30-களிலேயே தயாராவோம் இளமையின் முதுமைக்கு!
40 வயதில் லேசாக நரை எட்டிப் பார்த்தாலே சிலருக்கு பயம் பற்றிக்கொள்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு அனுபவிப்பது எப்படி என அறிந்துகொண்டால், எந்த வயதிலும் எந்தப் பயமும் எட்டிப் பார்க்காது என்பதே உண்மை.
மூப்பு என்பது உடலியலில் ஒரு செயல்முறை. அதை நாம் மகிழ்ச்சியுடனும் இனிய எதிர்பார்ப்புகளுடனும் பார்க்க முடிந்தால் எல்லாமே நலமாகும். நமக்கு வயதாகும்போது முதலில் நம்மை நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஒரு நோக்கத்துடன் வாழ வேண்டும்… அவ்வளவுதான்!
எப்படி, யாராக இருக்கப் போகிறோம்?
நம் எல்லோருக்குமே வயதாகும்… ஆண்டுக்கு ஆண்டு அல்ல… மாதத்துக்கு மாதம் அல்ல… நாளுக்கு நாள் அல்ல… நொடிக்கு நொடி நாம் மூப்பாகிக் கொண்டிருக்கிறோம். இதுதான் இயற்கை. இளமையின் முதுமை என்பது மூப்பு எனும் இயற்கைச் செயல்முறையை ஏற்றுக்கொள்கிறது.
இப்போது 30-40 வயதில் இருக்கிற நாம் 50, 60, 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுகளில் யாராக, எப்படி இருக்கப் போகிறோம்? மூப்பைக் கண்டு கலங்காமல், அதை இயல்பாக ஏற்றுக்கொண்டால், அடுத்தடுத்த ஆண்டுகளில் நம் வாழ்க்கையை இதமாக வாழ்வதற்கான வழிமுறைகளைக் கண்டறியலாம்.
வயதாவதைக் கண்டு நாம் ஏன் பயப்படுகிறோம்?
பொதுவாக உலகின் பல நாடுகளில் வயதானவர்கள் நன்றாக நடத்தப்படுவதில்லை. பெரும்பாலும் சீனியர்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். அவர்களின் அறிவையும் அனுபவத்தையும் மதிப்பதில்லை. அதனால், ‘நமக்கு வயதாகும்போது, நம் மதிப்பு குறையும்; குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பொருத்தமற்றவராக ஆகிவிடுவோம்’ என்கிற தாழ்வு மனப்பான்மைக்குள் பலர் சிக்கிவிடுகிறார்கள்.
நமது உடல், மனம் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை எல்லா வயதிலும் பராமரிக்க வேண்டியது மிக அவசியம். அப்படிச் செய்யும்போது இளமையின் முதுமையாக இருந்தாலும், முதுமையின் இளமையாக இருந்தாலும் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஏனெனில், வயது என்பது ஓர் எண் மட்டுமே!
நாம் முதுமையை நோக்கி பயணிக்கும் போது முதலில் கவனம் செலுத்த வேண்டிய இடம் உடல் நலம். இதற்காக செய்ய வேண்டிய முதல் படி, உங்கள் உடல் ஆரோக்கிய நிலையை பரிசோதனை செய்து, அதற்கு ஏற்றவாறு உங்கள் வாழ்க்கை பயணத்தினை தொடர்வது.

40 வயதை கடக்கும் போது மேற்கொள்ள வேண்டிய
உடல் ஆரோக்கியத்திற்கான பரிசோதனைகள்
- நீரிழிவு பரிசோதனை (Diabetes screening)
- கோலோ ரெக்டல் கேன்சர் பரிசோதனை (Colorectal Cancer screening)
- மார்பக புற்று நோய் பரிசோதனை (breast cancer screening)
- நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை
- புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை.
- முழு உடல் பரிசோதனை மற்றும் இரத்த சோதனை.
இத்தகைய பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் நாம் இந்த நோய்களின் பாதிப்பில் இருந்து விலகி செல்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இது தவிர உங்கள் பரம்பரை வழியாக வரும் நோய்க்கான பரிசோதனைகளை தவிர்க்காமல் செய்து கொள்வது மிகவும் அவசியம். அவற்றில் இருந்து தற்காத்து கொள்ள தேவையான வாழ்வியல் மாற்றங்களை செய்து கொள்வதும் அவசியம்.
இவற்றின் மூலம் எதிர்காலத்தை பற்றிய பயம் நீங்கி, தெளிவாக மற்றும் நேர்மறை சிந்தனையோடு வாழலாம்.
நாம் நேர்மறை (பாசிட்டிவ்) எண்ணத்தோடு இருக்கும்போது, ஒவ்வொரு வயதிலும் துடிப்பாகவும் நம்பிக்கையோடும் உணர்வோம். அப்போது நமது நோயெதிர்ப்பு அமைப்பும் நேர்மறையாகவே பதிலளிக்கிறது. இதுவே நல்வாழ்வுக்கான எளிய மந்திரம்!

