Homeஉடல் நலம்நடைப்பயிற்சி தோல் பிரச்னை வராமல் தவிர்க்குமா?

நடைப்பயிற்சி தோல் பிரச்னை வராமல் தவிர்க்குமா?

பெண்களுக்கு ஏற்படும் சருமப் பாதிப்புகள்

டாக்டர் முருகுசுந்தரம் – சரும நோய் நிபுணர்

காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி தனக்குள் தக்கவைத்து தோலை மிருதுவாகவும் மென்மையாகவும் வறண்டு போகாமலும் வைத்திருப்பது தோல் ஆற்றும் பணிகளில் மிக முக்கியமான ஒன்று.  முதுமையில் தோலின் இந்த ஆற்றல் சற்றுக் குறைவதாலும், தோலுக்கு உறுதி தரும் கொலாஜன், இழுவைத் தன்மை தரும் எலாஸ்டின் போன்ற புரதங்கள் குறைவதாலும், தோல் ஈரப்பதமும் எண்ணெய்ப் பசையும் இழந்து உலர்ந்து, வறண்டு, வலுவிழந்து, சுருங்கிப் போகிறது.  இதை எளிதில் தவிர்க்கும் முறைகள் இதோ:

தோல் வறட்சி

அதிக காரத் தன்மையுள்ள கெட்டியான சோப்புகளை பயன்படுத்தும் போது தோல் மேலும் வறட்சியடையவதால், தினமும் குளிக்கும் போது, அமிலத் தன்மையுள்ள தோல் வறட்சியை ஏற்படுத்தாத திரவ சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

குளித்தவுடன் உடலில் உள்ள ஈரத்தை முழுவதுமாகத் துவட்டி எடுக்காமல், மென்மையான பருத்தித் துண்டினால் லேசாக ஒற்றி எடுத்து, தோலில் பாதி ஈரம் இருக்கும் போதே, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற ஒரு தாவர எண்ணெயை தோல் முழுதும் பூசிக் கொள்ள வேண்டும்.

தோல் வறட்சியால் அரிப்பு ஏற்படும் போதெல்லாம் சொறிந்து புண்ணாக்காமல், மீண்டும் பலமுறை தாவர எண்ணெய்களையோ, மிருதுவாக்கும் களிம்புகளையோ பூசிக் கொள்ள வேண்டும்.

முதுமையில் பாதங்கள் உலர்ந்து வறண்டு வெடிப்பதும் பெண்களைப் பாதிக்கும் ஒரு பிரச்னை.  இதைத் தவிர்க்க தினமும் இரண்டு வேளை இளஞ்சூடான நீரில் அரைமணி நேரமாவது பாதங்களை ஊற வைக்க வேண்டும்.  பாதங்களில் உள்ள கனமான தோல், நீரை உறிஞ்சி பஞ்சு போல் ஆகிவிடும்.  அதன் மேல் மிருதுவாக்கும் களிம்பைப் பூசி, வழுக்கி விழாமல் இருக்க காலுறை அணிந்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து செய்வதை கட்டாயப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

பெண்மைக்குப் பெரிதும் உதவும் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் இயக்குநீர் சுரப்பு முதுமையில், குறிப்பாக நாற்பது வயது இறுதி முதல் ஐம்பது வயதுகளில் மாதவிடாய் முடிந்து குறையத் தொடங்குவதால் ஏற்படும் மாற்றங்களாலும், தோல் வறட்சியாலும், முதிய பெண்களின் பிறப்புறுப்புகளில் வறட்சியும் அரிப்பும் ஏற்படலாம். ஈஸ்ட்ரோஜன் களிம்புகள், மிருதுவாக்கும் களிம்புகள் போன்றவற்றை மருத்துவர் ஆலோசனையின்படி தடவுவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.

