இன்று ஏனோ தெரியவில்லை, ராகவன் ‘சாருக்கு பூங்காவின் நடைப்பயிற்சியில் மனம் லயிக்கவில்லை. நேற்றைய மெடிக்கல் செக்கப்பில் எல்லாமே கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக டாக்டர் சொல்லியும் ஏன் இப்படி, மனதில் சொல்ல முடியாத அழுத்தம்?
திருச்சியிலிருந்து லட்சுமி போன் பண்ணி பணம் அனுப்பச் சொன்னதிலிருந்து மனம் அலைபாய்கிறது. மாப்பிள்ளைக்கு ஏதோ கடன் அடைக்கணுமாம்.
இருபதாயிரம் ஜிபேயில் அனுப்புங்க அப்பான்னு மகள் கெஞ்சிய போது வங்கியின் ஓய்வூதியத் தொகையின் இருப்பை மனம் கணக்குப் பார்த்து திருச்சி பாய்லர் தொழிற்சாலையில் கைநிறையச் சம்பாதிக்கும் மாப்பிள்ளைக்குத் தானே பொண்ணைக் கட்டிக் கொடுத்தோம்.
குடும்பச் செலவுகளைச் சரியாகத் திட்டமிடத் தெரியாமல், எழுபது வயதான மாமனாரிடம் அடிக்கடிப் பணம் கேட்டு தொந்தரவு தரும் மருமகனை நினைக்கையில் மனம் அலைபாய்கிறது.

தெருமுனையில் சுதந்திரமாகத் திரியும் மாட்டின் சாணத்திலிருந்து கால் வைக்காமல் திரும்ப முயற்சித்த போது வேகமாக வந்த மோட்டார் பைக் உரசிப் பறந்தது, பின், சீட்டிலிருந்த ஜீன்ஸ் பையன் கத்தினான்.
ஏய்… பெருசு… பாத்து நடக்கக்கூடாதா? இப்பொழுது ராகவன் சாரின் கண்களில் நெருப்பு பறந்தது. வீட்டுக்குப்போய் மனைவியிடம் ஸ்ட்ராங்கா காபி போடச் சொல்லணும்.
ஏங்க… இன்னிக்கு ஏனோ பால் திரிஞ்சு போச்சு… போய் ஒரு பால் பாக்கெட் வாங்கிட்டு வாங்க… மனம் தளர்ந்து சோபாவில் விழுந்த ராகவன் சாருக்கு உலகமே வில்லனாகத் தோன்றியது.
தாத்தா… வெளியிலிருந்து ஓடிவந்த ஏழு வயதுப் பேத்தி மல்லி முதுகுப்புறமாக வந்து கட்டியணத்தாள். தாத்தா… நம்ம தோட்டத்திலே ரோஜா பூத்திருக்கு… இதோ பாத்தியா… கையிலிருந்த மலரைக் கொடுத்து தாத்தாவை இறுகி அணைத்த பேத்தியின் மிருதுவான பிஞ்சுக்கரங்கள் மனதில் இதமாக இறங்கின.
READ ALSO: முதியோருக்கு தாழ்வு மனப்பான்மையா?
அழுத்தங்கள் அனைத்தும் காற்றில் கரைந்துபோய், மனம் லேசாகிப் போனது. தாத்தா – பேத்தியின் உறவில் உலகமே சொர்க்கமாகத் தோன்றியது.
ஆமாண்டா கண்ணு. . . நேத்து தண்ணி ஊத்துனோமில்லே. அதுதான் ரோஜா பூத்திருச்சு… ஆம்.
வசந்தங்கள் பூத்த வாழ்வுப் பயணத்தில் வயது முதிரும் பொழுது உடல் தளர்வும், உள்ள அழுத்தங்களும் இயற்கையே. உடல் உறுப்புகளின் தளர்வை எதிர்கொள்ள மருத்துவர்களின் மருந்துகளும், ஆரோக்கிய வாழ்வியலும் துணைபோகும்.
ஆனால் முதிர்ந்த வயதில் உணர்வுகளின் அழுத்தங்களை, கலங்கவைக்கும் கவலைகளை, உறவுகளின் உராய்வுகளை எப்படி எதிர்கொள்வது? வாழ்க்கை முழுவதும் குருவியாகச் சேர்த்த பணம் மகளின் கல்யாணத்திற்கும், மகனின் வெளிநாட்டுப் படிப்பிற்கும் செலவாகி வங்கிக் கையிருப்பு மெலிகின்ற நேரத்தில்…
அன்பைக் கொட்டி வளர்த்த குழந்தைகள் அயல்தூரம் சென்றுவிட்ட தனிமையைக் கண்ணீரில் உள்வாங்கும் தருணங்களில்… நாவுக்கேற்ற சுவையான உணவோ, நல்ல உடையோ, நான்கு பேரின் பாராட்டுகளோ, நம்மைத் தேற்றுவதில்லை.

