிமையாதல் போன்றவை இந்த நோய்களுக்கு வழிவகுக்கும் சில காரணிகள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது இந்த நோய்களை எதிர்த்துப் போராடவும் நிர்வகிக்கவும் உதவும். அதே வேளையில், ஒரு துரதிர்ஷ்டவசமான உடல்நலம் சார்ந்த சம்பவம் நடந்தால் நிதி ரீதியாகச் சமாளிப்பது சவாலாக இருக்கும். வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை உள்ளடக்கிய மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்துகொள்வது, இந்த நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, மருத்துவச் செலவுகளைக் தவிர்க்க உதவுகிறது. - உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க இது உதவும்!
ஒரு சிறந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரும்போது, தனி பாலிசிகளை வாங்குவதற்குப் பதிலாக, உங்கள் முழுக் குடும்பத்தையும் ஒரே பாலிசியின் கீழ் பாதுகாப்பது சிறப்பான தேர்வாக அமையும். நோய்களால் பாதிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் கொண்ட வயதானவர்களையும், குழந்தைகளையும் கருத்தில் கொள்ளுங்கள். ஒருவேளை அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால்… அவர்கள் சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெறுவதை இன்சூரன்ஸ் பாதுகாப்பின் மூலம் உறுதிசெய்ய முடியும். நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாலிசி பற்றி முழுமையாக ஆராயுங்கள். நிபுணர்களிடம் பேசி பக்கச்சார்பற்ற ஆலோசனையைப் பெறுங்கள். - போதிய காப்பீட்டுத் தொகை அவசியம்!
உங்களிடம் ஏற்கனவே மருத்துவக் காப்பீடு இருந்தால் (உதாரணமாக, உங்கள் நிறுவனம் வழங்கிய பாலிசி), அது உங்களை எவற்றிலிருந்தெல்லாம் பாதுகாக்கிறது மற்றும் எவ்வளவு கவரேஜ் வழங்குகிறது என்பதைச் சரிபார்க்கவும். உங்கள் தற்போதைய பாலிசி போதுமான அளவு பாதுகாப்பு வழங்கவில்லை என்றால், தேவைப்படும் நேரங்களில் அது போதுமானதாக இருக்காது. குடும்பத்தினருக்கேற்ற சரியான கவரேஜ் தொகைக்கு காப்பீடு செய்யுங்கள்.
நீங்கள் உடனடியாக அதிக கவரேஜ் திட்டத்தை வாங்க முடியாவிட்டால் கவலைப்பட வேண்டாம். ஆரம்பத்தில் குறைவாகத் தொடங்கி படிப்படியாக கவரேஜை அதிகரிக்க முடியும். - மருத்துவ பணவீக்கத்தை சமாளிக்க இது உதவும்!
ஒரு பக்கம் மருத்துவத் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. மறுபக்கம் நோய்களும் அதிகரித்து வருகின்றன. இதனால், சிகிச்சைக்கான செலவும் அதிகரிக்கிறது. மருத்துவச் செலவு என்பது மருத்துவமனைக்கு உள்ளே மட்டுமே செலவாபவை அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனை, நோயறிதல் சோதனைகள், ஆம்புலன்ஸ் கட்டணம், ஆபரேஷன் தியேட்டர் செலவுகள், மருந்துகள், அறை வாடகை போன்றவற்றுக்கான செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உங்களிடம் போதுமான அளவு காப்பீடு இல்லையென்றால், இவை அனைத்தும் உங்கள் பர்ஸிலோ, வங்கி லாக்கரிலோ, வீட்டிலிருக்கும் தங்கத்திலோ கணிசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். ஒவ்வோர் ஆண்டும் ஒப்பீட்டளவில் மலிவான மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தை செலுத்துவதன் மூலம், எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றி கவலைப்படாமல், தரமான சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம் மருத்துவ பணவீக்கத்தின் சுமையை நீங்கள் வெல்லலாம். - உங்கள் சேமிப்பைப் பாதுகாக்கவும் இது உதவும்!
