
முதியோர் நல மூத்த மருத்துவர்
பத்ம ஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன்
முதுமை என்பதே ஒரு தேய்பிறைதான். சில மகிழ்வான நிகழ்ச்சிகளுக்கு இடையே முதுமையில் நம்மை வெகுவாகப் பாதிப்பது தொல்லை தரும் நிகழ்ச்சிகளே. முதுமையில் வறுமை கொடியது, தனிமை கொடியது, பல நோய்கள் கொடியது என்பது தெரிந்ததே. இவை எல்லாவற்றையும் விட மிகவும் கொடியது என்ன தெரியுமா? அதுதான் முதுமையில் இயலாமை. அதாவது வயதான காலத்தில் குளிப்பதற்கு, உடை உடுத்துவதற்கு, சாப்பிடுவதற்கு, நடப்பதற்கு எனத் தன்னுடைய ஒவ்வொரு தேவைக்கும் மற்றவர்களைச் சார்ந்திருப்பது மிகவும் கொடுமையானது. இயலாமையைத் தடுத்து, தன் சொந்தக்காலிலேயே நிற்க ஏதாவது வழிகள் உண்டா? அது பற்றிச் சற்றுச் சிந்திப்போம்!

யாருக்கெல்லாம் இயலாமை ஏற்படும்?
உடல் நோய்கள்
பக்கவாதம், உதறுவாதம் என்கிற பார்க்கின்சன்ஸ் நோய், மூட்டு வலி, உடல் பருமன், சத்துணவுக் குறைவு, புற்றுநோய்கள், பார்வைக் குறைவு, காதுகேளாமை, ஆஸ்துமா, இதய பலவீனத்தால் மூச்சு விடுவதில் சிரமம், உடல் உறுப்புகளை இழத்தல், உதாரணம்: விபத்து, நோய்கள் (கட்டுக்குள் இல்லாத நீரிழிவினால் காலுக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு நோய்த் தொற்றுடன் அழுகும் நிலை ஏற்படும்போது அப்பகுதியை அகற்றிவிடுவது)
மனநோய்கள்
மனச்சோர்வு
மறதி நோய் எனும் டிமென்சியா
குடும்பம் மற்றும் நிதி சார்ந்தவை
நிதி வசதியின்மை, கைம்பெண்கள், மனைவியை இழந்தோர், குழந்தைப்பேறு இல்லாதவர்கள், தனிமை (எல்லாம் இருந்தும் ஒருவரும் உதவ இயலாத நிலை).
முதுமையில் இயலாமை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களினால் ஏற்படும். உதாரணம்: சுமார் 80 வயதடைந்தவருக்குக் கண் பார்வை சற்றுக் குறைவு, அதிக மூட்டுவலி, மனைவியை இழந்தவர், சிறிதளவு ஓய்வூதியம் மட்டுமே பெறுபவர், கவனிப்பதற்கு ஆட்கள் கிடையாது, இவர்களுடைய இயலாமையைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முதியோர்கள் சந்திக்கும் பல பிரச்னைகளுள் இதுவே மிக முக்கியமான பிரச்னையாகத் தெரிகிறது. இதற்கு ஏதாவது மார்க்கம் உண்டா? நிச்சயம் உண்டு. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. முதுமையினால் ஏற்படும் இயலாமையைத் தவிர, மற்ற எல்லாவற்றிற்கும் ஓரளவிற்கு வழி காண முடியும். அதற்கு முதலில் ஒருவர் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வயதானால் என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படலாம் என்று ஓரளவுக்குத் தெரிந்துகொண்டு, அதை எதிர்கொள்ளத் தக்க நடவடிக்கைகளை 50 வயதிலிருந்தே எடுத்துக்கொள்ள வேண்டும்.

வருமுன் காக்க…
ஐம்பது வயதிற்கு மேல் எந்த உபாதையும் தராமல் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் இருளில் ஒளிந்திருக்கும் திருடனைப் போலப் பல நோய்கள் தொல்லையின்றி மறைந்திருக்கும். உ-ம்.: நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், கை விரல்களில் ஏற்படும் நடுக்கம்.
ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் மறைந்திருக்கும் பல நோய்களைக் கண்டுகொள்ள முடியும், ஆரம்பநிலையில் உள்ள நோய்களைக் கண்டறிந்து அதற்குத் தக்க சிகிச்சை அளித்து முதுமையில் ஏற்படும் இயலாமையைத் தவிர்க்க முடியும்.
தடுப்பூசி
தடுப்பூசியின் மூலம் நிமோனியா மற்றும் இன்புளூயன்ஸா போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
கீழே விழுதலைத் தடுக்க…
கண், காது ஆகியவற்றை முழுமையாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கைத்தடி மற்றும் வாக்கர் போன்ற உபகரணங்களை உபயோகித்தல் அவசியம். பொருத்தமான காலணிகளை அணிய வேண்டும்.
விபத்தை தடுக்க…
வாகனங்களில் பயணம் செய்யும் போது பத்திரமாகப் பயணித்து முடிந்த அளவிற்கு விபத்தைத் தடுத்துக்கொள்ள வேண்டும்.
உணவு முறை மாற்றம்
புரதச்சத்து அதிகமுள்ள பருப்பு வகைகள், காளான், சோயா, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அரிசியைக் குறைத்து கோதுமை மற்றும் சிறுதானிய உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதயம் மற்றும் சிறுநீரக நோயாளிகள் தவிர, மற்ற முதியோர்கள் தினமும் 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சீனி சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை, வெல்லம் மற்றும் கருப்பட்டியை உபயோகிக்கலாம். உப்பைக் குறைவாக உண்ண வேண்டும்.

இயலாமையை விரட்ட உடற்பயிற்சி
முதுமைப் பருவத்தில் வரும் பல நோய்களை விரட்டும் சக்தி உடற்பயிற்சிக்கு உண்டு. உடற்பயிற்சி மூலம் பக்கவாதம் ஏற்படுவதை ஓரளவுக்குத் தடுக்கலாம். உடற்பயிற்சி மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து மறதி நோயும் வராமல் காக்கிறது.
இயன்முறைச் சிகிச்சை
ஆரம்பநிலை பார்க்கின்சன்ஸ் அல்லது பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இயன்முறைச் சிகிச்சை அளிப்பதினால் இயலாமையைத் தவிர்த்து தன் சுயதேவைகளைத் தானே செய்துகொள்ள முடியும்.
தியானம், பிராணாயாமம், யோகப் பயிற்சி
தியானம் மற்றும் பிராணாயாமம் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு மனச்சோர்வோ, மறதி நோயோ வருவதில்லை. பார்க்கின்சன்ஸ் உள்ளவர்களுக்கு யோகா மூலம் கை நடுக்கமும் தசை இறுக்கமும் வெகுவாகக் குறைகிறது.
இந்தக் குறிப்புகளை நடுத்தர வயதிலிருந்தே தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் இயலாமையை ஓரளவுக்குத் தடுத்து பிறர் உதவியின்றி நலமாக வாழலாம்.