Homeஉடல் நலம்இளமையின் முதுமைநெஞ்சில் அடிக்கடி படபடப்பு!

நெஞ்சில் அடிக்கடி படபடப்பு!

டாக்டரைக் கேளுங்கள்! | டாக்டர் வ.செ.நடராசன்

மருத்துவம் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் முதியோர் நல மருத்துவர் டாக்டர் வ.செ.நடராசன்.

Man photo created by 8photo – www.freepik.com

முதியோர் நலம் தொடர்பாக நீங்கள் கொடுக்கும் அறிவுரைகளைப் பல்லாண்டுகளாகப் பின்பற்றி வருபவர்களில் நா ம் ஒருவன். ‘முதுமை எனும் பூங்காற்று’க்கு சந்தாவும் கட்டி இருக்கிறேன். சாப்பிட்டதும், நான்கைந்து முறை வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. அதன்பிறகே, வயிறு சகஜநிலை அடைகிறது. இத்துடன் கடந்த ஒரு வருடமாக மேலும் புதிய ஒரு தொல்லை ஏற்பட்டிருக்கிறது. வயிற்றில் காற்று நிறைய ஏற்பட்டு அடிக்கடி சத்தத்துடன் வெளியேறுகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்படாவிட்டாலும், வலி உபத்திரவம் இருக்கிறது. இவற்றுக்குக் காரணம் என்ன? நிவாரணம் என்ன?
– திரு. ஆர்.நாராயணஸ்வாமி, வயது 94, ஸ்ரீரங்கம், திருச்சி.

இந்த வயதிலும் எனது நூல்களையும், மாத இதழையும் நீங்கள் படித்து வருவது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. உங்கள் பிரச்னைகளுக்கு வருவோம்.

பொதுவாக வயிற்றுப்போக்கு ஏற்பட சில காரணங்கள் உண்டு.

  • இரைப்பை மற்றும் குடலில் ஏற்படும் நோய்த்தொற்று. உதாரணம்: வைரஸ், பாக்டீரியா, பூச்சிகள்.
  • குடலில் ஏற்படும் புற்றுநோய், சிறு கட்டிகள்.
  • சில மாத்திரைகள் சாப்பிடுவதாலும் வயிற்றுப்போக்கு ஏற்படும். உதாரணம்: வலி நிவாரணி, கிருமிநாசினி, வயிற்றுப்புண்ணுக்கு கொடுக்கும் மாத்திரைகள், மலமிளக்கி மாத்திரைகள்.
  • வேகமாக இயங்கும் குடல் தொல்லை (Irritable bowel syndrome).
  • அறுவை சிகிச்சைமூலம் வயிறு அல்லது குடல் பகுதி சிறிது அகற்றப்பட்டவர்கள்.
    உங்களின் பேதி மற்றும் வாயுப் பிரச்சனைக்கு காரணம் அனேகமாக வேகமாக இயங்கும் குடல் தொல்லையாக இருக்கலாம். எனி ம் உங்களை நேரில் பரிசோதனை செய்யாமல் மருந்து கொடுப்பது சரியில்லை. உங்கள் ஊரில் உள்ள இரைப்பை மற்றும் குடல் நோய் மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
Brain vector created by freepik – www.freepik.com

என் மனைவிக்கு வயது 63. கடந்த 3 ஆண்டுகளாக அல்ஸீமர் டிமென்ஷியா நோயால் சிரமப்படுகிறார், சிரமப்படுத்துகிறார். நரம்பியல் சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை பெறுகிறார். Rivamer 3 / Donep M ஆகிய மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார். இடையில் Plasma transfusion ஒருமுறை தரப்பட்டது. முன்னேற்றம் இல்லை. ‘மாதம் ஒருமுறை வீதம் 6 மாதங்களுக்குச் செய்தால் பயன் தெரியலாம்’ என இப்போது மருத்துவர் சொல்கிறார். அல்ஸீமர் நோய்க்கான காரணங்களும் மருத்துவத் தீர்வுகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார்கள். சரியா? இதற்கு அக்குபஞ்சர், அக்குபிரஷர் போன்ற மாற்று மருத்துவ முறைகளால் பலன் கிட்டுமா?
– திரு. இரா.பூபதி, பள்ளத்தூர்.