தொற்று நோய்கள்

முதுமையில் நோய் எதிர்ப்புத் திறன் குறைவதால் பல்வேறு கிருமித் தொற்றுகள் முதிய பெண்களைத் தாக்குகின்றன.  இவற்றுள் மிகப் பரவலானது பூஞ்சைக் காளான் தொற்று, தோல் மடிப்புகளிலும், விரல் இடுக்குகளிலும் வியர்வை தேங்குவதால் பலவித பூஞ்சைக் காளான்கள் தோலில் படர்கின்றன.  பூஞ்சைக் காளான் தொற்று ஏற்பட்டால் நாமாகவே தவறான களிம்புகளைத் தடவுவதைவிட மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

அக்னிக் கரப்பான் (Herpes Zoster – அக்கி) எனப்படும் தீ நுண்கிருமித் தொற்றும் முதியவர்களைப் பரவலாகத் தாக்கலாம்.  தீக்காயம் போல் தாங்க முடியாத எரிச்சலும் வலியும், சிறு சிறு கொப்பளங்களும் தோலின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.  

தேக்க நிலை கரப்பான்

முதுமையில் உடலில் பெரிய ரத்த நாளங்கள் வலுவிழப்பது போல் தோலில் உள்ள சிறிய ரத்த நாளங்களும் வலுவிழக்கின்றன.  மேலும் முதிய மகளிர்களிடையே போதிய நடைப்பயிற்சி இல்லாமல், உடல் எடை அதிகரிப்பதாலும் ஏற்கனவே வலுவிழந்த ரத்த நாளங்களில் ரத்தத் தேக்கம் ஏற்படுகிறது. தேங்கிய ரத்தத்தில் இருந்து வெளியேறும் நச்சுப் பொருட்கள் தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.  இதனால் ஏற்படும் அலர்ஜி‘தேக்க நிலை கரப்பான்’(Stasis Eczema) எனப்படுகிறது. இதை எளிதில் தவிர்க்க தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.  ஓய்வாக அமரும் போதும், தொலைக்காட்சி பார்க்கும் போதும்.  காய்கறிகள் நறுக்கும் போதும் கால்களைத் தொங்கப் போடாமல் உட்காரும் போது நாற்காலியை விட அரை அடி உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.  

மருந்துகளின் விளைவு

முதுமையில் பல்வேறு நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்துகளால் சில நேரங்களில் வரும் ஒவ்வாமைகள் பெரும்பாலும் தோலிலேயே தென்படுகின்றன.  குறிப்பாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்காக வழக்கமாக உட்கொள்ளும் ஒரு சில மருந்துகள் தோலில் அரிப்பாகவும், சிவந்த தடிப்பாகவும், கரப்பானாகவும் ஒவ்வாமை விளைவுகளை ஏற்படுத்தலாம்.  

டாக்டர் முருகுசுந்தரம்

முடி

எல்லாப் பெண்மணிகளுக்கும் எப்போதும், என்றென்றும் உள்ள குறை தலைமுடி உதிர்தல், பொடுகினாலும், இரும்பு, கால்சியம், புரதம் ஆகிய ஊட்டச்சத்துகளின் குறைவினாலும், இயக்குநீர் சமன்பாடின்மையினாலும் ஏற்படும் முடி உதிர்தல், முதிய பெண்களுக்கு மேலும் அதிகரிக்கிறது. முதிய மகளிருக்கு தலையில் வழுக்கையும் சில நேரங்களில் ஏற்படலாம்.  இன்றைய நவீன மருந்துகளும், இரும்பு, கால்சியம், புரதம் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு முறைகளும் தலைமுடி உதிர்வை வெற்றிகரமாக சரி செய்யக்கூடியவையே.

முதுமையில் பெண்கள் சந்திக்கும் மற்றொரு சங்கடம், மேலுதடு, தாடை மற்றும் முகத்தில் ஆண்களைப் போல் தேவையற்ற முடி வளர்தல்.  முதுமையில் ஏற்படும் இயக்குநீர் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணம்.  நவீன லேசர் கருவிகளால் தேவையற்ற முடியை மீண்டும் வளராதவாறு முற்றிலுமாக அகற்றிவிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read