எதிர்பாராத நோய்கள் மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்துக்கும் வழிவகுக்கும்தான். அதே வேளையில், உடல்நிலையை கையாள்வதில் மற்றொரு பக்கமும் உள்ளது. பொருத்தமான மருத்துவக் காப்பீட்டு பாலிசியை வாங்குவதன் மூலம், உங்கள் சேமிப்பைக் கரைக்காமலே மருத்துவச் செலவை சிறப்பாக நிர்வகிக்கலாம்.
சில காப்பீட்டு வழங்குநர்கள் பணமில்லா சிகிச்சையை வழங்குகிறார்கள். எனவே, நீங்கள் திருப்பிச் செலுத்துவதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. வீடு வாங்குவது, குழந்தைகளின் கல்வி மற்றும் ஓய்வூதியம் போன்ற முன்னரே யோசித்த திட்டங்களுக்கு உங்கள் சேமிப்பைப் பயன்படுத்தலாம். அதோடு, மருத்துவக் காப்பீட்டுக்காக நம் செலுத்தும் பணத்துக்கும் வரிச் சலுகைகளைப் பெற முடியும். - பாதுகாப்பாக இருக்க முன்கூட்டியே காப்பீடு செய்யுங்கள்!
வாழ்க்கையின் ஆரம்பகாலத்திலேயே (இருபது வயதுகளிலேயே) மருத்துவக் காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பது பல நன்மைகளை அளிக்கும். நீங்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதால், குறைந்த கட்டணத்தில் நல்ல திட்டங்களைப் பெறலாம். அதே நன்மைகள் உங்களுக்கு வயதாகும்போதும் தொடர்ந்து கிடைக்கும். கூடுதலாக, தொடர்ந்து காப்பீட்டை புதுப்பிக்கும்போது உங்களுக்கு அதிக கவரேஜ் அளவும் அதே கட்டணத்தில் வழங்கப்படும். - காத்திருப்பு காலத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள்!
பெரும்பாலான பாலிசிகளுக்கு காத்திருப்பு காலம் இருக்கும். அது ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு மட்டும் குறிப்பிட்ட காலம் வரை கவரேஜை வழங்காது. இளம் வயதிலேயே பாலிசி எடுத்திருந்தால் ஆரோக்கியமாக இருக்கும்போதே ‘நோ கவரேஜ்’ காலம் முடிவடைந்துவிடும். இதனால், ஒருவேளை வாழ்க்கையின் பிற்பகுதியில் நோய்வாய்ப்பட்டால் பயனுள்ள முழுமையான கவரேஜின் நன்மையை நாம் பெறலாம். -

மருத்துவக் காப்பீடே இன்றைய இன்றியமையாத தேவை!
இந்த பரபர வாழ்க்கைமுறையில் நம்மையும் நம் அன்புக்குரியவர்களையும் பொருளாதார ரீதியாக ஊனப்படுத்தக்கூடிய எந்தவொரு நிகழ்விலிருந்தும் பாதுகாப்பது அவசியம். மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் நம் நிதிப் பாதுகாப்பை உறுதிசெய்யும் விரிவான பாதுகாப்பு மற்றும் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. பகல்நேர பராமரிப்பு நடைமுறைகள், மருத்துவமனைகளின் பரந்த நெட்வொர்க்கில் சிகிச்சை, மருத்துவமனைக்குச் செல்லும் முன் மற்றும் பிந்தைய செலவுகள், மனநோய் சிகிச்சையை காப்பீடு செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய திட்டங்களும் இப்போது உள்ளன. இதனால், உங்கள் எதிர்காலச் சேமிப்பில் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தும் மருத்துவ நிலைமைகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. எனவே, உரிய ஆய்வு செய்து, உங்கள் தேவைகளுக்கேற்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யுங்கள்!