உங்களுக்கு வாக்கிங் போகிற பழக்கம் உண்டு தானே?
முதல் நாள் வாக்கிங் போகும் போது புத்துணர்ச்சியோடு ஒரு முகத்தைப் பார்ப்பீர்கள். ஆனால், அவரை ‘விஷ்’ பண்ண மாட்டீர்கள். அவரும் உங்களுக்கு ‘விஷ்’ பண்ண மாட்டார். இரண்டும் பேரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டே கடந்து செல்வோம். தொடர்ந்து ஒரு வாரம் இப்படியே நடக்கும். பின் அவர் நம்மைப் பார்த்து சிறுபுன்னகை கொள்வார். பதிலுக்கு நாமும் புன்னகைப்போம். இதுபோலத் தொடர்ந்து இரண்டு வாரம் நடக்கிறது. அவர் ‘குட் மார்னிங்’ என்பார். நாமும் பதிலுக்கு ‘குட் மார்னிங்’ சொல்லுவோம். இப்படி இரண்டு மாதம் இடைவிடாது ‘குட் மார்னிங்’ சொன்னவர், இடையில் ஏதோ ஒருநாள் மட்டும் சொல்லாமல் சென்றுவிட்டார். நமக்கு மனது ஒரு மாதிரியாக இருக்கும். ‘என்ன ஆச்சு? ஏன் இந்த ஆளு குட் மார்னிங் சொல்லவில்லை? அவர் நம்மைப் பார்க்கவில்லையா? பார்த்தும் குட் மார்னிங் சொல்லவில்லையா? நம்மைப் பற்றி யாரேனும் அவரிடம் தவறாகக் கூறியிருப்பார்களோ? நாம் இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த உண்மை தெரிந்துவிட்டதோ?’ – இப்படி இல்லாத வேதனை கொள்வோம்.

மற்றவர்கள் நம்மை மதிக்கவில்லை என்று வருகிற கவலை மிகவும் ஆபத்தானது. அதை ஏன் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்? நான் நானாக இருப்பதுதான் முக்கியம். எவன் மதித்தால் என்ன? மதிக்காவிட்டால் எனக்கென்ன? இப்படி வாழ்ந்தால்தான் கடைசி வரை இந்த உலகத்தில் சந்தோஷமாக வாழ முடியும். ‘அவன் என்னை மதிக்கவில்லை, இவன் என்னை மதிக்கவில்லை. அவன் என்னைக் கொண்டாடவில்லை! இவன் என்னைக் கொண்டாடவில்லை? அவன் புரிந்துகொள்ளவில்லையே! இவன் புரிந்துகொள்ளவில்லையே!’ என்று கூறுவதும் எண்ணுவதுமே தவறு.
சில நேரங்களில் பெண்கள் என்னை யாருமே புரிந்துகொள்ளவில்லை’ என்று கூறுவார்கள். ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். யாரும் யாரையும் புரிந்துகொள்ள முடியாது.
நான் என்பது…
எங்களுக்கு திருமணமாகி 45 வருடங்கள் கடந்துவிட்டன. நான் இன்றுவரை ‘வள்ளலா, கஞ்சனா’ என்று என் மனைவிக்கு தெரியாது. ஏனென்றால், எப்போது நான் அள்ளிக் கொடுப்பேன்; எப்போது செலவுகளைப் பற்றிக் கேள்வி கேட்பேன் என்று தெரியாது. ‘இதை ஏன் செலவு செய்தாய்’ என்று கேட்பேன். சில நேரம் 5,000-10,000 கணக்கு குறையும். ‘சரி விடுவிடு’ என்பேன். சில நேரம் 50 ரூபாய் கணக்கில் குறையும். அதற்கு நான் என் மனைவியிடம் ‘நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்? கணக்கு எழுதி வைத்தாயா? கவனித்தாயா? என் பணத்தை ஒழிப்பதற்கென்றே இருக்கிறாயா?’ எனக் கேள்வி மேல் கேள்வி கேட்பேன். ஏனென்றால், அன்றைக்கு நம் மனநிலை எப்படி இருக்கிறதோ, நாமும் அப்படித்தானே இருப்போம்?

