Homeஉடல் நலம்மலச்சிக்கல் - காரணமும், மருந்தின்றி போக்கும் வழியும்!

மலச்சிக்கல் – காரணமும், மருந்தின்றி போக்கும் வழியும்!

நாம் தினமும் ஒரு முறை இல்லாவிட்டாலும் மலம் கழிக்காவிட்டாலும் மற்றும் அதிக நேரம் 15-20 நிமிடம் மேல் கழிவு அறையில் இருந்தாலும் நமக்கு மலச்சிக்கல் இருப்பதாக எண்ணலாம்.

2-3 நாட்களுக்கு ஒரு முறையாவது மலச்சிக்கலைப் பற்றி புரிந்து கொள்ளும் முன்பு நமது ஜீரண உறுப்புகள் மற்றும் அதன் வேலைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

வாய் தான் முதல் ஜீரண உறுப்பு. நாம் உணவை மெதுவாக நன்றாக மென்று ருசித்து சாப்பிடும் போது, உமிழ்நீர் சுரந்து சர்க்கரைச் சத்து உள்ள உணவுகளின் ஜீரணத்தை துவக்கி வைக்கிறது.

டிவி பார்த்து கொண்டு, நடந்து கொண்டு, விவாதித்துக் கொண்டு, சாப்பிட்டால் நமக்கு ருசி மற்றும் அளவு தெரியாது. அதனால், உணவு சரியாக வாயில் அரைபடாமல் இரைப்பைக்குச் செல்வதால் வயிறு பொறுமலாகி ஏப்பமும் தொந்தரவும் உண்டாகும்.

இரைப்பையில் உணவு வந்ததும் ரசாயன நொதிகளுடன் கலந்து ஜீரணம் ஆகிறது. நாம் சாப்பிடும் முறையாலும் சாப்பாட்டின் குணத்தையும் பொறுத்து 2-3 மணி நேரத்தில் கூழ் போல் அரைக்கப்படும். பின்னர் இது சிறுகுடலை வந்து அடையும்.

சிறுகுடல் சுமார் 22 அடிநீளம் உடையது. நன்கு அரைபட்ட கூழ் இங்கு வந்தபின், சாப்பிட்ட உணவு பித்தநீர், கணையநீர் மற்றும் நுண்கிருமிகளோடு கலந்து ஜீரணம் முழுமை அடைந்து, ஊட்டச் சத்துகள் (புரோட்டின், கொழுப்பு, சர்க்கரை, வைட்டமின், மினரல் சத்துகள்) உறிஞ்சப்பட்டு உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் செல்கிறது.

READ ALSO: உலகமே வியந்தும், மிரண்டும் பார்க்கும் நோய்

நாம் சாப்பிட்ட உணவில் உள்ள மிஞ்சிய நார்ச்சத்துகள் பெருங்குடலுக்கு வருகிறது. பெருங்குடல் சுமார் 5 அடிநீளம் உடையது. இதன் முக்கிய வேலை அளவுக்கு அதிகமான நீரை உறிஞ்சி எடுத்துக்கொண்டு மலத்தை மலத் துவாரம் நோக்கி விட்டுவிட்டு, சுருங்கி விரிந்து மலத்தை மலத் துவாரம் வரை உந்திச் செல்வது.

மலச்சிக்கல் காரணங்கள்

  1. போதிய உடற்பயிற்சியின்மை
  2. குறைவான தண்ணீர் அருந்துவது.
  3. குறைவான கீரைகள், பழங்கள் மற்றும் அதிக மாவுச் சத்து உள்ள ரொட்டி, அசைவ உணவு வகைகள் எடுத்து கொள்வது.
  4. மாத்திரைகள்: இரும்புச் சத்து மாத்திரை, கோடின் கலந்த வயிற்றுவலி நிவாரணி, சிறுநீரை வெளியேற்றப் பயன்படும் மாத்திரை மற்றும் தூக்க மாத்திரை
  5. தைராய்டு குறைவாகச் சுரப்பது
  6. குடலில் ஏற்படும் கட்டி, புற்றுநோய், நீண்ட கால குடல் இறக்கம், மூலம்.
  7. கழிவறை சரியாக இல்லாமையினாலும், இடுப்பு, முழங்கால் வலியினாலும் முதியோர் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதால் மலச்சிக்கல் வர வாய்ப்புண்டு.

