Homeஉடல் நலம்ஆண்களைவிட பெண்கள் எளிதில் நோயிலிருந்து குணமடைய முடியுமா?

ஆண்களைவிட பெண்கள் எளிதில் நோயிலிருந்து குணமடைய முடியுமா?

பெண்களின் நலம் காக்கும் அறுவை சிகிச்சைகள்!

டாக்டர் பி.பி.தாட்சாயணி
பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் | முதியோர் அறுவைசிகிச்சை துறை | ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை | சென்னை மருத்துவ கல்லூரி

ஆரோக்கியமான வாழ்வு என்பது ஒரு வரம். அத்தகைய ஆரோக்கியம் முதிர்ந்த வயதில் அனைவருக்கும் கிடைக்கும் எனில், அது மிகப்பெரிய வரம். முதுமைக்கால நோய்களை எல்லாம் மருந்தினால் மட்டுமே போக்கிவிடமுடியாது. சில நோய்களுக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படும். ஆனால், முதியவர்களில் சிலர் எளிதில் அதற்கு ஒப்புதல் தருவதில்லை. அறுவைசிகிச்சை மீதான அச்சமே அதற்குக் காரணம். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு சில நோய்களை அறுவை சிகிச்சையின் மூலம்தான் குணப்படுத்த முடியும். உதாரணம்: கர்ப்பபைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், வாயில் தோன்றும் புற்றுநோய், கர்ப்பபையில் கட்டி, கர்ப்பப்பை கீழே இறங்கி விடுதல், சிறுநீர்க் கசிவு, குடல் இறக்கம், மூலம், தைராய்டு கட்டிகள் மற்றும் பித்தப்பையில் கற்கள்.

வயதான பெண்களுக்கு அறுவைசிகிச்சை செய்யவேண்டிய தொல்லைகளோடு நீரிழிவு நோய், ரத்தசோகை, பருமன் மற்றும் தைராய்டு தொல்லைகளும் மறைந்து இருக்கும். அவற்றைக் கண்டறிந்து அறுவைசிகிச்சைக்கு முன்பாக தக்க சிகிச்சையளிக்க வேண்டும். அறுவைசிகிச்சை முறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இருப்பதால், ஆண்களைவிட சற்று குறைவாகவே இதயம் மற்றும் ரத்த நாளங்கள் சார்ந்த தொல்லைகள் இருக்கும்.  அறுவைசிகிச்சைக்குப் பின்னர் ஆண்களைவிட பெண்கள் விரைவில் குணமடைந்து வீட்டுக்குச் சென்று விடுகின்றனர்.

அறுவைசிகிச்சை செய்வதற்கு மயக்க மருந்து கொடுத்தல் மிக இன்றியமையாதது. நோயாளியை நன்கு பரிசோதனை செய்து அவர் மயக்க மருந்தினை ஏற்றுக்கொள்ளும் தகுதி உடையவரா என்று மயக்க மருந்து நிபுணர் முடிவு செய்வார். அதன் பின்னரே அறுவை சிகிச்சைக்கு ஆயத்தப்படுத்துவார். ஓர் அறுவைசிகிச்சையின் வெற்றி, மயக்கமருந்து தரும் திறமையான நிபுணரைப் பொருத்தே அமையும் என்றால், அது மிகையாகாது!

மார்பகப் புற்றுநோய்

ஐம்பது வயதை கடந்த பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம். புற்று நோயின் தன்மை மற்றும் ஒட்டுமொத்த உடல்நிலையைப் பொறுத்தே சிகிச்சை முறை அமையும். அறுவைசிகிச்சைதான் இதற்கு சிறந்த சிகிச்சை முறையாகும். அறுவை சிகிச்சைக்கு பின்பு கதிர்வீச்சு சிகிச்சை தேவைப்படும்.

கர்ப்பப்பைவாய் புற்றுநோய்

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் இது முதல் இடத்தை வகிக்கிறது. ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு கர்ப்பப்பை மற்றும் சுற்றியுள்ள பாகங்களை முழுமையாக அறுவைசிகிச்சை செய்து எடுத்துவிட வேண்டிவரும். சற்று காலம் தாழ்த்திய புற்றுநோய்க்கு மருத்துவ சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சையோடு அறுவை சிகிச்சை முறையும் தேவைப்படும்.