மறதி நோயை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, குணப்படுத்தக்கூடிய மறதி நோய் (Dementia). உதாரணம்: மூளையில் ரத்தக் கட்டு, கட்டி, உயர் ரத்த அழுத்தம், தாழ்நிலை சர்க்கரை அளவு, தைராய்டு தொல்லை, மனச்சோர்வு, மது, மாத்திரைகள். மற்றொன்று, காரணம் இல்லாமல் வரும் மறதி நோய் (Alzheimer Dementia). இந்த நோய்க்கு எந்தக் காரணமும் தெரியாததால், அதற்கு ஏற்ற சிகிச்சையும் கிடையாது. உங்கள் மனைவி எடுத்துக் கொள்ளும் மாத்திரை ஓரளவிற்கு சரியே.Plasma transfusion சிகிச்சையால் பக்கவிளைவுகள் ஏதும் இல்லையென்றால், உங்கள் நரம்பியல் சிறப்பு மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம். மற்றபடி, மாற்று சிகிச்சை முறையைப் பற்றி இயற்கை நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

People photo created by jcomp – www.freepik.com

நான் காஞ்சிபுரத்தில் உள்ள என் அப்பா வீட்டுக்குப் போனபோது, உங்களின் ‘முதுமை எனும் பூங்காற்று’ மாத இதழைப் பார்த்தேன். பொழுது போகவில்லை என்று அதைப் புரட்டினேன். ஆனால், அதைப் படிக்கப் படிக்க ‘இப்படியும் ஒரு பத்திரிகை உள்ளதா’ என்று ஆச்சர்யப்பட்டேன். அப்போதுதான் ‘ஏன் என் பிரச்னைபற்றி உங்களிடம் கேட்கக் கூடாது’ என்று தோன்றியது. கடந்த இரண்டு வருடங்களாக எனது நெஞ்சில் அடிக்கடி படபடப்பு வருகிறது. அப்பொழுது மனதில் ஒருவித பயம் ஏற்படுகிறது. ஆனால் ஒரு சில நிமிடத்திலேயே அது சரியாகிவிடுகிறது. எனக்கு சர்க்கரை நோயோ, உயர் ரத்த அழுத்தமோ இல்லை. இது எதனால் வருகிறது. அதற்கு என்ன சிகிச்சை?
– திருமதி பரமேஸ்வரி, 44 வயது, சென்னை.

எங்களது மாத இதழ் முதியவர்களுக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

படபடப்புக்குக்கான காரணத்தை முதலில் தெரிந்து கொள்வோம்.மனப் பதற்றம், பயம், மன உளைச்சல், அதிகமான காபி அல்லது மது அருந்துவது, காய்ச்சல், கடுமையான உடற்பயிற்சி, தைராய்டு தொல்லை, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தொல்லை, ரத்தத்தில் தாழ்நிலை சர்க்கரை, ரத்த சோகை, குறைவான ரத்த அழுத்தம், ஆஸ்துமாவுக்கு உபயோகிக்கும் இன்ஹேலர்… இப்படி படபடப்புக்கு பல காரணங்கள் உள்ளன.

அனேகமாக நீங்கள் இறுதி மாதவிடாயை நெருங்கும் கட்டத்தில் உள்ளீர்கள் என்று நினைக்கிறேன். இது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் விளைவாகக்கூட இருக்கலாம். இதை எளிதில் குணப்படுத்த முடியும். நீங்கள் மகளிர் நல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் படபடப்பு நீங்கி நலமடைவீர்கள்.

மனப் பதற்றம், பயம், மன உளைச்சல், அதிகமான காபி அல்லது மது அருந்துவது, காய்ச்சல், கடுமையான உடற்பயிற்சி, தைராய்டு தொல்லை, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தொல்லை, ரத்தத்தில் தாழ்நிலை சர்க்கரை, ரத்த சோகை, குறைவான ரத்த அழுத்தம், ஆஸ்துமாவுக்கு உபயோகிக்கும் இன்ஹேலர்… இப்படி படபடப்புக்கு பல காரணங்கள் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read