அன்புள்ள உங்களுக்கு…
வணக்கம்.
புதிய ஆண்டில் இந்த இதழ் உங்களின் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு புத்தாண்டும் இதுவரை கிடைக்காத புது அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் நமக்காகக் கொண்டுவருகிறது. புத்தாண்டை வரவேற்போம்.
புத்தாண்டு பிறக்கும்போது ஏதாவது உறுதிமொழி எடுத்துக்கொள்வது பலருக்கு வழக்கம். ஜனவரி முதல் தேதி இரவிலேயே பலர் அதை மறந்துவிடுவார்கள். அந்த மாத இறுதிவரை அதைப் பின்பற்றுவோர் மிகச் சிலரே! மன உறுதி உள்ள சிலருக்கே, அது பிப்ரவரி மாதத்தில் ஞாபகம் இருக்கும்.
முதுமை பலருக்கு மன வைராக்கியத்தையும் தந்திருக்கிறது. அந்த மன உறுதியுடன் இந்தப் புத்தாண்டில் நீங்கள் ஏன் புதுமையாக ஓர் உறுதிமொழி எடுக்கக் கூடாது?
முதுமை என்பது நம்மை முழுமையாக்கும் முக்கியமான பருவம். முதிர்ந்த கனியில் இருக்கும் விதையே மீண்டும் விருட்சமாகும் வல்லமை பெற்றது; முதிர்ந்தோரின் அனுபவங்களே அடுத்த தலைமுறைக்கான பாதை! ஆனால், காட்டில் பொழியும் நிலவொளி போலவே பலருக்கும் பயனற்றுப் போகிறது இந்த அனுபவம்.
முதியோர்களுக்கு தங்கள் கடந்த காலம்குறித்து பெருமிதம் இருக்கும். அதைவிட அதிகமாக நிகழ்காலம் பற்றிய வருத்தங்களும், எதிர்காலம்பற்றிய கவலைகளும் இருக்கும். நிறைவேறாத ஆசைகளும் கனவுகளும் அவர்களை அமைதியிழக்கச் செய்கின்றன. இந்த உறுதிமொழி இவற்றையெல்லாம் தவிர்க்கவோ, குறைக்கவோ உதவும்.
மகிழ்ச்சியான நினைவுகள் மட்டும் என் ஞாபகத்தில் இருந்தால் போதும். துயரமான தருணங்களை என் ஞாபகமறதி நோய் எடுத்துக் கொள்ளட்டும்.
உறுதிமொழி
- நான் முதுமையை எட்டியதை உணர்கிறேன். இந்த வயதில், எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும் குணம் எனக்கு வந்துவிடக் கூடாது. குறிப்பாக, எல்லா விஷயங்களைப் பற்றியும், எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏதாவது கருத்து சொல்லியே ஆக வேண்டும் என்ற உணர்வு எனக்கு எழக் கூடாது.
- ‘மற்றவர்களின் தவறுகளைத் திருத்துவதுதான் என் வேலை’ என்ற நினைப்பு அறவே எனக்கு வரக் கூடாது. எனது அனுபவமும் அறிவும் மிகவும் மதிப்பான பொக்கிஷங்கள். ‘அறிவுரை’ என்ற பெயரில் எல்லோரிடமும் அதை இறைத்துவிட மாட்டேன்.
- நீண்ட வாக்கியங்களைத் தவிர்த்து, ஒற்றை வார்த்தையில் எதையும் சொல்லும் பக்குவம் எனக்கு வர வேண்டும்.
- என் கஷ்டங்களைப் பற்றி எல்லோரிடமும் புலம்பாமல், அடுத்தவர் கஷ்டங்களையும் காதுகொடுத்துக் கேட்கும் பொறுமை பெற வேண்டும்.
- மகிழ்ச்சியான நினைவுகள் மட்டும் என் ஞாபகத்தில் இருந்தால் போதும். துயரமான தருணங்களை என் ஞாபகமறதி நோய் எடுத்துக் கொள்ளட்டும்.
- நானும் தவறுகள் செய்யக்கூடிய எளிய மனிதப்பிறவிதான் என்ற நினைப்பு எப்போதும் இருக்கட்டும். குடும்பத்தில் வாக்குவாதங்களை அது தவிர்த்துவிடும்.
- எல்லோருக்கும் கருணை காட்டும் மனம் வேண்டும்; கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் எண்ணம் வேண்டும்; அடுத்தவரின் சிறந்த குணங்களைக் கண்டறிந்து பாராட்டும் தாராள மனம் வேண்டும். யாரையும் அதிகாரம் செய்யும் முரட்டு குணம் மட்டும் வேண்டாம்.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று ஒரு முறை இந்த உறுதிமொழியைத் திரும்பப் படித்து மனதில் பதிய வைத்துக்கொள்ளவும். முடிந்த அளவுக்கு வாழ்வில் பின்பற்ற முயற்சிக்க வேண்டும். அனைவருக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்!
அன்புடன்,
டாக்டர் வ.செ.நடராசன்