சிகிச்சை முறை

  1. மலச்சிக்கலுக்கு ஏதேனும் நோய் காரணமாக இருந்தால் அதற்கு தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  2. ஒரு நாளைக்கு 10-15 டம்ளர் தண்ணீர் அவசியம் (இதயம் மற்றும் சிறுநீரக நோயாளிகள் தவிர).
  3. சிறிதளவாவது உடற்பயிற்சி அவசியம்.
  4. தேவையற்ற மாத்திரைகளை நிறுத்த வேண்டும்.
  5. நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். உதாரணம்… தானியங்கள்: கேழ்வரகு, கோதுமை, தினை, வரகு, கொள்ளு, கைக்குத்தல் அரிசி.

காய்கறிகள்:

கீரை, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், காளிஃப்ளவர், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், பீன்ஸ், அவரைக்காய், பச்சைப்பட்டாணி, சோயா பீன்ஸ், புரக்கோளி, சுரைக்காய், பீர்க்கங்காய், கொத்தவரங்காய், பூசணிக்காய்

பழங்கள்:

அத்திப்பழம், மாம்பழம், கொய்யா, வாழைப்பழம், முலாம்பழம், தர்பூசணி, விளாம்பழம்

இதர வகைகள்:

மிளகு, சீரகம், ஒமம், கொத்தமல்லி, மிளகாய் வற்றல், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, வெந்தயம், கடுக்காய், இளநீர், மோர்

READ ALSO: எது சரியான மாதவிடாய்? ஆண்களும் தெரிஞ்சுக்கலாம்!

மலம் கழிக்க நாம் அணுகும் முறை:

  1. முதியோரின் மலச்சிக்கலுக்கு தவறான அணுகு முறையே முக்கியமான காரணம். பசி உணர்வு ஏற்படும்போது சாப்பிடுகிறோம். சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தபின்புதான் சிறுநீர் கழிக்கிறோம். தூக்க உணர்வு வந்தபின்பு தூங்குகிறோம். ஆனால், காலை எழுந்தவுடன் உறுதியாக மலம் கழித்தாக வேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் உள்ளே செல்கிறார்கள். இதனால் மலச்சிக்கல் போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க வேண்டும்.
  2. கழிப்பறையில் படித்துக் கொண்டும், கைபேசியில் பேசிக்கொண்டும் இருப்பதால் மூளைக்கு மலம் கழிக்கும் உணர்ச்சி உடனே ஏற்படாததனால், தாமதம் ஏற்படுகிறது.
  3. சிலர் தண்ணீர் கொண்டு எனிமா எடுத்து கொள்வர். இந்த முறையில் உடலில் தண்ணீர் மற்றும் சில உப்புச் சத்துகளும் குறைய வாய்ப்பு உள்ளதால், இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
  4. சில முதியவர்கள் மலம் இறுகிவிட்டால் விரல் கொண்டு மலம் எடுப்பார்கள். இதனால் ரத்தக் கசிவு, மலம் வரும் வழியில் துவாரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வழிமுறையையும் தவிர்க்க வேண்டும்.
  5. பலன் இல்லை என்றால் மலமிளக்கி மாத்திரைகளை இடைவிட்டோ, தொடர்ந்தோ மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுக்கலாம் தினமும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி, சற்று அதிக தண்ணீர், நார்ச் சத்து அதிகமுள்ள உணவுகள், பழங்கள் மூலம் மலச்சிக்கலை மருந்தின்றிப் போக்கலாம்.

கட்டுரையாளர்

டாக்டர் ராஜூ

வயிறு, குடல் அறுவை சிகிச்சை நிபுணர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read