வயதாவதை மிகவும் நேர்மறையான வழியில் பார்ப்பது எப்படி?
சுய ஏற்றுக்கொள்ளலைப் பயிற்சி செய்யுங்கள்!
உங்களுக்கு உண்மையான விருப்பங்களைச் செய்வதன் மூலம் உங்கள் சக்தியைத் திரும்பப் பெறுங்கள். உங்கள் தலைமுடிக்கு ஒருபோதும் ‘டை’ தீட்ட வேண்டாம்’ அல்லது ‘நரை இருந்தால் உங்கள் தலைமுடிக்கு ‘டை’ வேண்டும்’ போன்ற பல கருத்துக்கள் உள்ளன. ஆனால், இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பமே!
ஓர் இலக்குடன் வாழுங்கள்!
கனவு காண்பதை எந்த வயதிலும் கைவிடாதீர்கள். அது இளமையின் முதுமைக்கான திறவுகோல். ஒரு தொழிலாக இருந்தாலும், தன்னார்வ நிலையாக இருந்தாலும், பொழுதுபோக்காக இருந்தாலும் ஓர் நோக்கத்தோடு செயல்படுங்கள். அதுவே உங்களை நலமுடன் பல்லாண்டுக் காலத்துக்கு அழைத்துச் செல்லும். ஏனெனில், வயது என்பது ஓர் எண் மட்டுமே!
எல்லா வயதினருடன் நட்பு கொள்ளுங்கள்!
பொதுவாக, சம வயதில் இருக்கும் நண்பர்களுடன் மட்டுமே நாம் பழகுகிறோம். அதைத் தாண்டி, பரந்த அளவிலான நண்பர்களைக் கொண்டிருப்பது உண்மையில் உதவியாக இருக்கும். 20 வயதிலும் 90 வயதிலும்கூட உங்கள் நட்பு வட்டத்தில் நண்பர்கள் இருக்கட்டும். இளமையும் நடுமையும் முதுமையும் இணையும்போது அது ஒரு மனிதக் களஞ்சியமாகவே (ஹியூமன் என்சைக்ளோபீடியோ) இருக்கும். அதன் சக்தியை அளவிட முடியாது!
கற்றலுக்கு முன்னுரிமை கொடுங்கள்!
‘கற்போம் கற்பிப்போம்’ என்பது எந்த வயதுக்கும் பொருந்தும். கல்லூரி, பல்கலைக் கழகக் கல்விதான் என்றில்லை. இன்று கற்பதற்கு எண்ணற்ற வாய்ப்புகளும் வசதிகளும் உள்ளன. இசை, கலையில் தொடங்கி இணையப் பயன்பாடு வரை ஏராளமானவற்றை எளிதாக, வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொள்ளலாம்.
அதேபோல புதிய பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுங்கள். புதிய செயல்பாடுகளை முயற்சிப்பதிலும், வெவ்வேறு தலைப்புகளைப் பற்றி அறிந்துகொள்வதிலும் உங்கள் மனதை ஈடுபடுத்திக் கொள்வது மிக அவசியம். ஏனெனில், வயது என்பது ஓர் எண் மட்டுமே!
சுறுசுறுப்பாக இருங்கள்!
உடற்பயிற்சி உங்கள் மனதையும் உடலையும் உச்ச நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
‘‘என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும்… ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்குனதுடா’ என்று ‘பில்லா 2’ திரைப்படத்தில் அஜித் வசனம் பேசியிருப்பார். அதேபோல உங்கள் சொந்த பாதையை நீங்களே வரையறுக்கவும்.
40 வயதுக்கு மேல் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்… உங்களுக்கு முந்தைய தலைமுறை மக்கள் என்ன செய்தார்களோ அதையே பின்பற்ற வேண்டும் என்றும் சிலர் நினைக்கிறார்கள். அதற்கெல்லாம் நீங்கள் அடிபணிய வேண்டியதில்லை. இளமையின் முதுமையில், நீங்களே உங்கள் சொந்த முன்னோடி ஆவீர்கள்!
ஆரோக்கிய வாழ்வைக் கைவிடாதீர்கள்!
‘இதற்கு மேல் என்ன இருக்கு’ என்றொரு சலிப்புக்குள் சிக்காமல், எந்த வயதிலும் உணவுக் கட்டுப்பாட்டிலும் உடற்பயிற்சி செய்வதிலும் உறுதியாக இருங்கள். அதுவே முதுமையின் இளமைக்கு வழிவகுக்கும். கூடிய வரை மருத்துவமனை படுக்கையில் விழாமல், ஆரோக்கிய வாழ்வைத் தொடர்வது ஒன்றும் சிரமமில்லை. அது நிச்சயம் உங்களால் முடியும்.
ஏனெனில், மீண்டும் மீண்டும் மனதில் கொள்ளுங்கள் வயது என்பது ஓர் எண் மட்டுமே!