எல்லா நாளும், எல்லா நேரத்திலும் மனிதன் ஒரேமாதிரி இருக்கமாட்டான். இதற்குக் காரணம், நீங்கள் ஒரேயொரு மனிதனே அல்ல. உங்கள் டி.என்.ஏ-வில் உங்கள் தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா இருக்கிறார். அம்மா வழி தாத்தா, அப்பா வழி தாத்தா, அம்மா வழி பாட்டி, அப்பா வழி பாட்டி என லட்சக்கணக்கானோர் கூட்டணியாகச் சேர்ந்தவர்கள்தாம் நாம். அப்படியிருக்கும்போது நாம் எப்படி ஒரே மாதிரி நடந்துகொள்ள முடியும்? திடீரென்று தாத்தாவுக்கு தாத்தா நமக்குள் வெளிவருவார். திடீரென்று அப்பாவுக்கு அப்பா வெளியில் வருவார். தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தா கடுங்கோபத்தோடு வெளிவருவார். இவற்றை நம்மால் மாற்ற முடியாது. ஏனென்றால், நமது டி.என்.ஏ-வுக்குள் நம் குணாதிசயங்கள் ஓர் அமைப்பினை உட்கார்ந்திருக்கின்றன. அதாவது பரம்பரை ஜீனிலிருந்து அவை வெளிப்படுகின்றன. அதை மாற்ற முடியாது. ஒரு மனிதன் எல்லா நேரங்களிலும் ஒரேமாதிரியாக இருக்கமாட்டான் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.
சொர்க்கமா? நரகமா?
வாழ்க்கையில் நீங்கள் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
நம்முடைய அலைவரிசையில் யார் இயைந்து வருவார்களோ, அவர்களுடைய நட்பைத் தேடிப்பெற வேண்டும். சொர்க்கம் என்ற சொல் சம்ஸ்கிருதச் சொல் ! நரகம் என்ற சொல் தமிழ்ச் சொல் அல்ல. அதுவும் வடமொழிச் சொல். இதற்கு சம்ஸ்கிருதத்தில் வேர்ச்சொல் வேறு. என் ஆசிரியர் சொர்க்கத்துக்கு அழகான ஒரு விளக்கம் கொடுத்தார்.
“சொர்க்கம் என்றால் ஏதோ மாடமாளிகைகள், கூடகோபுரங்களோடு, அதில் நான்கு பேர் நடனமாடிக்கொண்டு புகைபுகையாக விடுவார்கள் என்பதல்ல… மாறாக, சொர்க்கம் என்பது, ச-வர்க்கம் என்பதாகப் பிரிந்து நம்மோடு ஒத்த அலைவரிசையில் உள்ளவர்கள் மத்தியில் இருப்பதுதான் உண்மையிலேயே சொர்க்கம்” என்றார். ச-வர்க்கம், அதாவது ஒரே மாதிரியான கருத்துடையது.

பிறகு அவர் நரகத்திற்கு ஒரு விளக்கம் கொடுத்தார். நரகம் என்பது ந-ரகம் என்பதாகப் பிரியும். சம்ஸ்கிருதத்தில் ‘ந’ என்றால் இல்லை என்று பொருள். எனவே ந-ரகம் என்றால் எவையெல்லாம் ஒரே ரகத்தில் இல்லையோ அவையெல்லாம் நரகம். நம்முடன் இயைந்துபோகாத மனோநிலையுடன் இருப்பவர்களோடு நாம் எப்படி வாழ்க்கையை நகர்த்துவது? ஒன்று, அனுசரித்துச் செல்ல வேண்டும். இல்லையேல் அதை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும். ஆகையால் நமக்கு நாமே உருவாக்கிக்கொள்வது தான் சொர்க்கமும் நரகமும்.
– சொல்வேந்தர் சுகி சிவம்