‘உலகின் முன்னணி கொலையாளி’ என்று டப்பிங் படத் தலைப்பு போல அழைப்படுபவர் யார் தெரியுமா? அவர் இல்லை; அது… உயர் ரத்த அழுத்தம் என்கிற ரத்தக் கொதிப்பு பிரச்னைதான். ’ஊரெங்கும் ரத்தக் கொதிப்போடு திரிகிறார்கள்’ என்று பொதுப்படையாகச் சொன்னதுகூட இப்போது உண்மையாகிவிட்டது. ஆம்… நால்வரில் ஒருவர் இப்போது உயர் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு தங்களுக்கு இந்தப் பிரச்னை இருப்பதே தெரியாது என்பதுதான் சோகம்!
மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ரத்தக் கொதிப்பு இன்று பொதுவான நோயாகிவிட்டது. உயர் ரத்த அழுத்தத்தின் உலகளாவிய புள்ளிவிவரங்கள், கடந்த 30 ஆண்டுகளில் உயர் ரத்த அழுத்தப் பாதிப்பாளர்கள் இரட்டிப்பாகி இருப்பதைக் காட்டுகின்றன. அதனால் உலகின் முன்னணி கொலையாளிகள் பட்டியலில் மாரடைப்பும் பக்கவாதம் முன்னணியில் இருக்கின்றன.
எனினும், மருத்துவ நிபுணர்களிடம் முறையாகப் பெறப்படும் சிகிச்சையும், ஏற்கனவே உள்ள ரத்த அழுத்த மருந்துகளின் பயன்பாடும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை சுமார் 20 சதவிகிதம் வரை குறைக்கும்.
இந்தியாவிலும் இதே நிலைமைதான்!
இந்தியாவிலும் ஏறக்குறைய 25 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருக்கிறது. இவர்களில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளம் வயதினரும் உள்ளனர் என்பது அதிர்ச்சி செய்தி.
உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதற்கான ஆரம்பமாக ரத்த அழுத்த அதிகரிப்பு உள்ளது. இந்த நோயை கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறாதவர்கள் பல்வேறு சிக்கல்களுக்குள் தள்ளப்படுகிறார்கள்.
ரத்தக் கொதிப்பானது ரத்த நாள அடைப்புப் பிரச்னையில் தொடங்கி மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு வரை பிரமாண்ட நோய்கள் வரை இழுத்துச் செல்கிறது.
என்ன செய்ய வேண்டும்?
- உயர் ரத்த அழுத்தத்தைக் கண்டறிய முறையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். வீட்டிலேயே இந்தச் சோதனையை செய்யும் வகையில் எளிதான பிரஷர் மானிட்டர்கள் இப்போது பரவலாகக் கிடைக்கின்றன.
- பிரச்னை இருந்தால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளும்போது இந்தப் பிரச்னை நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
- உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம். உணவில் அதிக அளவு உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்பளம், ஊறுகாய், சிப்ஸ் போன்ற பாக்கெட் நொறுக்குத்தீனிகள், கருவாடு போன்றவற்றில் அதிக அளவு உப்பு இருப்பதை மறந்துவிடக்கூடாது.
- தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி / உடற்பயிற்சி செய்வது அவசியம்.
- அதிக மன அழுத்தம் இல்லாத வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும்.
- புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.