சின்னச்சின்ன உறவுகளின் தொடர்புகளும், ஆறுதலுமே மருந்தாக அமையும், இதில் பேரக்குழந்தைகளின் கலப்படமில்லாத பாசத்தை அனுபவிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நம் சொந்தக் குழந்தைகளைவிடப் பேரக்குழந்தைகளின் பாசமான இறுக்கம் இன்னமும் அதிகமென்பதை அனுபவித்தவர்களால் தான் உணர முடியும்.
உணவு உண்ணும்போது இடை டையே குறுகுறுவென்று நடந்துவந்து, தன் சிறிய கையினை நீட்டி நெய்யுடைச் சோற்றை வாங்கி, அச்சோற்றைத் தரையில் இட்டும், பின் அதனைத் தொட்டும் வாயால் கவ்வியும் கையால் பிசைந்தும் உடம்பில் சிதறியும் தன்னை மயக்குகின்ற குழந்தை என்கிறார் மன்னர்.
இந்தச் சங்க காலக் கவிதையொன்றே போதும் குழந்தைகள் நம் மன அழுத்தங்களுக்கு சரியான வடிகால்களென்று புரிந்துகொள்ள. ஆம். அவர்கள் மன அழுத்த நிவாரணிகள். வீட்டில் பேரக் குழந்தைகளிருந்தால் அவர்களோடு நிறைய நேரம் செலவு செய்யுங்கள்.
READ ALSO: சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இருக்கு!
தூங்குவதற்கான வெறும் கதைகள் சொல்வதோடு நின்றுவிடாதீர்கள். அவர்களின் பாடப் புத்தகங்களைப் படித்து எளிதாக விளக்கிச் சொல்லுங்கள். விடுமுறை நாட்களில் நீங்களும் குழந்தையாக மாறி விளையாடுங்கள்.
கொரோனா நேரத்தில் என்னுடைய பேத்திக்கு பல்லாங்குழி, கிச்சுசிச்சுத் தாம்பாளம், பரமபதம், என நமது பழைய விளையாட்டுகளைக் கற்றுக் கொடுத்தேன்.
நேரமிருந்தால் செஸ், கேரம் விளையாடுங்கள். உங்கள் மனமும் லேசாகிப் போகும். குழந்தைகள் டென்னிஸ், கூடைப்பந்து விளையாடுபவர்களாக இருந்தால், நீங்களும் கூடவே பயிற்சிக்கூடத்திற்கு போய் வாருங்கள்.
ட்யூஷனுக்குக் கூட்டிப் போங்கள். இதனால் வெறும் வெறுப்பு அரசியல் செய்திகளையும் உபயோகமில்லாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்த்து நேரத்தை வீணாக்காமல் நீங்களும் சுறுசுறுப்பாக இருக்கலாம். குழந்தைகளும் செல்போன், டி.வி., என்று கண்களைக் கெடுக்காமல் ஆரோக்கியமாக வளர்வர்.

இன்றைய குழந்தைகள் இன்டெர்நெட் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய விருப்பங்கள் வேறாக இருந்தாலும், தாத்தாவுடைய பள்ளிக்கூடம், ஆசிரியர்கள், டி.வி., இல்லாமல், மொபைல் இல்லாமல் எப்படி வாழ்ந்தீர்கள் என்று தெரிந்துகொள்ள அவர்களுக்கு ஆர்வம் அதிகம்.
பள்ளிக்கூடத்தில் முட்டிபோட்ட உங்கள் அனுபவங்களை அவர்களுக்குச் சுவாரசியமாகச் சொல்லிப் பாருங்கள். உங்கள் மன அழுத்தங்கள் அனைத்தும் மறந்தே போகும். மறைந்தே போகும்.
பேரக்குழந்தைகள் தென்றல் தாலாட்டும் இனிய உறவுகளின் முதல் தொடக்கம் என்பதை உணர்ந்தாலே போதும், முதுமை என்பது பூங்காற்றாக மாறிவிடும்.
கட்டுரையாளர்
சி.ஜெ. சாஜகான்