Celebrity Voices | Why joint family is necessary? | Shri Venkaiah Naidu
முன்னாள் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் வழங்கிய உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கூட்டுக் குடும்பங்களின் நன்மைகளையும் முதியவர்களைப் போற்றிப் பேண வேண்டிய அவசியத்தையும் இந்திய பாரம்பரியத்தோடு இணைத்து அவர் பேசியிருந்தார். அதிலிருந்து குறிப்பிடத்தக்க பகுதிகளை இங்கு நாம் நினைவுகூர்வோம்.
‘‘பண்டைய காலத்திலிருந்து, இந்திய சமூகத்தில், குடும்பம் என்பது கலாசாரத் தொகுப்பின் அடையாளமாக உள்ளது. இந்திய கலாசாரத்தின் முக்கிய அம்சமாக இருந்த கூட்டுக் குடும்ப முறை, இப்போது நகர்ப்புற மற்றும் மேற்கத்திய கலாசாரத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
நகர்ப்புறங்களில் கணவன் – மனைவி, அவர்களின் குழந்தைகள் மட்டுமே வசிக்கும், ‘நியூக்ளியர்’ குடும்பங்கள் உருவானதால், கூட்டுக் குடும்ப முறையில் இருந்த, சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பும் குறைந்தது.
இன்றைய வாழ்க்கை முறையானது, கூட்டுக் குடும்ப முறையின் கலாசார மதிப்புகள், பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்களை பாதுகாப்பதில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதை உணர்கிறேன்.
இந்தியர்களான நம் மரபணுவிலேயே ‘உலகம் ஒரே குடும்பம்’ என்ற கருத்து ஆழமாக கலந்துள்ளது. இந்தப் பழமையான கோட்பாட்டை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வது, நம் கடமை.
இன்றைய இளைஞர்களுக்கு, கூட்டுக் குடும்பத்துக்கும் நியூக்ளியர் குடும்பத்துக்கும் இடையிலுள்ள நன்மை, தீமைகளை எடுத்துக் கூற வேண்டும்.
சமூகங்கள் மாறும்போது, முற்போக்கான பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளைக் கொண்டு வரும் எந்தவொரு செயல்முறையும், அனைவராலும் வரவேற்கப்பட வேண்டும். உதாரணமாக, கல்வியின் மூலம், பிற்போக்குத்தனமான குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மூடப் பழக்கவழக்கங்கள் போன்ற சமூக பிரச்னைகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
கல்வியை கற்பதன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் மட்டுமல்ல… குருட்டுத்தனமான மூட நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களையும் ஆணாதிக்க சமுதாயத்தையும் எதிர்த்துப் போரிடும் துணிச்சல் ஏற்படுகிறது. ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது, ஒரு முழு குடும்பத்தையே படிக்க வைப்பது போன்றது. இது, ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான அடிப்படைத் தேவை.
கூட்டுக் குடும்பத்தின் முக்கிய நன்மை இது… உடன்பிறப்புகளுடனும் உறவினர்களுடனும் ஏற்படும் பிணைப்பு, குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்.
நியூக்ளியர் குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு அந்த உணர்வு கிடைப்பதில்லை. கூட்டுக் குடும்பங்களில் பாசம் மற்றும் நல்லியல்புகள், குழந்தைகள் மத்தியில் உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
வயதானவர்களை மதிப்பதும் பாதுகாப்பதும் இந்திய குடும்ப முறையின் மையக் கொள்கை . ஆனால், வயதானவர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது, தற்போது அதிகரித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கவலையளிக்கின்றன. நியூக்ளியர் குடும்பங்களின் குடியிருப்பில், போதுமான இட வசதி இல்லாமை, குழந்தைகள் வெளிநாடுகளில் இருப்பது எனப் பல காரணங்கள் உள்ளன.
வயதானவர்களை புறக்கணிப்பது என்பது சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் நீண்ட கால நன்மையை அளிக்காது. இத்தகைய சம்பவங்களைச் சமாளிக்க, அரசு சட்டங்களை இயற்றியுள்ளது. இளம் வயதில், குடும்ப முறையானது, ஒற்றுமையான, வலுவான உறவை உருவாக்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குடும்ப அமைப்பே சமூக ஒற்றுமை மற்றும் ஜனநாயக சிந்தனைக்கு வித்திடுகிறது.
ஒரு சமூகத்தில், கலாசார மற்றும் சமூக மதிப்பை உயர்த்துவதில், குடும்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
1989 டிசம்பரில், ஐ.நா. பொதுக் குழுவில், ‘சர்வதேச குடும்ப ஆண்டு’ கடைபிடிக்க உறுதியேற்கப்பட்டது. 1993 முதல் ஒவ்வோர் ஆண்டும் மே 15ம் நாளை சர்வதேச குடும்ப தினமாக கடைபிடிக்க, பொதுக்குழு முடிவு செய்தது.
‘உலகம் ஒரே குடும்பம்’ என்ற பழமையான தத்துவத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், மனித நேயம், இறக்கம், பெருமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய குடும்பம், ஓர் இணக்கமான சமுதாயத்தின் அடித்தளமாக இருக்கும்.
குடும்பம், உலக கண்ணோட்டத்தை வடிவமைத்து, தனி நபர்களின் மதிப்பு முறையை வலுவாக்குகிறது. அதன் விளைவாக, நாம் அனைவரும் விரும்புகின்ற, ஒரு நிலையான, அமைதியான, வளமான உலகை உருவாக்க முடியும்’’