கர்ப்பப்பை இறக்கம்

அதிக குழந்தைகளைப் பெறுவது, பிரசவத்துக்குப் பின் உடனடியாக அதிக எடை தூக்குவது, அடி வயிற்றுக்கு அதிக உழைப்பு தருவது மற்றும் எடை அதிகரிப்பது போன்றவற்றால் கர்ப்பபை பலவீனமடைந்து இறக்கம் உண்டாகிறது. சிறுநீர்ப் பிரச்னைகள், இடுப்பில் வலி, வெள்ளைப்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெண் மருத்துவரை அணுகி கர்ப்பப்பை முழு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மேலும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும். கர்ப்பப்பை இறக்கம் ஆரம்ப நிலையில் இருப்பின் ஸ்லிங் எனப்படுகிற அறுவைசிகிச்சையின் மூலம் தீர்வு காணலாம். அதாவது இறங்கிய கர்ப்பப்பை பகுதியை லேப்ரோஸ்கோபி சிகிச்சையின் மூலம் இழுத்து வைத்து டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். கர்ப்பப்பை முழுவதும் கீழிறங்கும் நிலை இருக்குமாயின் கர்ப்பப்பையை கீழ் வழியாக அகற்றுதல் மற்றும் நீர்ப்பைக்கான சிகிச்சை மற்றும் மலக்குடல் இறக்கத்துக்கான சிகிச்சையையும் செய்துகொள்ள வேண்டும்.

சிறுநீர்க் கசிவு

சிறுநீர்த் தாரையில் செய்யும் அறுவைசிகிச்சை மூலம் சிறுநீர்க் கசிவை கட்டுப்படுத்த முடியும். ஸ்லிங்கு எனும் எளிய அறுவை சிகிச்சை மூலம் நல்ல பயன் பெறலாம்.

குடலிறக்கம்

அறுவைசிகிச்சைக்குப் பின்னர் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் தழும்பில் இருந்து ஏற்படும் குடலிறக்கமானது, அதிக அளவில் பெண்களுக்கு ஏற்படும்.  இதன் முக்கிய  அறிகுறி, புடைப்பு போன்ற ஒரு பகுதி தழும்பின் ஒரு பகுதியில் காணப்படுவதுதான்.  இது சிறியதாக ஆரம்பித்து காலப்போக்கில் பெரிதாகிக்கொண்டே இருக்கும். இருமும்போதும் தும்மும்போதும் இந்தப் புடைப்பு அதிகரிக்கும். படுக்கும்போது மட்டும் அளவு குறைந்து விடும்.  வலி போன்ற தொல்லைகள் ஏதுமில்லையெனில், பெரும்பாலானவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் பெல்ட் அணிவதன் மூலமே இதைக் கட்டுக்குள் வைக்கலாம். அறிகுறிகள் அதிகம் இருப்பின் அறுவைசிகிச்சை தேவைப்படும்.

தைராய்டு கட்டிகள்

கழுத்தின் முன்பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி சற்று வீங்கி இருக்கும். அல்லது அந்தச் சுரப்பியில் பல கட்டிகள் இருக்கலாம். இந்தக் கட்டிகளை மாத்திரையினால் குறைக்க முடியாது. ஆனால், அறுவைசிகிச்சையின் மூலம் கட்டியை முழுவதுமாக அகற்றிவிடலாம். சிலர் அறுவைசிகிச்சைக்குப் பின்பு தொடர்ந்து தைராய்டு மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

பெண்களுக்கு அறுவைசிகிச்சை மூலம் நோய்களை குணமாக்குவதில் படபடப்பு மிகுந்த படக்காட்சி போல திருப்பங்கள் நிறைந்திருக்கும். எனினும் நலம் அடைந்த பின்னான அவர்களின் புன்னகை ஒன்றே அறுவைசிகிச்சை மருத்துவருக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தும்!                      =

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read