நுரையீரல் ஆரோக்கியமாய் இல்லாத போது நம்மால் இயல்பான வாழ்க்கையை வாழ இயலாது.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் கோவிட் காலகட்டத்தில் முகக் கவசம் அணிந்து, இயல்பாய்ச் சுவாசிக்க இயலாமல் நாம் திணறியத் திணறலே!
இதற்கே நமது நுரையீரலானது அப்போது ஆரோக்கியமாய் இருந்தது. முகக் கவசம் அணிந்ததற்கே இந்த நிலை என்றால், நாள்பட்ட நுரையீரல் நோயுடன் வாழ்பவர்களின் நிலைகளை யோசிக்கவே சற்று அச்சமாக உள்ளது.
ஆனாலும் அத்தகையவர்கள் எவ்வாறு தங்களுடைய நுரையீரலைக் காத்துக் கொண்டு இயல்பான வாழ்க்கையை வாழலாம் என்று அறிவுறுத்துகிறார் நுரையீரலியல் சிறப்பு மருத்துவர் திரு.எஸ்.ஜெயராமன் அவர்கள். அதனை இக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்வோம்!
நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கான அறிவுரைகள்
- ஆஸ்துமா (Asthma),
- மூச்சுக்குழல் சுருங்க நோய் (Obstructive Pulmonary Disease -COPD),
- நுரையீரல் நுண் மூச்சுக்குழல் சுருங்க நோய் (Interstitial Lung Disease -ILD),
- நுரையீரல் புற்று நோய் (Lung Cancer),
- தூக்கத்தில் மூச்சுத்திணறல் (Sleep Apnea)
போன்ற நோய்கள் வெகு ஆண்டுகளாக இருக்கிறது என்றால் வாழ்நாள் முழுவதுமே அந்நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயமாக மருத்துவரை அணுகிப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
READ ALSO: நடைப்பயிற்சியால் இரத்த குழாய் அடைப்பு சரியாகுமா?
பரிசோதனை அறிக்கையின் படி நோயின் தன்மைக்கேற்ப மருந்துவர் மருந்தின் அளவுகளை அதிகரித்தோ, குறைத்தோ, அதே அளவிளோ எடுத்துக் கொள்ளப் பரிந்துரைப்பார்.
மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக, அளவு மாறாமல் தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது நோயின் தன்மை தீவிரமடையாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.
உதாரணமாக ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் உறிஞ்சி (Inhaler) மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தூக்கத்தில் மூச்சுத்திணறல் (Sleep Apnea) நோய் உள்ளவர்கள் CPAP முகக் கவசம் (CPAP Mask) அணிந்தே உறங்குவார்கள்.
அந்த முகக் கவசக் கருவியானது முறையாகப் பணியாற்றுகிறதா? இல்லையா? என்பதைக் கண்டறிய மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை CPAP முகக் கவசம் (CPAP Mask) கருவியைப் பரிசோதிக்க வேண்டும். அந்தப் பரிசோதனை ‘CPAP அறிக்கை (CPAP Report)’ எனப்படும்.
குறிப்பாக மருத்துவரின் பரிந்துரை இன்றி மருந்துகளை ஒருபோதும் இடையில் நிறுத்தக்கூடாது. இவ்வாறு நிறுத்தும் பட்சத்தில் வேறு விதமான பக்க விளைவுகளை நோயாளிகள் சந்திக்க நேரிடும்.
எனவே நாள்பட்ட நுரையீரல் நோய்களுக்குத் தொடர்ச் சிகிச்சையானது மிக, மிக முக்கியம். காலமுறை மாறாமல் (periodical check-up) பரிசோதனைச் செய்ய வேண்டும்.
READ ALSO: Dental Implant பல்லுக்கு நல்லதா?
மருத்துவரின் ஆலோசனையோடு, ஆலோசனையின் படி மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளும் போது இந்நோய்த் தொற்றினால் ஏற்படக்கூடிய விபரீத விளைவுகளையும், பக்க விளைவுகளையும், அபாயங்களையும் தவிர்த்து இயல்பாய் வாழலாம்.
‘வருமுன் காப்பது சிறப்பு’ என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால் வந்த பிறகு என்ன செய்வது? அப்போதும் ‘நோய்த் தீவிரமடையும் முன் காத்துக் கொள்ளுங்கள்’ என்று நோயாளிகளுக்கு அழைப்பு விடுக்கிறது
நவீன மருத்துவம். ‘வருமுன் காப்பது’ அறிவின் முதல் நிலை என்றால், ‘வந்த பின் காப்பது’ அறிவின் அடுத்த நிலை. எனவே இந்த அழைப்பிற்குச் செவிச் சாய்த்து நோய்யானது தீவிரம் அடையாமல் நம்மைத் தற்காத்துக் கொள்வோம்!