மனிதராகப் பிறந்த யாரும் தவிர்க்க முடியாதது முதுமை. கொஞ்சம் முன்னெச்சரிக்கையும், சில முன்னேற்பாடுகளும் இருந்தால் முதுமைப் பருவத்தையுமேகூட இனிதான ஒன்றாக மாற்ற முடியும். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அதற்குத் தயாராவதே இல்லை என்பதுதான் யதார்த்தம். அப்படித் தயாராவதற்குச் சரியான, முறையான வழிகாட்டுதல் இல்லை என்பதும் ஒரு காரணம். இப்படிப்பட்ட சூழலில்தான், முதியோர் நல மூத்த மருத்துவர் வி.எஸ்.நடராஜன் எழுதியிருக்கும் ‘முதியோர் நலம் – முதுமையை முழுமையாக அனுபவிக்க’ என்ற நூல் கவனம் பெறுகிறது.
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் என தொற்றா நோய்கள் பரவலாகியிருக்கும் இந்தக் காலத்தில் முதுமை குறித்து நாம் ஒவ்வொருவருமே அக்கறைகொள்ள வேண்டியது அவசியம். முதுமை ஏற்படுவதற்கான காரணங்களில் ஆரம்பித்து, மரணத்தை ஏற்பது எப்படி என்பது வரை 37 அத்தியாயங்களாக விரிகிறது இந்த நூல். முதுமையின் அத்தனை முக்கியமான கூறுகளையும் அங்குலம் அங்குலமாக அலசுகிறார் டாக்டர் நடராஜன்.
முதுமை குறித்து ஏன் ஒவ்வொருவரும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதற்கு டாக்டர் நடராஜன் சொல்லும் காரணம் யாராலும் மறுக்க முடியாதது. ‘முதுமையில் வறுமை கொடியது, தனிமை கொடியது, பல நோய்களின் தாக்கம் அதைவிடக் கொடியது என்பது தெரிந்ததே. ஆனால், இவை எல்லாவற்றையும்விட மிகவும் கொடியது என்ன தெரியுமா? அதுதான் முதுமையில் இயலாமை. அதாவது, வயதான காலத்தில் தனது தேவைகளுக்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பது’ என்று குறிப்பிடுகிறார். சரிதானே?
முதுமையின் முதல் அறிகுறியில் ஆரம்பிக்கிறது நூல். பிறகு அந்த வயதில் ஏற்படும் ஒவ்வொரு நோயையும் குறிப்பிட்டு, அவற்றுக்கான தீர்வுகளையும் தெளிவாக, விரிவாக, அனைவருக்கும் புரியும்படி பட்டியலிடுகிறது. ஆண், பெண் இருபாலருக்கும் முதுமையில் உடலிலும் மனதிலும் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. அவற்றையெல்லாம் சுட்டிக் காட்டி, காரணங்களும், எளிய தீர்வுகளும், மருத்துவ ஆலோசனைகளும் பக்கத்துக்குப் பக்கம் முன்வைக்கப்படுகின்றன. முதுமையில் பெரும்பாலானோர் அனுபவிக்கும் முக்கியமான பிரச்னை, தூக்கமின்மை. அதற்கும் இந்த நூலில் தீர்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. –
தமிழில் மருத்துவ நூல்கள் மிகக் குறைவு. பல மருத்துவர்கள் எழுத்தாளர்களாக இல்லை என்பது ஒரு காரணம்; எழுதத் தெரிந்தாலும்கூட எழுதுவதற்குப் பல மருத்துவர்கள் தயங்குவதும் இன்னொரு காரணம்.
மருத்துவர் வி.எஸ்.நடராஜன், ஒரு மூத்த முதியோர் நல மருத்துவர் என்பதால், அநாயாசமாக தனக்குத் தெரிந்த தகவல்களையெல்லாம் அழகாக, ஓர் எழுத்தாளராகவும் நின்று சொல்லியிருக்கிறார். இந்த நூல் முதியவர்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து வயதினருக்குமான வழிகாட்டி!
- பாலு சத்யா
(ஆனந்த விகடன் ‘படிப்பறை’ பகுதியில்)
முதியோர் நலம் – முதுமையை முழுமையாக அனுபவிக்க
ஆசிரியர்: பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன்
வெளியீடு: டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை
50, 118A, பிளவர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 600 010
இந்த நூலைப் பெற…
மொபைல்: 81221 02173, 72005 19167
பக்கங்கள்: 255 விலை: ரூ.250