Homeஉடல் நலம்பெண்களை அதிகம் தாக்கும் எலும்பு, மூட்டுத் தொல்லைகள்

பெண்களை அதிகம் தாக்கும் எலும்பு, மூட்டுத் தொல்லைகள்

பொதுவாக வயதான ஆண்களைவிட பெண்களுக்குத்தான் எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த தொல்லைகள் அதிகம் ஏற்படுகின்றன. அவற்றில் எலும்பு வலிமை இழத்தல் மற்றும் முழங்கால்களில் ஏற்படும் மூட்டு வலி பற்றி சற்று விளக்கமாகவே தெரிந்து கொள்வோம்.

எலும்பு வலிமை இழத்தல் 

வயது ஆக ஆக எலும்பிலுள்ள பொருள் திணிவு சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கும்.  இதுதான் எலும்பு வலிமை இழத்தல் எனப்படும்.  பெண்களுக்கு இத்தொல்லை அதிகம் காணப்படுகிறது. முக்கியமாக அவர்களின் மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் எலும்பு எளிதில் பலவீனம் அடைகிறது.

வேறு யாருக்கெல்லாம் வரலாம்?

  • குடும்பத்திலுள்ள பெண்கள் யாருக்காவது எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது…
  • மாதவிடாய் முன்னதாக நின்றுவிடும் பெண்களுக்கு…
  • குறைவான எடை உள்ள பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலத்தில்…
  • குழந்தை இல்லாத பெண்களுக்கு…
  • சுண்ணாம்புச் சத்துள்ள உணவைக் குறைவாக உண்பவர்களுக்கு…

இந்த நோய்க்கென்று குறிப்பிடும்படியான தொல்லைகள் ஏதுமில்லை. இந்நோய் பல ஆண்டுகளாக மறைந்திருந்து கடைசியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இதன் விளைவே முதலில் தெரிய ஆரம்பிக்கும்.  கீழே விழாமலேயே, எவ்வித அடியும்படாமலேயே எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்நோயின் தனிச்சிறப்பு.  இடுப்பெலும்பு, முதுகெலும்பு மற்றும் மணிக்கட்டு ஆகிய இடங்களில்தான் எலும்பு முறிவு அதிகமாகக் காணப்படும்.

இத்தொல்லை வராமல் தடுக்க…

  • தினமும் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சியினால் எலும்பை உறுதி அடையச்செய்ய முடியும். உதாரணம்: வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துதல் மற்றும் ஆசனப்பயிற்சிகள்.
  • ஒரு நாளைக்கு 3 கப்புக்கு மேல் காபி அல்லது டீ அருந்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
  • சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தினமும் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணம்: பால், கேழ்வரகு, முருங்கைக் கீரை, வெந்தயக்கீரை, அகத்திக்கீரை, கறிவேப்பிலை, மீன், நண்டு, இறால், சுறா ஆகியவற்றில் சுண்ணாம்புச் சத்து நிறைய உள்ளது.  

இந்தப் பிரச்னைக்கு தனிப்பட்ட அறிகுறிகள் இல்லாததால், 50 வயதிலிருந்தே சுண்ணாம்புச் சத்து நிறைந்த உணவுகள் மற்றும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி மூலம் இத்தொல்லையை வராமலேயே தடுத்து உறுதியான எலும்புடன் முதுமையை வெல்ல முயற்சிப்போம்.

மூட்டுவலி

இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடமே மூட்டாகும். அங்கு ஜவ்வு போன்றதோர் உறுப்பு உள்ளது. அது தேயும்போது மூட்டிலுள்ள இரண்டு எலும்புகள் ஒன்றுக்கொன்று உராயும் போது வலி தோன்றுகிறது. பெண்களுக்கு சுமார் 55 வயதிலிருந்தே இத்தொல்லை நேரலாம். தேய்மானத்தினால் மூட்டு வலி ஏற்படுவதால் மருந்துகள், மாற்று சிகிச்சைகள் மூலம் வலியைக் குறைக்க முடியுமே தவிர பூரணமாகக் குணப்படுத்த முடியாது. தேய்மானம் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள சில சிகிச்சைமுறைகள் உண்டு.  

  • நடைப்பயிற்சி  
  • வலிநிவாரணிகள்
  • ஊசி மருந்து சிகிச்சை: சிலருக்கு மூட்டுக்கு உள்ளேயே ஊசி மூலம் ஸ்டீராய்டு மருந்தைச் செலுத்தினால் நல்ல பயன் கிடைக்கும். ஆனால், தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் மூட்டுகளில் ஊசி போட்டுக் கொள்ளக் கூடாது.  
  • இயன்முறை சிகிச்சை: ஆரம்பநிலையில் மூட்டு வலி உள்ளவர்கள் இயன்முறை சிகிச்சை மூலம் தக்க பயடைய வாய்ப்புண்டு.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சையில் பல வகைகள் உள்ளன.  

  • ஆஸ்ட்டியட்டமி: இச்சிகிச்சையின் மூலம் சீராக இல்லாத மூட்டுகளை சீர் செய்து, மூட்டினுள் உள்ள அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் மூட்டுவலி குறையும்.
  • தேய்ந்த மூட்டின் ஒரு பகுதியை மட்டும் அகற்றிவிட்டு, செயற்கை மூட்டின் பகுதியை    மட்டும் பொறுத்துவது.
  • செயற்கை மூட்டு பொறுத்துதல்

எலும்புத் தேய்மானத்தை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் மூலம் உறுதிசெய்த பின்னர், அறுவை சிகிச்சையின் அவசியத்தை மருத்துவர் நோயாளி மற்றும் உறவினர்களிடம் விவரமாக எடுத்துரைப்பார்.  பின்னர் பொது நல மருத்துவர் மற்றும் இதய நல மருத்துவரின் சம்மதம் பெற்ற பின் அறுவை சிகிச்சை செய்யத் தொடங்குவார். அறுவை சிகிச்சை செய்த ஒன்று அல்லது இரண்டு நாட்களிலேயே நடக்க வைத்து பின்னர் இயன்முறை சிகிச்சை அளித்து சுமார் 5 – 7 நாட்களில் வலியின்றி இல்லம் செல்லலாம். இரண்டு முழங்காலுக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை செய்து கொள்வது நல்லது. சிலர் ஒரு மூட்டுக்கு மட்டும் சிகிச்சை செய்துகொண்டு அடுத்த மூட்டுக்குப் பின்னர் செய்துகொள்ளலாம் என்ற முடிவு எடுப்பார். வலி சற்று குறைய, பலர் அடுத்த மூட்டுக்கு அறுவைசிகிச்சை செய்யாமலேயே விட்டு விடுகின்றனர்.  பழுதடைந்த மூட்டை அகற்றிவிட்டு செயற்கை மூட்டைப் பொறுத்துவது இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டுக்கு நல்ல பயன் அளிக்கும். 

அறுவைசிகிச்சை செய்துகொண்ட சுமார் 90% முதியவர்கள் 10-15 ஆண்டுகள் (சிலருக்கு வாழ்நாள் முழுவதும்) வலியின்றி நலமாக வாழ முடியும். அறுவை சிகிச்சை செய்த பின்னர் வெகு சிலருக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போவதுமுண்டு.       

மூட்டுவலியை முதுமையின் விளைவு என்று எண்ணாமல், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தக்க சிகிச்சை பெற்றால் அறுவை சிகிச்சையின்றி நலமுடன் வாழலாம்.

– பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராசன்
முதியோர் நல மூத்த மருத்துவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read