இப்பொழுதெல்லாம் தலைவலி என்றாலே நம் நினைவிற்கு வரும் முதல் வார்த்தை சைனசிடிஸ் தான். ஆனால் உண்மையில் சைனசிடிஸ் என்றால் என்ன?
இறைவன் படைப்பில் அனைத்துமே நல்லதிற்காகத் தானே! எனில் இதில் மட்டும் ஏன் எப்பொழுதும் வலி? சிக்கல்? இக்கேள்விகளுக்கான விளக்கத்தை அளிக்கிறார் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் எ. சுதா அவர்கள்.
சைனஸ்:
சைனஸ் என்பது நமது முகத்தில், சுற்றி எலும்புகளால் பாதுகாப்புடன் இருக்கக்கூடிய காற்று நிரப்பப்பட்ட ஒரு குமிழ் உறுப்பு. அதுவும் மூளையை நேரடியாக எந்த ஒரு நோய்த் தொற்றும் தாக்காமல் காக்கக்கூடிய முக்கியமான ஓர் உறுப்பு!
இதில் இயற்கையாகவே ‘மியூகஸ் லேயர்’ என்று அழைக்கப்படும் சளிப் படலம் உள்ளது. இது நாம் சுவாசிக்கும் போது காற்றின் வழியாக நம்முள் செல்லக்கூடிய தூசு, மாசு, நோய்த் தொற்றுகள் போன்றவற்றைச் சளியுடன் உணவுக் குழலைச் சென்றடைய உதவுகிறது.
இவ்வாறாக இது முதல் நிலை நோய்த் தடுப்பானாகச் செயல்படுகிறது! மேலும் இது வாசனை அறிதல் மற்றும் குரலின் தொணிக்கும் உதவுகிறது!
READ ALSO: தூக்கத்தைக் கெடுக்கும் குறட்டைக்கு தீர்வு!
சைனசிடிஸ்:
நுண்ணுயிரிகளான வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகளால் ஏற்படும் சளியாலும் தலைவலி ஏற்படலாம்; உறக்கமின்மை, ஒவ்வாமைப் போன்றவற்றாலும் தலைவலி ஏற்படலாம்;
சைனசிடிஸ்ஸாலும் தலைவலி ஏற்படலாம். அதோ போன்று மேற்கூறிய அனைத்தின் அறிகுறிகளும் பொதுவாக ஒன்றாக இருந்தாலும், சைனசிடிஸ்ஸால் ஏற்படும் தலைவலியில் மூக்கில் இருந்து வெளியேறும் சளிப் பச்சை, மஞ்சள் என்று சற்று நிற வேறுபாடுடன் இருக்கும் என்பதே வேறுபாட்ட அறிகுறி!
மேலும் உமிழ் நீரை விழுங்கும் போதும் கூடச் சளி நாசித் துவாரத்தில் இருந்து தொண்டையை அடையும்! இதுவும் சைனசிடிஸ்ஸின் அறிகுறியே! சளி இன்றி ஏற்படும் தலைவலி சைனசிடிஸ் தலைவலி அல்ல.
கண்டறிதலும், தீர்வுகளும்:
தொடர்ந்து சளி இருக்கும் பட்சத்தில் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகுவது சாலச் சிறந்தது. சளிக்கான காரணம் நுண்ணுயிர் நோய்த் தொற்றா? ஒவ்வாமையா? என்று கண்டறிந்து அதற்கேற்றவாறு நம்மின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
சைனஸால் ஏற்படுகிறது என்றால் அதற்கேற்றச் சிகிச்சையையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் சளியானது நாளடைவில் சைனஸ் பாதையையே அடைத்து விடலாம்; இது சதை வளர்ச்சியை ஏற்படுத்தும்!
மேலும் நீண்ட நாள் பட்டச் சர்க்கரை நோயாளிகளுக்கு இன்வசிவ் ஃபங்கஸ் சைனசிடிஸ் (Invasive Fungal Sinusitis) வரலாம். இதை நாம் தொடர்ந்து புறக்கணிக்கும்போது இதன் அருகில் இருக்கக்கூடிய கண் மற்றும் மூளைப் படலங்களில் இது பரவலாம்!
READ ALSO: நிமோனியா வராமல் இருக்க ஒரே வழி!
இதனை எண்டோஸ்கோப், எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்கலாம். தீர்வுகளாக இதற்கான எளிய மருந்து, மாத்திரைகளை உட்கொண்டாலே போதும். தீவிரமடையும் பட்சத்தில் சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் இதனைச் சரி செய்யலாம்.
இந்த அறுவைச் சிகிச்சையில் உள்ளே அடைபட்டு இருக்கக் கூடிய சீழ் மற்றும் சளி வெளியேறுவதற்கு ஏதுவாகத் துவாரங்கள் பெரிது செய்யப்படும். மாறாக அவை முழுமையாக அகற்றப்படுவது இல்லை. காரணம் நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க சைனஸ் உறுப்புத் தேவைப்படுகிறது!
‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பது பழமொழி; அப்படித்தான் cஎன்ற வெறும் வெற்றுக் காற்றுப்பைக் கூட நம் மூளையைப் பாதுகாக்கக் கூடிய முக்கிய உறுப்பாக உள்ளது என்பதை அறிந்து கொண்ட நாம் அதையும் கவனமுடன் பாதுகாப்போம்! சிகிச்சைகளை எடுத்துக் கொள்வோம்!! சிறப்பாய் வாழ்வோம்!!!