பருவ வயதில் ஒரு பெண் பூப்படைந்தால், அவளது குடும்பத்தில் அது ஒரு சுப நிகழ்வு. அதுவே மாதவிடாய் நின்ற பெண்மணிக்கு உதிரப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரைக் காண வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்.
இறுதி மாதவிடாய் எனப்படும் ‘மெனோபாஸ்’ என்றால் என்ன?
1. மாதவிடாய் முழுமையாக நின்று விடுவது,
2. சீரான மாதவிடாயின்போது உதிரப்போக்கு குறைவது,
3. மாதவிடாய் ஏற்படும் கால இடைவெளி அதிகரித்து, படிப்படியாக மாதவிடாய் நிற்பது.
நம்மில் பலர், ‘மாதவிடாய் நிற்கும் காலத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படுவது இயல்பு’ என்று நினைக்கிறார்கள். அது மிகவும் தவறான கருத்து. மாதவிடாய் நிற்கும் காலத்தில் ரத்தப்போக்கு வழக்கத்தைவிட அதிகமாகலாம்; அல்லது குறையலாம். ஆனால், மிக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ, வழக்கத்தைவிட அதிக நாட்களுக்கு ரத்தப்போக்கு இருந்தாலோ, உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். இதே போல தாம்பத்ய உறவுக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ, மூன்று வாரங்களுக்குள்ளாகவே மாதவிடாய் மீண்டும் வந்தாலோ, டாக்டரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
தொடர்ச்சியாக 12 மாதங்கள் மாதவிடாய் வராவிட்டால், மெனோபாஸ் பருவத்தை அடைந்துவிட்டதாக அர்த்தம். மாதவிடாய் வருவது நின்று விட்டால், ‘நாம் மெனோபாஸ் அடைந்துவிட்டோம்’ என்று எண்ணினாலும், ஒருமுறை மருத்துவரை அணுகி, கருப்பை வாய் பரிசோதனை செய்துகொள்வதும், ஸ்கேன் மற்றும் LH, FSH ரத்தப் பரிசோதனைகள் மூலம் மெனோபாஸ் அடைந்ததை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மெனோபாஸ் பருவத்தை அடைந்தபிறகு மாதவிடாய் தொல்லைகள் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று அர்த்தம் இல்லை. சிலருக்கு இந்த நிம்மதி தொலைகிறது. ஆம், சுமாராக பத்தில் ஒரு பெண்மணிக்கு இந்தப் பிரச்னை வருகிறது. மாதவிடாய் நின்ற ஒருவருக்கு ரத்தப்போக்கு ஏற்படுவது கவலைக்குரிய விஷயம். மாதவிடாய் நின்று ஒரு வருடத்திற்கும் மேலான காலத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால், உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
மாதவிடாய் நின்ற பிறகு நீங்கள் மருத்துவரை எப்பொழுது அணுக வேண்டும்?
1. வருடாந்திர மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதற்கு.
2. மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டால் மருத்துவப் பரிசோதனை அவசியம். ஒரே ஒரு முறை சிறிதளவு ரத்தப்போக்கு ஏற்பட்டாலும் அலட்சியம் செய்யக்கூடாது.
3. வலி இல்லாத உதிரப்போக்கு ஏற்பட்டாலோ, வெள்ளைப்படுவது பழுப்பு நிறமாகவோ அல்லது ரத்தம் கலந்ததாகவோ இருந்தாலோ, அது உதிரம் இல்லை என்று நீங்கள் உறுதியாக நினைத்தால்கூட மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
4. தாம்பத்ய உறவுக்குப் பின்னர் ரத்தக்கசிவு ஏற்பட்டால்கூட மருத்துவரை அணுக வேண்டும்.
மாதவிடாய் நின்ற பிறகு புற்றுநோயாலும் மற்றும் பல தீங்கற்ற காரணங்களாலும் ரத்தப்போக்கு ஏற்படலாம். இதை ‘பாம்பு என்று பயப்பட முடியாது, பழுது என்று மிதிக்க முடியாது’ என்பதற்கு ஏற்ப அணுக வேண்டும். கருப்பையில் புற்றுநோய் ஏற்பட்ட பெண்கள், 90% மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டு சிகிச்சைக்கு வருபவர்கள். இவர்களில் பலருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்னை இருக்கும்.
பரிசோதனைகள்
கருப்பை புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கருப்பை உட்புற சுவரின் திசுக்கள் மெலிந்து போவது அல்லது தடிமன் ஆவது, கருப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகள் ஏற்படுவது, கருப்பை அல்லது அதைச் சார்ந்த பகுதிகளில் ‘பாலிப்’ போன்ற திசு வளர்ச்சி இருப்பது, கருப்பை உட்புறச் சுவரில் நோய்த்தொற்று ஏற்படுவது, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று என இந்த ரத்தப்போக்கு ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம்.
மருத்துவப் பரிசோதனையின்போது, இந்த உதிரப்போக்கு எவ்வளவு நாட்களாக உள்ளது போன்ற விவரங்களும் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளனவா என்பதையும் அறிவார்கள். அதைத் தொடர்ந்து, ரத்தப்போக்கின் காரணத்தை அறிய பரிசோதனைகள் செய்யப்படும்.
கருப்பை வாயினை மருத்துவர் பரிசோதனை செய்வார். ஸ்கேன் பரிசோதனை மூலம் ஃபைப்ராய்டு போன்ற கட்டிகள் அல்லது சினைப்பையில் ஏதேனும் கட்டிகள் உள்ளனவா என பார்க்கப்படும். கருப்பையின் உட்புறச் சுவர் தடிமன் (Endometrial Thickness) அளவு எடுக்கப்படும். அது 4 மி.மீ அளவுக்கு மேலாக இருந்தால், புற்றுநோய் அல்லது பாலிப் வளர்ச்சி உள்ளதா எனக் கண்டறிய பயாப்சி பரிசோதனை, டி அண்டு சி நடைமுறை (Dilation and Curettage) ஆகியவை செய்யப்படும். அல்லது உள்நோக்கிக்கருவி (Hysteroscopy) மூலம் ஆய்வு செய்யப்படும்.
ரத்தப்போக்கின் காரணத்தைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றபடி சிகிச்சை செய்யப்படும். மருந்துகள், ஹார்மோன் சிகிச்சை, பிறப்புறுப்பில் க்ரீம் தடவுவது, பிறப்புறுப்பின் வழியே மாத்திரை செலுத்துவது, Hysteroscopy மூலம் சிகிச்சை தருவது, டி அண்டு சி செய்வது, கர்ப்பப்பையை அகற்றுவது என காரணத்துக்கு ஏற்றபடி சிகிச்சைகள் மாறுபடும்.
மாதவிடாய் நின்ற பிறகு உதிரம் வந்தால் அதை அவமானமாகக் கருதக்கூடாது. உடனே மருத்துவரை நாடி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நாமே நமது முதல் நலம்விரும்பியாக இருந்து உடனடி மருத்துவ ஆலோசனை பெறுவோம். நலமாய் வாழ்வோம்.
– டாக்டர் ஸ்ரீகலா பிரசாத்
மகப்பேறு மற்றும் மகளிர் நோய் இயல் மருத்துவர்,
சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்